Translate

Showing posts with label அல் கவ்சர். Show all posts
Showing posts with label அல் கவ்சர். Show all posts

Saturday, July 26, 2014

அல்கவ்ஸர்(சொர்க்க நதி) குரான் அத்தியாயம் இறங்கியது, பற்றிய ஹதீஸ்

670. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள். அப்போது அவர்கள் (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள்.

அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், சற்று முன் (குர்ஆனின் 108ஆவது அத்தியாயமான அல்கவ்ஸர் எனும்) ஓர் அத்தியாயம் எனக்கு அருளப்பெற்றது என்று கூறிவிட்டு அந்த அத்தியாயத்தை (பின்வருமாறு) ஓதிக் காட்டினார்கள்: பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். இன்னா அஃத்தைனாகல் கவ்ஸர். ஃபஸல்லி லி ரப்பிக்க வன்ஹர். இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர்.

(பொருள்: அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு அல்கவ்ஸரை நல்கியுள்ளோம். எனவே, உம்முடைய இறைவனைத் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக! நிச்சயமாக உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்.)

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்கவ்ஸர் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள் என்று பதிலளித்தோம்.

அவர்கள்,அது ஒரு (சொர்க்க)நதி. என்னுடைய இறைவன் (மறுமை நாளில்) அதை(த்தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான்; அதில் அபரிமிதமான நன்மைகள் உள்ளன. அது ஒரு நீர் தடாகம்; மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தார் (தண்ணீர் அருந்துவதற்காக) அதை நோக்கி வருவார்கள். அதன் குவளைகள் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போன்று (அதிகமாகக்) காணப்படும். அப்போது அவர்களில் ஓர் அடியார் (தண்ணீர் அருந்தவிடாமல்) தடுக்கப்படுவார்.

உடனே நான், இறைவா! அவர் என் சமுதாயத்தாரில் ஒருவர். (அவர் ஏன் தடுக்கப்படுகிறார்?) என்று கேட்பேன். அதற்கு இறைவன், உங்கள் சமுதாயம் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று கூறுவான்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில், இப்னு ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள் என்பதற்கு பதிலாக) எங்களிடையே பள்ளிவாசலில் இருந்தார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

மேலும், (உங்கள் சமுதாயம் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை என்பதற்கு பதிலாக) அந்த மனிதர் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை என்று இடம் பெற்றுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், அது ஒரு நதி. என்னுடைய இறைவன் சொர்க்கத்தில் அதை(த் தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான்; அதில் ஒரு நீர் தடாகம் உள்ளது என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம் பெற்றுள்ளது. ஆனால், அதன் குவளைகள் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போன்று (அதிகமாகக்) காணப்படும் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 4. தொழுகை