Translate

Showing posts with label காலம். Show all posts
Showing posts with label காலம். Show all posts

Saturday, March 21, 2009

காலம் சொல்லும் பாடம்

காலம் சொல்லும் பாடம்

ரஃபிக் ஜக்கரியா - ஐக்கிய அமீரகம்

வானத்திலிருந்து மழையை இறக்கி அதனைக்கொண்டு பூமியை அது இறந்ததன் பின் உயிர்ப்;பவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், அல்லாஹ் என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள், (அதற்கு) 'புகழைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது என்று நீர் கூறுவீராக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள். சங்கைமிகு அல்குர்ஆன் 29:63

கடந்த சில வாரங்களாக ஐக்கிய அமீரகத்தின் பகுதிகளான துபாய், அபுதாபி, அஜ்மான், ஷார்ஜா, அல்அய்ன், ராஷ்அல்கைமா, உம்மல் குய்ன், ஃபுஜைரா போன்ற இடங்களிலும் மற்றும் மஸ்கட், கத்தார் போன்ற நாடுகளில் நல்ல மழை பெய்தது என்பதினை நாம் அறிந்து இருப்போம். அல்ஹம்துலில்லாஹ்..

அல்லாஹ்வின் நாட்டப்படி மொஹரம் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து இந்த மழையானது பெய்ய ஆரம்பித்தது. இதனால் அமீரக சாலைகள் மழை நீரால் மிதந்தது. நம்ம ஊரில் மழை பெய்தால் மழை தண்ணீர் செல்வதற்கு உரிய வழிமுறைகள் இருக்கிறது. ஆனால் வளைகுடா நாடுகளில் மழை பெய்தால் தண்ணீர் செல்வதற்கு உரிய எந்த வழிமுறைகளையும் அரசாங்கம் செய்யவில்லை. ஆகையால் மழை நீர் வடிகால் வசதியில்லாத காரணத்தால் ஆங்காங்கே நீர் தேக்கம் ஏற்பட்டது இதனால் பல வாகனங்கள் அங்கேங்கே சாலைகளில் நின்று விட்டது. சாலைகளில் வாகனங்கள் நின்றதால் போக்குவரத்துகள் பல மணி நேரங்கள் பாதிக்கப்பட்டு பல நிறுவனங்களில் பணிகள் முடக்கப்பட்டது. சென்ற வாரம் அமீரகத்தில் மழையின் காரணத்தால் பள்ளி மற்றும் நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறையும் விடப்பட்டது. இதனால் பல இழப்பீடுகள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்பட்டது. தற்போது எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு கடுமையான குளிர் பிரதேசம் போல் அமீரக நாடுகள் ஆகிவிட்டன என்பதினையும் இங்குள்ளவர்கள் அறிவார்கள். அமீரக பகுதிகளில் 6 டீகிரி செல்ஷியஸ் வரை குளிரானது இருந்தது. 

சில வாரங்கள் பெய்த மழைக்கே பல திர்ஹம் பாதிப்புள்ள பொருட்கள் நஷ்டம் அடைந்து விட்டன. அத்துடன் மண்ணுடன் கலந்து 38 – 52 knots என்ற அளவில் பாலைவனக்காற்றும் அமீரகம் முழுவதும் அடித்தது என்பதினை பலர் அறிவார்கள். இதனால் இங்கு பல பாதிப்புகள் ஏற்பட்டன. மழை மற்றும் பாலைவனக்காற்றினால் தரையில் மட்டும் பாதிப்பு இல்லை. கடலிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. எப்படியென்றால் கடல்கொந்தளிப்போ, சுனாமியோ, கொனோவோ (சில மாதங்களுக்கு முன்பு மஸ்கட் நாட்டில் கடல் அலைகள் வேகமாக வீசி அதனால் கடல் நீர் ஊருக்குள் வந்து பல பாதிப்புகளை ஏற்படுத்தியது அதற்கு பெயர் - கொனோ என்று அழைத்தார்கள்) ஏற்படவில்லை. அல்லாஹ்வின் கோபப்பார்வையால் 1.2.08 அன்று வெள்ளிக்கிழமையன்று மண்ணுடன் கலந்த பயங்கர குளிர் காற்றானது அமீரக எங்கும் அடித்தது. அமீரக நாட்டில் மட்டுமல்லாமல் ஐரோப்பா நாடுகளிலும் தற்போது கடும் குளிர் காற்று, பனிமூட்டம், பனி மழையானது பொழிந்துக்கொண்டு இருக்கிறது. இதனால் அமெரிக்கா, லண்டன், இல்லினாய்ஸ், மிசிசிபி, சீனா, காஷ்மீர் போன்ற நாடுகளில் மிகப்பெரும் பொருட் சேதங்களும், உயிர் சேதங்களும் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. 

சென்ற சில நாட்களாக அமீரகத்தின் பல பகுதிகளில் இலேசாக நில நடுக்கங்கள் அபுதாபி, ஷார்ஜா, ஃபுஜைரா, மாஷாஃபி, டிப்பா, கொர்பகான் மற்றும் உள்ள பகுதிகளில் ஏற்பட்டது. இதனால் சில பாதிப்புகள் அமீரக பகுதிகளில் ஏற்பட்டு உள்ளன. 3.1.08 அன்று ஆப்ரிக்கா நாட்டில் காங்கோ மற்றும் ரவண்டா போன்ற பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டு 34 உயிர்கள் பிரிந்தன. பல பொருட் சேதங்களும் அந்நாட்டில் ஏற்பட்டது.

தொலைதொடர்பு வசதிக்காக வேண்டி அமீரகம் மற்றும் மஸ்கட் நாடுகளில் இடையே கடலுக்கு அடியில் போடப்பட்ட (Under Sea Cable)  இணைப்புகளானது 1.2.08 அன்று துண்டிக்கப்பட்டன. இந்த துண்டிப்பானது துபாய் நாட்டிலிருந்து 55 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடல் பகுதியில் ஏற்பட்டது. ஆகையால் துபாய் நாட்டிலிலும் மற்றும் ஓமன் நாட்டிலும் பல பகுதிகளில் தொலைதொடர்புகள், இணையத்தளம் வசதிகள் மற்றும் உள்ள தொலைத்தொடர்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. கடலுக்கு அடியில் தொலைதொடர்பு இணைப்பு பணிகளை செய்து இருப்பவர்கள் பிரிட்டன் நாட்டினை சார்ந்த FLAG – FALCON  என்ற நிறுவனங்களாகும். இந்த நிறுவனத்தினை சார்ந்தவர்கள் மேலும் குறிப்பிடுகையில், எகிப்து நாடு மற்றும் இத்தாலி நாடுகளிடையே உள்ள இதுபோல் உள்ள இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. எகிப்து நாட்டில் அலக்ஸாண்டாரியா என்ற இடத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. அமீரகத்தில் உள்ள ETISALAT மற்றும் DU தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த நிறுவனத்துடன் தொடர்புகள் செய்து இருப்பதால் இந்த இரண்டு நிறுவனங்களின் தொலைபேசி இணைப்புகளும் இதனால் பல பாதிப்புகளை அடைந்தது என்றார்கள். 

இந்த கடல் மார்க்கத்தில் ஏற்பட்ட துண்டிப்பால் அமீரக நாட்டில் மட்டும் 1.7 மில்லியன் இணையத்தளம் உபயோகப்படுத்துவோர் இணையத்தளம் தொடர்பு இல்லாமல் பாதிக்கப்பட்டனர். மற்றும் 60 மில்லியன் மக்கள் இந்தியாவிலும், 12 மில்லியன் மக்கள் பாகிஸ்தானிலும், 6 மில்லியன் மக்கள் எகிப்து நாட்டிலும், 4.7 மில்லியன் மக்கள் செளதி அரேபியாவிலும் பாதிக்கப்பட்டனர் என்பதினை அமீரக ஊடகமான கலீஜ் டைம்ஸ் தன்னுடைய 5.2.08 அன்றைய பத்திரிகையில் முதல் பக்க செய்தியாக வெளியிட்டு இருந்தது. 

துபாய் நாட்டில் 11வது சுற்று சூழல் தினமானது (National Environment Day)  4.2.08 திங்கள் அன்று துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை பிரதமரும் மற்றும் சுற்றுப்புற சூழல் அமைப்பின் சேர்மனுமாகிய ஷேக் ஹம்தான் பின் சையத் அல் நாஹியான் (Shaikh Hamdan Bin Zayed Al Nahyan)  அவர்கள் குறிப்பிடுகையில், தற்போது உலகில் பல வடிவங்களில் மாசுவானது படிந்து உள்ளது. இதனால் மாசுபடிந்த நீர், காற்று, சுற்றுப்புறம் போன்றவைகளிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டி உலக முழுவதும் டாலர் மதிப்பின் 150 மில்லியன் தேவைப்படுகிறது என்றார். (செய்தி பார்க்க - அரபு செய்தி பத்திரிகை - பக்கம் 6 - தேதி 5.2.08) 

மழைகளால் பாதிப்பு, காற்றால் பாதிப்பு, தொலை தொடர்பு துண்டிப்பால் ஏற்பட்ட பாதிப்பு போன்றவைகள் செய்திகளாக இருந்தாலும் அதனை நாம் ஏதோ ஒரு சாதாரண விஷயமாக எடுத்து கொள்ள கூடாது. இதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டு விட போகிறது என்று நாம் சிந்தித்தால் பல கோடி இழப்புகளானது சாதாரணமாகவே ஒவ்வொரு நாதட்டிலும் ஏற்பட்டு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அல்லாஹ்வின் கோபப்பார்வை எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த காலத்தில் வரும் என்று நம்மால் யாராலும் சொல்ல முடியாது. எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் தான். வானமும், பூமியும், காற்றும், மழையும், கடலும் மற்றும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைப்படி நடக்கின்றன. 

