Translate

Monday, August 31, 2009

மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைகளும் மக்களை குழப்பிப் பார்க்கின்றன. ஆனால், இவற்றுள் இஸ்லாம் என்ற மார்க்கம் - கொள்கை, மிகப் பழமையானதும் அதே நேரம் மிக இளமையானதும் ஆகும்.
பழமையானது - உலகின் முதல் மனிதன் தொடங்கி உலகில் தோன்றிய அத்துணை நபிமார்களும் ஓரிறைக் கொள்கையையே போதித்தனர். ஆதலால், உலகின் பழமையான மார்க்கம் இஸ்லாமே.
இளமையானது - முகமது (ஸல்) அவர்கள் தான் இவ்வுலகிற்கு வந்த இறுதி நபி. அவர்களே முந்தைய நபிமார்களை மெய்ப்படுத்தி, ஓரிறைக் கொள்கையை அழுத்தமாகவும், ஆதாரபூர்வமாகவும் எடுத்து மக்களுக்கு போதித்தார். ஆதலால், இஸ்லாமே அனைத்திலும் இளமையானது.
1400 ஆண்டுகளுக்கு முன்பு, அரேபியப் பாலைவனத்தில் ஊறத் தொடங்கிய இஸ்லாம் எனும் சத்திய ஊற்று, இப்போது உலகம் முழுவதும் கடலென பரவிக் கிடக்கின்றது. வாளால் பரவிய மார்க்கம் என்று ஊடகங்கள் ஓயாது ஒலித்தாலும், அதற்கான பதிலை தன்னகத்தே பிரதிபலித்துக் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது பெரிய மதமாக (மார்க்கம்) இருந்த இஸ்லாம், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க்கமாக கத்தோலிக்க கிறிஸ்துவத்தை தாண்டி வளர்ந்துள்ளது.உலக மக்கள் தொகையில், 19.2 விழுக்காடு முஸ்லிம்கள் எனவும், 17.4 விழுக்காடு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ளபோப்பின் ஆளுகைக்குட்பட்ட வாடிகன் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலக மக்கள் தொகையில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 113 கோடி மக்களாவர்; முஸ்லிம்களின் எண்ணிக்கை 130 கோடி எனவும் அப்பத்திரிகை தெரிவிக்கின்றது. வாடிகன் 2008 க்கான ஆண்டுப்புத்தகம் (Year Book) -இல் வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளி விபரத்தை மேற்கத்திய உலகின் பெரும்பாலான செய்தி ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இச்செய்தி உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் (Fastest-growing religion) என்பதை நமக்கு ஆதாரத்தோடு தருகின்றது.

