Translate

Thursday, April 16, 2009

பெயர் வைத்தல் :அர்த்தமுள்ள பெயரிடுவோம்

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! சாந்தியும் சமாதானமும் சத்தியத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தார்கள், தோழர்கள் மற்றும் இஸ்லாத்தை பூரணமாகப் பின்பற்றுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக..!

படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும், இன்னும் அந்தப் பொருளையும், அதன் தன்மையையும் பற்றி அறிந்து கொள்வதற்கு இறைவன் விதித்த ஏற்பாடாக பெயரிடும் பழக்கம் இருந்து வருகின்றது. 

திருமறைக் குர்ஆனில், 

நாம் படைக்கப்பட்ட அனைத்தின் பெயர்களையும் ஆதம் (அலை) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம் என்று இறைவன் கூறுகின்றதைப் பார்க்க முடிகின்றது.
(இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்;. (2:31)

ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் அதற்கான அர்த்தம் பொதிந்திருக்கின்றது, இன்னும் அதனைப் பற்றியும், அதன் தன்மை பற்றியும் வேறுபடுத்தி அறிந்து கொள்வதற்கான காரணமும் அதில் பொதிந்திருக்கின்றது. இறைவன் மனித சமுதாயத்திற்கு பெயரிடும் பொழுது அதன் முதல் மனிதருக்கு ஆதம் என்றும் முழு மனித சமுதாயத்தினை இன்ஸான் என்றும் அழைக்கும்படி, மற்ற ஜீவராசிகளிலிருந்து மனிதனை வேறுபடுத்தி அறிவதற்கான முறைமையை ஏற்படுத்தித் தந்திருக்கின்றான்.

இந்த உலக வாழ்க்கையின் அலங்காரங்களான அனைத்திற்கும் அழகுப் பெயர்கள் அர்த்தத்தோடு இடப்படுகின்றன. அதன் பெயரைக் கொண்டு அவற்றின் தன்மைகள் எளிதில் விளங்கி விடுகின்றன. உலகின் சடவாதப் பொருட்களுக்கு மட்டும் இத்தனை கவனம் செலுத்தும் நாம், அதனை விடப் பன்மடங்கு உயர்வான மனிதப் படைப்புக்கு அழகிய அர்த்தமுள்ள பெயரிடுவதில் ஏன் பொடுபோக்காகச் செயல்பட வேண்டும்.

இன்னும் அழகிய பெயர்களையும், அர்த்தமுள்ள பெயர்களையும் இட்டு விட்டால் மட்டும் போதாது, அந்த பெயர்கள் தருகின்ற அர்த்தங்களுக்கு உரித்தானவராகத் தன்னுடைய குழந்தையை மாற்றுவதில் பெற்றோர்களின் பங்கு கணிசமானது.

சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பெயரினைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, அந்தப் பகுதியில் அல்லது தாங்கள் அறிந்த வகையில் அந்தப் பெயரில் யாருமே இருந்திருக்கக் கூடாது, அப்படிப்பட்டதொரு பெயரைத் தேர்ந்தெடுத்து தனது குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள். அதற்காக ஓசைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதன் அர்த்தத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை. வாயில் சொல்வதற்கும், கேட்பதற்கும் இனிமையான பெயராக இருந்தால் சரி, இன்னும் அந்தப் பெயர் புதிய பெயராகவும் இருந்தால் சரி .. என்ற வகையில் பெயரினைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். இதுவும் விரும்பத்தக்கதல்ல.

ஒருவருக்குப் பொருந்தாத இன்னும் கண்ணியக் குறைவான பெயர்களும் தவிர்க்கப்பட வேண்டியவைகளே..! உதாரணமாக, ஷா ஆலம் (பிரபஞ்சத்திற்கு அரசன்), ஜஹாங்கீர் (உலகத்தை வெற்றி கொண்டவர்), ஷா ஜஹான் (உலகத்தின் அரசன்).., அரசமைப்பும் அதன் சட்டங்களும் காலாவதியாகி விட்ட இந்நாளில் இது போன்ற வார்த்தைச் சித்துப் பெயர்கள் தவிர்க்கப்பட வேண்டியவைகளே.., இன்னும் இதில் இணை வைப்பும் கலந்திருக்கும் பொழுது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவையே.

இன்னும், இணை வைத்தலைக் கொண்ட பெயர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அரபுகளல்லாத மக்கள் தங்களுக்கு இருக்கும் குறைவான அல்லது அரபு மொழியை அறிந்திடாத குறையின் காரணமாக, இணைவைப்புச் சாயலைக் கொண்ட பெயர்களை தங்களது குழந்தைகளுக்கு வைத்து விடுகின்றார்கள். உங்களது குழந்தைகளுக்கான பெயர்களைத் தேர்வு செய்யும் பொழுது, அந்தப் பெயர்களுக்கான சரியான அர்த்தம் என்னவென்பது குறித்து முறையாகக் கற்றறிந்த உலமாக்களிடம் கேட்டதன் பின்பும், அதனை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்பு அந்தப் பெயரினை இட்டு அழைப்பது சாலச் சிறந்தது.

No comments: