Translate

Sunday, January 22, 2017

குற்றங்கள் குறைய வேண்டுமானால் கடுமையான தண்டனைகள் அவசியம்: - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை

(இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்)

இஸ்லாமிய மார்க்கம் காட்டுமிராண்டிகளின் மார்க்கம்; அதில் கூறப்பட்டுள்ள சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானவை; பிற்போக்கானவை; மனித தன்மையற்ற சட்டங்கள் என்றெல்லாம் யார் யார் பேசினார்களோ அவர்களது வாய்களில் இருந்தே, “குற்றங்கள் குறைய வேண்டுமானால் கடுமையான தண்டனைகள் அவசியம்” என்ற இஸ்லாத்தின் நிலைப்பாட்டை வல்ல இறைவன் வரவைத்துள்ளான். இஸ்லாம் கூறும் இந்த நிலைப்பாட்டை மத்திய அரசிற்கு பரிந்துரை செய்து ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அது குறித்த  விபரங்கள் இதோ:

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்ற சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

காப்பகம்:

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜான்சன். இவர், தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் காப்பகத்துக்கு கடந்த2011–ம் ஆண்டு வந்துள்ளார். அப்போது அந்த காப்பகத்தில் தங்கியிருந்து 9–ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் ஒருவனுக்கு நல்ல கல்வி வழங்குவதாக கூறி, அவனை தன்னுடன் டெல்லிக்கு வரும்படி கூறியுள்ளார். அந்த மாணவனின் தாயாருக்கு பணமும் கொடுத்துள்ளார். பின்னர், தாயின் சம்மதத்துடன், அந்த மாணவனை தன்னுடன் டெல்லிக்கு கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் 15–ந் தேதி அழைத்து சென்றுள்ளார்.

டெல்லியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. சுற்றுலா விடுதியில், ஒரு அறையில் அந்த மாணவனுடன் ஜான்சன் தங்கியுள்ளார். அப்போது, அந்த மாணவனுக்கு ‘செக்ஸ்’ தொந்தரவு செய்து, வலுகட்டாயமாக இயற்கைக்கு மாறாக உறவு கொண்டுள்ளார்.

போலீசில் புகார்:

பின்னர், அவனை டெல்லியிலேயே விட்டு விட்டு, லண்டன் சென்று விட்டார். அந்த மாணவன் பலரது உதவியுடன் சென்னைக்கு திரும்பி வந்துள்ளான்.

அவனிடம் குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் விசாரணை நடத்தியபோது, பாலியல் கொடுமை நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, 2011–ம் ஆண்டு ஆகஸ்டு 18–ந் தேதி போலீசில், குழந்தைகள் நல அமைப்பு நிர்வாகிகள் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செயதுள்ளனர். ஜான்சனுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்பதால், அவருக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. பின்னர்,இந்த பிடிவாரண்டு அடிப்படையில் ஜான்சன் தேடப்படும் நபர் என்று இன்டர்போல் போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.

அதிகாரம் இல்லை:

இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கையும், தேடப்படும் நபர் என்று சர்வதேச போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், ஜான்சன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். பின்னர், அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–



உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 9–ந் தேதி டெல்லியில், ஒரு குழந்தையை சிலர் கூட்டாக சேர்ந்து கற்பழித்துள்ளனர். இப்படிப்பட்ட நபர்களுக்கு இருக்கிற சட்டத்தில் வழங்கப்படும் தண்டனையுடன், கூடுதலாக ‘அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்றும்’தண்டனையையும் வழங்கவேண்டும்.

இப்படி ஒரு கருத்தை இந்த ஐகோர்ட்டு தெரிவிப்பதை கண்டிப்பாக பலர் எதிர்பார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். இந்த கருத்து காட்டுமிராண்டித்தனமானது, கொடூரமானது, கற்காலத்துக்கு அழைத்து செல்வது, மனித தன்மை இல்லாதது என்றெல்லாம் கூறுவார்கள். இது எனக்கு நன்றாக தெரியும்.

ஆனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.2012–ம் ஆண்டு 38 ஆயிரத்து 172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2013–ம் ஆண்டு 58 ஆயிரத்து 224வழக்குகளாகவும், 2014–ம் ஆண்டு 89 ஆயிரத்து 423 வழக்குகளாகவும் அதிகரித்துள்ளது.

இந்த கொடூர குற்றங்களை செய்பவர்களுக்கு, கொடூரமான தண்டனை வழங்கினால்தான், குற்றங்களை தடுக்க முடியும். ஆனால், மனித உரிமை ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், கண்டிப்பாக கூச்சல் போடுவார்கள் என்பது நன்றாக எனக்கு தெரியும்.