பல்கேரியாவில் தொழுகை

இத்தாலியில் தொழுகை
இத்தாலியில் தொழுகை
சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. அதாவது ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள்; ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன. பிரபல அமெரிக்க செய்தி ஊடகம் சி.என்.என். (CNN) இந்த தகவலை நமக்குத் தருகின்றது.
குறிப்பாக அமெரிக்காவில் வாழும் கறுப்பின அமெரிக்கர்கள் மத்தியில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகின்றது. சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கும் அவர்கள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுவதை கண்டு வெதும்பி இஸ்லாம் கூறும் சமத்துவத்தை நாடி இஸ்லாத்தை தழுவுகின்றனர்.
அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பாவிலும் இதே நிலைதான். கிறிஸ்துவத்தின் மீது நம்பிக்கை குறைந்து சர்ச்சுகளுக்கு கூட்டம் வருவது குறைந்து கொண்டே செல்கின்றது. இங்கிலாந்தில், சர்ச்சுகள் மூடப்பட்டுபார்களாக மாற்றப்படுகின்றன; அதே நேரம் பல சர்ச்சுகள் முஸ்லிம்களால் முழு நேர வாடகைக்கு எடுக்கப்பட்டு பள்ளிவாசல்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாமே அதுமாதிரியான பள்ளிவாசலில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் சென்றிருக்கும் போது, அங்கே ஜூம்ஆ தொழுதுள்ளோம்.
இஸ்லாம் தனி மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பினும், ஓர் எல்லைக்குட்பட்டே வழங்கி உள்ளது; தனி மனித உரிமைகளை விட சமுதாயத்தின் உரிமைகளுக்கு முதலிடம் கொடுக்கின்றது. ஆனால், மேற்கத்திய உலகமோ சமுதாயத்தின் உரிமைகளை கண்டு கொள்வதே இல்லை. இதனை கீழ்க்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் விளங்கலாம். ஒரு பெண் தனக்குப் பிடித்த ஆடையை அணிவது அவளுடைய தனி மனித உரிமை என்கிறது மேற்கு. அது, உடலின் பாகங்களை அசிங்கமாக வெளிப்படுத்தினாலும் சரியே; ஆனால், இஸ்லாமோ கீழ்த்தரமாக ஆடை அணியும் பெண்ணால், சமுதாயத்திற்கு தீங்கு விளையும்; தவறான செயல்களுக்கு தூண்டுதலாக அமையும்; அதனால், அப்பெண்ணின் தனிமனித உரிமையும் பாதிக்கப்படும்; ஆகவே மறைக்க வேண்டிய பாகங்கள் மறைக்கப்பட்டு, ஒரு பெண் இயங்குவதில் தவறில்லை என்று பொது நன்மையை நாடி கூறுகின்றது. இதே போன்றே ஓரினச் சேர்க்கையை ஆதரிப்போர் இதனை தனி மனித உரிமை என்கின்றனர்; ஆனால், இதனால் சமூக கட்டமைப்பு கெட்டு, சமுதாய ஒழுக்கம் தவறி, மாபெரும் அநீதி இழைக்கப்படுவதை அவர்கள் உணர்வதில்லை. ஆனால், இஸ்லாம் ஓரினச் சேர்க்கையை வேரோடு சாய்க்கின்றது. சமூக உரிமைகளை மதிக்கும் இஸ்லாத்தின் இக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மேற்கத்திய உலகம் மிக வேகமாக இஸ்லாத்தினை நோக்கி நெருங்கி வந்து கொண்டுள்ளது.

ஃபிரான்ஸில் ஹிஜாஜுபுக்கான போராட்டக் காட்சி)
இவ்வாறு இஸ்லாத்தினை நோக்கி முஸ்லிமல்லாதோர் வரும் இவ்வேளையில், மேற்கத்திய முஸ்லிம்களிடையேயும் வெகுவாக விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஃபிரான்ஸில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய முறைப்படி, தலையை மறைத்துக் கொண்டு (Headscarves) வருவதைத் தடுக்க சட்டம் இயற்றிய போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் இறங்கி தமது உரிமைக்குரிலை எழுப்பினர். பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளான எகிப்து, குவைத், ஈராக், லெபனான் மட்டுமன்றி மேற்கத்திய உலகம் முழுமையாக, ஸ்வீடன், கனடா, பிரிட்டன், அமெரிக்கா என பல நாடுகளிலும் முஸ்லிம்கள் குறிப்பாக பெண்கள் போராட்டங்கள் நடத்தினர்.
நமக்குத் தேவை மாற்றம்” – (Change We need) என்ற தேர்தல் கோஷத்தை முன் வைத்து, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பராக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த கறுப்பின முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த தந்தைக்கும், வெள்ளை அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவராவார் இவர். இவர் முஸ்லிமாக வாழவில்லை எனினும், முஸ்லிம்களை எல்லாம் தீவிரவாதிகளாக சித்தரித்த மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவிற்கு முஸ்லிம் பின்னணியிலிருந்து, அதுவும் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் முதல் குடிமகனாக ஆகியுள்ள நிகழ்வு கண்டிப்பாக மாற்றம் ஏற்பட்டுள்ளதையே காட்டுகின்றது.

(நீதிமன்றம் மூலம் ஹிஜாம் அணிய போராடி வெற்றி பெற்ற இங்கிலாந்து முஸ்லிம் பெண் சபீனா பேகம்)
முஹம்மது (ஸல்) -வைப் போன்று ஒருவர் இவ்வுலகின் சர்வாதிகாரியாக பொறுப்பேற்பாரானால், உலகின் அனைத்து பிரசினைகளையும் களைவதில் வெற்றி பெற்று, உலக மக்கள் வெகுவாக எதிர்பார்க்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியும் என்ற ஜார்ஜ் பெர்னாட் ஷா வின் கூற்றுக்கிணங்க, இன்ஷா அல்லாஹ், அமெரிக்க வெள்ளை மாளிகையை ஒரு சீரிய இஸ்லாமிய சிந்தனையுள்ள முஸ்லிம் ஒருவர் அலங்கரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

Saturday, August 29, 2009

பெருமானாரின் பத்துக் கட்டளைகள்

அஸ்ஸலாமு அலைக்கும்! வரஹ்மத்துல்லாஹ்.