மனிதர்களின் கைகள் சம்பாதித்த (தீய) வற்றின் காரணமாகக் கரையிலும், கடலிலும் (அழிவு) குழப்பம் வெளிப்பட்டு விட்டன. அவர்கள் செய்த(தீய)வற்றில் சிலவற்றை அவர்களுக்கு அவன் சுவைக்கும்படி செய்வதற்காக (இவ்வாறு) சோதிக்கிறான். அதன் மூலம் அவர்கள் (தவ்பாச் செய்து அவன் பால்) திரும்பி விடலாம். அல்குர்ஆன் 30:41

ஒரு மனிதன் அல்லது ஒரு சமுதாயம் வெறும் உலக செல்வச்செழிப்பில் மிதப்பதை அல்லது அதிகார பீடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அல்லாஹ் இத்தகைய மக்களின் விஷயத்தில் திருப்தி கொண்டு விட்டான் எனக்கூறுவது சரியல்ல. மாறாக, இது கடுமையான சோதனை மற்றும் வேதனைக்குரிய ஒரு நிலையே ஆகும். இதன் பிறகு இறைவனின் வேதனை தீடிரென வந்து அந்தக்குற்றவாளிகளை பிடித்துக்கொள்கிறது. அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் காலஅவகாசம் கொடுப்பான். மீன் பிடிப்பவன் மீன்வாயில் முள் சிக்கிய உடனே தூண்டிலை வெளியே இழுத்து விடுவதில்லை. மாறாக, கொஞ்ச நேரம் அதன் போக்கில் விட்டு விடுகிறான். அந்த மீன் அங்குமிங்குமாய் சுற்றி களைத்து போகும் போது தீடிரென வேகமாக அதனை வெளியே இழுத்து தரைக்கு கொண்டு வந்து விடுகின்றான். ஆனால் அந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த அப்பாவி மீன் சுதந்திரச்சூழலில் சொகுசாக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும். மீனுடைய வாழ்க்கை எப்படியோ அது போல் மனிதனுடைய வாழ்க்கையும் இருக்கிறது. அல்லாஹ் ஒரு மனிதனுக்கு எல்லா வசதிகளையும், செல்வங்களையும் கொடுத்து அவன் அதனை கொண்டு எப்படி வாழ்கிறான் என்பதில் சோதனை செய்வான்.

பாகிஸ்தான் மற்றும் பங்காதேஷ் நாடுகளில் தற்போது H 5 N 1 என்ற பறவைகள் நோய்கள் (Bird Flu)  பரவி விட்டன. இதனால் அந்த நாட்டில் பல கோடிகள் நஷ்டம். மேற்குறிப்பிட்ட இரண்டு நாடுகளில் 3.38 மில்லியன் பறவைகள் பாதிக்கப்பட்இதற்கு முன்பாக இந்தோனிஷியா மற்றும் செளதி அரேபியாவிலும் பறவைகள் நோய் ஏற்பட்டன. அங்கும் பாதிப்புகள். 

பயங்கர ஆயுதங்கள் பதுங்கப்பட்டுள்ளன என்ற காரணம் காட்டி ஈராக் மீது தொடுக்கப்பட்ட அநியாய போரால் இன்றும் பல இழப்பீடுகள். இந்த இழப்பீடுகள் போதாது என்று, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானை அழிக்க இன்னும் பல கோடிகளை செலவு செய்ய அமெரிக்கா தயாராகி விட்டது 2009 ஆண்டின் போர் கால பட்ஜெட்டாக 588.3 பில்லியன் டாலர்களை செலவு செய்ய அமெரிக்கா நாடாளுமன்றம் தயாராகி விட்டது. அக்டோபர் மாதம் முதல் தவணையான 70 பில்லியன் அவசர கால தேவைக்காக அவசியப்படுகிறது என்று கூறுகிறார் மனிதப்பசி பிடித்த அமெரிக்க அதிபர் புஷ்.