ஆனால், அப்படிப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள், குற்றவாளிகளுக்கு ஏற்படும் மனித உரிமை மீறல்களை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்களையும் அவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

அறிவிப்புக்கு தடை:

மாஜிஸ்திரேட்டு முன்பு மாணவன் அளித்த ரகசிய வாக்குமூலத்தில், தன்னை ஜான்சன் பாலியல் கொடுமை செய்தார் என்று கூறியுள்ளார். எனவே, ஜான்சன் மீதான குற்றச்சாட்டின் உண்மை நிலவரம், நீதிமன்றம் மேற்கொள்ளும் விசாரணையின் மூலமே தெரியவரும். எனவே, ஜான்சன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. அதே நேரம், அவரை தேடப்படும் நபராக சர்வதேச போலீசார் அறிவித்துள்ளதால், அவர் தன் மீதான வழக்கை எதிர்கொள்ள இந்தியாவுக்கு வர முடியவில்லை என்று கூறியுள்ளார். எனவே, தேடப்படும் நபர் என்ற அறிவிப்புக்கு மட்டும் தடை விதிக்கின்றேன். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

காட்டுமிராண்டி தண்டனை:

கற்பழிப்பு குற்றத்துக்கு ஆண்மை அகற்றும் தண்டனை காட்டுமிராண்டித்தனமான சட்டமாக இருக்கலாம். ஆனால்,காட்டுமிராண்டித்தமான குற்றங்களுக்கு, காட்டுமிராண்டித்தனமான தண்டனைத்தான் நிச்சயமாக வழங்க வேண்டும். ஆனால், பலர் இதை ஏற்க மாட்டார்கள்.

ஆனால், சமுதாயத்தில் நடைபெறும் கொடூர குற்றங்களை தடுக்க இதுபோன்ற தண்டனையை மக்கள் ஆதரிக்கவேண்டும். கடுமையான தண்டனைகள்தான், குற்றவாளிகளுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும். எனவே,இதுகுறித்து கொள்கை முடிவுகளை எடுக்கவேண்டியவர்கள், இதுகுறித்து ஆலோசிக்கவேண்டும். இந்த கடுமையான தண்டனை சமுதாயத்துக்கு தேவைப்படுகிறது. மனித உரிமைகள் என்று காரணம் கூறி, இந்த கடுமையான தண்டனையை ஒதுக்கி வைக்கக்கூடாது. போலாந்து, ரஷியா, அமெரிக்காவில் கலிபோர்னியா உள்ளிட்ட 9மாகாணங்களில் இதுபோன்ற தண்டனை வழங்கப்படுகிறது. ஆசியா கண்டத்தில் தென்கொரியா நாடு இந்த தண்டனையை அமல்படுத்தியுள்ளது. எனவே, வெளிநாட்டினரால், இந்திய குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சம்பவம் அதிகரித்துள்ளதால், இந்த கடுமையான தண்டனை கொண்டு வரவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.

தற்போது பெற்றோர் இருவரும் பணிக்கு செல்வதால், குழந்தைகள் மூன்றாம் நபர் பராமரிப்பில் விட்டு செல்லவேண்டியதுள்ளது. எனவே, குழந்தைகளை பராமரிக்க பெற்றோரில் ஒருவர் வீட்டில் இருந்து கவனித்து கொள்ளவேண்டும். மேலும் குழந்தைகளின் நலன் கருதி கூட்டுக்குடும்ப முறையை மீண்டும் கொண்டு வர பெற்றோர்கள் ஆலோசிக்க வேண்டும்.

பாலியல் குற்றங்கள் மது போன்ற போதை பழக்கங்களினால்தான் அதிக அளவு நடைபெறுகின்றன. எனவே,மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விரும்பிய, மதுவிலக்கை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

ஆண்மை அகற்றுதல்:

இந்த பரிந்துரைகளை தவிர, கீழ் கண்ட உத்தரவுகளை மத்திய மாநில அரசுகளுக்கு பிறப்பிக்கின்றேன்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இருக்கின்ற சட்டத்தில் உள்ள தண்டனைகள் போக, கூடுதல் தண்டனையாக ‘அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை அகற்றும் முறையை’ சட்டமாக கொண்டு வர மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதாவது குற்றங்களைச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையைப் பார்த்து விட்டு மனிதாபிமானம் பேசக்கூடியவர்கள்; பாதிக்கப்பட்டவரது நிலையில் இருந்து பாருங்கள்; அவர்களுக்குத்தான் மனிதாபிமானம் காட்ட வேண்டும் என்று கூறியுள்ள கருத்துக்களை போலி மனிதநேயம் பேசுவோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும் அவரது தீர்ப்பில், “பெற்றோர் இருவரும் பணிக்கு செல்வதால், குழந்தைகள் மூன்றாம் நபர் பராமரிப்பில் விட்டு செல்லவேண்டியதுள்ளது. எனவே, குழந்தைகளை பராமரிக்க பெற்றோரில் ஒருவர் வீட்டில் இருந்து கவனித்து கொள்ளவேண்டும்.” என்று கூறியுள்ள வரிகள் இன்னும் நாம் ஆழமாக சிந்திக்க கடமைப்பட்டவை.

ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலைக்குச் செல்வதால் ஏற்படும் பிரச்சனைகள் கொஞ்ச நெஞ்சமல்ல; ஆண்கள் தான் பெண்களுக்கு பொறுப்பாளர்கள்; அவர்களை நிர்வகிக்கக் கூடியவர்கள் என்று இஸ்லாம் கூறும் தீர்ப்பை அப்படியே மேலும் வழிமொழிந்துள்ளார்.

என்னதான் இஸ்லாத்தை எதிர்த்து எவ்வளவு குட்டிக்கரணங்கள் அடித்தாலும் இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்கள் தான் மனித வாழ்வில் நடக்கும் அத்துனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு என்பதை நாளுக்கு நாள் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது.

அல்ஹம்துலில்லாஹ்....

Thanks OnlinePJ