1417 ஆண்டுகளுக்கு முன் …. ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு….

பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-

அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது.
இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்
அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்...
5.மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன்... அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.

முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன!
இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!
7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.

ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.

8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)

9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!
இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.
10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?
'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!'
அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.
இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!

இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறiவா!நீயே இதற்கு சாட்சி!
இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.
மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள்... ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.
(ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்.

Monday, August 17, 2009

அனைத்து உயிரினமும் நீரிலிருந்து தோன்றின


أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاء كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ


நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் கா·பிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? 21:30 سورة النور

இந்த திருமறை வசனத்தை சற்று ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள். நமது உடலிலுள்ள உயிரணுவின் (Cell) உள்ளீடாய் விளங்கும் (Cytoplasm) 80% சதவிகிதம் தண்ணீரையே அடிப்படையாய் கொண்டுள்ளது. மேலும் பெரும்பாலான உயிரினங்கள் 50% முதல் 90% சதவிகிதம் வரை தண்ணீரையே அடிப்படையாய் கொண்டுள்ளது. ஒவ்வொரு உயிரினமும் நீறைக் கொண்டே படைக்கப்பட்டுள்ளது என்பதை 14 நூற்றாண்டுகளுக்கு எந்த ஒரு மனிதனும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியுமா?

இன்னும் தண்ணீருக்கே தட்டுப்பாடு உள்ள நிலையில் அரேபிய பாலைப் பெருவெளியில் வசிக்கும் ஓர் அரேபியன் இவ்வாறு எண்ணிப் பார்த்திருக்க முடியுமா?

விலங்கினங்களை நீரிலிருந்தே படைத்ததாக பின்வரும் வசனம் எடுத்துக்கூறுகிறது.

وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِن مَّاء فَمِنْهُم مَّن يَمْشِي عَلَى بَطْنِهِ وَمِنْهُم مَّن يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُم مَّن يَمْشِي عَلَى أَرْبَعٍ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاء إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ


மேலும், எல்லா உயிர்ப்பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். 24:45 سورة الفرقان

அதே போன்று பின்வரும் வசனமும் நீரிலிருந்தே மனிதனின் படைப்பு தொடங்கியுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.

وَهُوَ الَّذِي خَلَقَ مِنَ الْمَاء بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَصِهْرًا وَكَانَ رَبُّكَ قَدِيرًا


இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன். 25:54

Sunday, August 16, 2009

நோன்பை முறிப்பவையும் முறிக்காதவையும்

முன்னுரை

நோன்பை சில செயல்கள் முறிக்கும் சில செயல்கள் முறிக்காது. அதோடு சில செயல்களை தவிர்ந்தும் இருக்க வேண்டும். அவற்றையும் தெரிந்து கொண்டால் தான் நோன்பின் முழுமையான பலனை அடைந்து கொள்ள முடியும்.


1. உண்பதும் பருகுவதும்:

'இன்னும் ஃபஜ்ர் எனும் வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள் பருகுங்கள். பின்னர் இரவு வரும் வரை நோன்பை முழுமையாக்குங்கள்' (அல்குர்ஆன் 2:187)

ஃபஜ்ரு வரை உண்ணலாம் பருகலாம் என்பதிலிருந்து அதற்கு மேல் உண்டாலோ பருகினாலோ நோன்பு முறிந்து விடும் என்பதை விளங்கலாம்.

2. தாம்பத்திய உறவு கொள்வது:

'நோன்புகால இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது' (அல்குர்ஆன் 2:187)

இந்த வசனம் நோன்புகால இரவில் உடலுறவில் ஈடுபட அனுமதிக்கிறது, பகலில் அனுமதி இல்லை என்பதை தெரிவிக்கிறது. அதாவது பகலில் உடலுறவில் ஈடுபட்டால் நோன்பு முறியும்.