அமெரிக்கா ஒரு பக்கம் என்றால் இஸ்ரேல் இன்னொரு பக்கம் மனித உயிர்களுக்கு பல பாதிப்புகளை அதிகமாக தருகிறது. பாலஸ்தீனம் மற்றும் காஸா மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் உணவு பொருட்கள், மின்சாரம், குடிதண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பல உயிர்கள் மாய்ந்து வருகிறது. காஸா எல்லைப்பகுதிகளை மூடிவைத்து விட்டு வேடிக்கை பார்க்கிறது ஆதிக்கச்சக்திகள். இதனால் உணவு தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அங்கு கிடைக்காமல் பல அவஸ்தைகள் நாள்தோறும்.

4.2.08 அன்று அறுபதாவது சுதந்திர தின கொண்டாடங்கள் ஒரு பக்கம் இலங்கையில் ஆடம்பரமாக, ஆனால் மக்கள் சுதந்திரமாக இல்லாமல் அகதிகளாக சுற்றி வருகிறார்கள் சொந்த நாட்டில். தினந்தோறும் வெடி சப்தங்கள் எங்கள் தாய்த்;திருநாட்டில் என்று சொல்லக்கூடிய அளவில் உள்ளது இலங்கை. உள் நாட்டு போரா.. அல்லது வெளி நாட்டு போரா.. என்று தெரியாமல் பல நஷ்டங்கள் அந்த நாட்டில். 

தேர்தல் வந்தால் அமைதி ஏற்படும் என்ற காரணத்தினை காட்டி பாகிஸ்தானில் அமைதியினை குலைத்த ஆதிக்கச்சக்திகளால் பல டாலர்கள் மதிப்பு உள்ள பாதிப்புகள் பாகிஸ்தானில். இது போல் பல பாதிப்புகளை பல நாடுகளும் அடைந்துகொண்டு தான் வருகின்றன நாள்தோறும்.

இஸ்ரேலிய கூலிப்படைக்கு ஆதரவாக இந்தியா ஏவுகணை தளத்தினை ஆதிக்கச்சக்திக்கு கொடுத்து இருந்தது.ஜனவரி 21ம்தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரேலிய ஏவுகணை விண்ணில் பறக்க விடப்பட்டது. இதனை கண்ட ஈரான் நாடும் சும்மா இருக்கவில்லை. ஈரான் நாட்டின் பாலை வனத்தின் வட பகுதியில் சோதனை ஏவுகணை ஒன்றினை செய்து இருக்கிறது. இந்த சோதனை ஏவுகணையானது மே மாதம் அல்லது ஜுன் மாதம் விண்ணில் செலுத்துப்படும் என்று அங்குள்ள விண் வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஏவுகணை பற்றிய செய்தியினை ஈரான் நாட்டு தொலைக்காட்சியானது படம் பிடித்து 3.2.08 அன்று வெளியிட்டு இருந்தது. அத்துடன் இஸ்ரேலுக்கு இந்தியாவில் ஏவுகணைக்காக இடம் கொடுத்ததால் நடுநிலையாளர் போராட்டங்களையும் செய்தனர் என்பதினையும் நாம் அறிவோம். 

அத்துடன் டில்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு, இந்தியாவிற்கு ஏதிரான கடிதம் ஒன்றும் ஈரான் நாட்டு மக்களிடமிருந்து வந்துள்ளது என்றும் ஊடகத்துறைகள் தெரிவிக்கின்றன. ஈரான் நாடானது இந்தியாவிடம் வைத்துள்ள எண்ணெய் வர்த்தக தொடர்பானது துண்டிக்க படுமா..? என்ற வினாக்களும் பல பேரின் மத்தியில் தெரிகிறது. ஈரான் தன்னுடைய எண்ணெய் வர்த்தக தொடர்பினை துண்டித்தால் இந்தியாவானது பல பாதிப்புக்கும் உள்ளாகும் என்பது திண்ணமே. 

மழை, கடும் பனி, புயல் காற்று, சுற்றுப்புற சூழல் பாதிப்பு போன்றவற்றினை நாம் பார்க்கும் போது, அல்லாஹ்வை பற்றிய பயமும் உள்ளச்சமும் நமக்கு மேன் மேலும் அதிகரிக்க வேண்டும். திருக்குர்ஆனை இத்தகைய தருணங்களில் அதிகமதிகமாக ஒதக்கூடிய மக்களாக நாம் இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் நஷ்டம் அடையக்கூடியவர்களாக தான் இருப்போம்.

மனிதன் எப்போதும் நஷ்டத்தில் தான் இருப்பான் என்பதினை திருமறையானது தன்னுடைய அல் அஸ்ர் 103 அத்தியாயத்தில் மிகவும் அழகாக கூறுகிறது.

காலத்தின் மீது சத்தியமாக..

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.

விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்து சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும் (பாவங்களை விடுவதிலும், நன்மைகளைச்; செய்வதிலும் எற்படும் கஷ்டங்ளைச் சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத்தவிர. அல்குர்ஆன் 103 : 1,2,3