3. பொய்யும் செயலும்:

'யார் பொய்யான பேச்சையோ பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் குடிப்பையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி1903, அபூதாவூது 2355)

நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் இறையச்சம் உடையவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக என்றிருக்கும் போது பொய்யும் நடிப்பும் இதற்கு இசைவான செயல்கள் அல்ல. அதனால் நோன்பு நோற்பவர் இவற்றை விட வேண்டும். இவற்றை விடாதவர் நோன்பின் பயனை அடைந்தவராக கருதப்பட மாட்டார்.

4. கெட்ட வார்த்தையும் சண்டையிடுவதும்:

'உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 1904, முஸ்லிம் 2118, அபூதாவூது 2356)

நோன்பு நோற்பவர் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதையும் சண்டை சச்சரவு செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். நோன்பின் போது எடுக்கும் பயிற்சி அதன் பின்வரும் நாட்களிலும் தொடர வேண்டும்.


5. மறதியாக உண்பதும் குடிப்பதும்:

'ஒருவர் நோன்பாளியாக இருக்கும் போது மறந்து சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான்' நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, திர்மிதி, இப்னுமாஜா)

'களாச் செய்ய வேண்டியதில்லை' என்று தாரகுத்னி, பைஹக்கீ, ஹாக்கிம் ஆகிய நுல்களில் பதிவாகியுள்ளது.

உண்டாலும் குடித்தாலும் நோன்பு முறிந்து விடும் ஆனாலும் மறதியாக உண்டாலும் குடித்தாலும் நோன்பு முறியாது. நினைவுக்கு வந்ததும் உண்பதையும் குடிப்பதையும் நிறுத்தி விட்டு தொடர்ந்து நோன்பாக இருந்து கொள்ள வேண்டும்.

6. மனைவியை முத்தமிடுவது:

'நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு தம் மனைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!' என்று சொல்லி விட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள். (நூல்: புகாரி 1928)

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது முத்தமிடுவார்கள், கட்டிப்பிடிப்பார்கள். ஏனெனில் அவர்கள் தம் உணர்வுகளை அவர்கள் அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)

உணர்களை கட்டுப்படுத்திக் கொள்பவர்கள் நோன்பிருக்கும் போது மனைவியை முத்தமிடலாம் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.

7. தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்படுதல்:

நபி (ஸல்) அவர்கள் உடலுறவின் மூலம் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள். ரமளானில் நோன்பு நோற்பார்கள். (அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி), ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மது)

இந்த ஹதீஸ் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டு குளிக்காமல் கூட நோன்பு வைத்துக் கொண்டதை தெரிவிக்கிறது. அதே போல தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டு குளிப்புக் கடமையானவருக்கும் இதே ஹதீஸ் பொருந்தும். நோன்பு முறியாது.

'வாந்தியோ, ஸ்கலிதமோ, இத்தம் குத்தி எடுப்பதோ ஒருவரது நோன்பை முறிக்காது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு நபித்தோழர் அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூது 2370)

8. குளிப்பது:

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மது, அபூதாவூது 2359, நஸயீ)

9. பல் துலக்குவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது என்னால் எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். (அறிவிப்பவர்: ஆமிர் பின் ரபிஆ (ரலி), நூற்கள்: அபூதாவூது, திர்மிதி)

10. வாய் கொப்பளிப்பது:

'...பின்பு ஒரே கையில் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள்....' இதுதான் நபி (ஸல்) அவர்களின் உளூ என்று அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: புகாரி 1911, இப்னுமாஜா 405)

ஒலுவின் போது வாய் கொப்பளிக்க வேண்டும் என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளை. அது நோன்பு நோற்றிருந்தாலும் சரி, நோன்பு வைக்காமல் இருந்தாலும் சரி, ஒலுவின் போது வாய் கொப்பளிக்க வேண்டும்.

11. மூக்குக்கு தண்ணீர் செலுத்துதல்:

'நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் சமயத்தில் தவிர மற்ற சமயங்களில் மூக்கை நன்றாக தண்ணீர் விட்டு சுத்தம் செய்யுங்கள்' என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: லகீத் பின் ஸபுரா (ரலி), நூற்கள்: நஸயீ, அபூதாவூது 2360, திர்மிதி 718, இப்னுமாஜா 407)

நோன்பு நோற்றிருக்கும் போது மூக்குக்கு தண்ணீர் செலுத்தி சுத்தம் செய்தால் தண்ணீர் தொண்டையை அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

12. எச்சிலை விழுங்குவது:

உண்பதும் குடிப்பதும் இல்லறத்தில் ஈடுபடுவதும் தான் நோன்பை முறிக்கும், எச்சிலை விழுங்குவது நோன்பை முறிக்காது. ஏனெனில் அது உணவோ குடிப்போ இல்லை.

13. உணவை ருசி பார்ப்பது:

நோன்பாளி உண்பதற்குத் தான் தடுக்கப்பட்டுள்ளார். உணவு சமைப்பவர்கள் அந்த உணவை ருசி பார்க்க தடை இல்லை. எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கிய நபி (ஸல்) அவர்களின் ஹதீஸே இதற்கும் ஆதாரமாகும். பற்குச்சியில் ஒரு வகை ருசி இருக்கத்தான் செய்கிறது. அந்த ருசியை நாக்கு உணர்வது நோன்பை முறிக்காது என்றால் உணவின் ருசியும் நோன்பை முறிக்காது. ஆனால் ருசி பார்த்த உணவை துப்பிவிட வேண்டும்.

14. இரத்த தானம் செய்வது:

'நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார். (நூல்: புகாரி 1939)

';;;...நோன்பாளி இரத்தம் கொடுப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்' (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: தாரகுத்னீ)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்' என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஸாபித் அல் புன்னானி (ரலி), நூல்: புகாரி)

மருத்துவ சோதனைக்காகவும் உயிர்காக்கும் நோக்கத்தில் இரத்த தானம் செய்வதற்கும் இந்த ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது.

15. வாந்தி எடுப்பது:

'தானாக ஒருவருக்கு வாந்தி வந்தால் அவர் (நோன்பைக்) களாச் செய்ய வேண்டியதில்லை. யார் வேண்டுமென்றே வாந்தி எடுக்கிறாரோ அவர் களாச் செய்ய வேண்டும்' என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: அஹ்மது, அபூதாவூது, திர்மிதி, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், தாரகுத்னி, ஹாக்கிம்)

16. ஊசி போட்டுக் கொள்வது:

நோயாளி நோன்பை விட்டு விட்டு வேறோரு நாளில் அதை களாச் செய்ய வேண்டும் என்பதற்கு அனுமதி இருந்தாலும், ஊசி போட்டுக் கொண்டால் அல்லது மருந்து தடவிக் கொள்வது போன்ற சிறு மருத்துவ உதவி அளித்தால் நோய் நீங்கி விடும் என்ற நிலையில் இருப்பவர்கள் நோன்பிருந்து கொண்டே செய்து கொள்ளலாம். ஆனால் மாத்திரை டானிக் போன்ற மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் நோன்பு திறந்த பிறகு மருந்துகளை உட்கொள்ள வேண்டும் அல்லது நோன்பை விட்டு விட்டு களாச் செய்ய வேண்டும்.

17. சொட்டு மருந்து இட்டுக் கொள்வது:

நோன்பிருந்து கொண்டே கண், காது, மூக்கு போன்ற உறுப்புகளுக்கு சொட்டு மருந்து இட்டுக் கொள்ள முடியும் அதனால் நோன்பு முறியாது. மூக்குக்கு இடும் சொட்டு மருந்து தொண்டையை கடந்து விடும் என்றிருந்தால் அதை தவிர்ப்பது நல்லது. நோன்பு திறந்த பிறகு அதை இட்டுக் கொள்ள வேண்டும்.

முடிவுரை

நோன்பு வைப்பவர்களுக்கு இதுபோன்ற செயல்களினால் நோன்பு முறிந்து விட்டதோ என்ற சந்தேகம் அடிக்கடி நிகழ்வதை நாம் கண்டுவருகிறோம். அவற்றை நாம் இங்கே பட்டியல் இட்டுள்ளோம். இவற்றை அறிந்து நோன்பை பூரணமாக நிறைவேற்றவோமாக!