Translate

Friday, February 27, 2009

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்!

கண்ணதாசனின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு

திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதுவதற்காகக் கவிஞர் கண்ணதாசன் மேற்கொண்ட முயற்சி, முஸ்லிம் அன்பர்கள் சிலரின் எதிர்ப்பால் தடைப்பட்டுப் போயிற்று. குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் குர்ஆனுக்கு உரையெழுதக் கூடாது என்று உலமா பெருமக்கள் சிலர் எதிர்த்தனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த கவிஞர், எவர் மனமும் புண்படக் கூடாதென்ற நல்ல எண்ணத்தில் தம் முயற்சியை நிறுத்திக் கொண்டார்.

ஆயினும் திருமறையின் தோற்றுவாய் எனப்படும் முதல் அத்தியாயத்துக்கு அவர் எழுதியுள்ள மொழி பெயர்ப்பு இறையருளால் நமக்குக் கிடைத்துள்ளது. அழகிய தமிழில், எளிய நடையில் கவிதையாகக் கவிஞர் கண்ணதாசன் தந்துள்ள மொழியாக்கம், அவர் தம் திருக்குர்ஆன் புலமைக்கும், மொழிபெயர்ப்புத் திறனுக்கும் சான்றாகத் திகழ்கிறது.

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம் “அல்ஃபாத்திஹா” அல்லது “தோற்றுவாய்” என்று அழைக்கப்படும். இறைவனின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் இந்த அத்தியாயம் அரபி மொழியில் ஏழு வசனங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

“அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்;
அர்ரஹ்மான் நிர்ரஹிம்; மாலிகி யவ்மித்தீன்;
இய்யாக்க நஹ்புது வ இய்யாக்க நஸ்தயீன்;
இஹ்திநஸ் ஸிராத்தல் முஸ்தகீம்; ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம் ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்”

ஒவ்வொரு தொழுகையின் போதும் நிற்கின்ற நிலையில் கட்டாயம் ஓதப்படுகின்ற திரு வசனங்களாக இவை உள்ளன. இருபத்தைந்து அரபி சொற் களில் அமைந்துள்ள இந்த ஏழு வசனங்களையும் மனனம் செய்யாத முஸ்லிம்களே உலகில் இல்லை எனலாம்.

கண்ணதாசனின் மொழிபெயர்ப்புத் திறனை உணர் வதற்கு முன்னர், இதன் தமிழாக்கத்தை அறிந்து கொள்வோம்.

அரபி மூலம் - தமிழாக்கம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
அகில உலகைப் படைத்து நிர்வகிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்

அர் ரஹ்மானிர் ரஹீம்
(அவன்) அளவிலா அருளாளன்; நிகரில்லா அன்புடையோன்.

மாலிகி யவ்மித்தீன்
அவனே மறுமை நாளின் அதிபதி.

இய்யாக்க நஹ்புது
(ஏக இறைவனே!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;

வ இய்யாக்க நஸ்தயீன்
உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.

இஹ்தினஸ் ஸிராத்தல்
எங்களை நேரான வழியில் முஸ்தகீம் செலுத்துவாயாக!

ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம்
எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களுடைய வழியில் நடத்துவாயாக!

ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்
அவ்வழி உன் கோபத்துக்கு உள்ளானவர்களுடையதும் அல்ல;
வழி தவறியவர்களுடையதும் அல்ல.


திருமறையின் தோற்றுவாயாக விளங்கும் “அல் ஃபாத்திஹா” எனப்படும் இதன் அரபி மூலத்தையும் தமிழாக்கத்தையும் கவியரசர் கண்ணதாசன் ஆழ்ந்துணர்ந்து “திறப்பு” என்ற தலைப்பில் மொழியாக்கமாகத் தந்துள்ளார்.

திறப்பு

எல்லையிலா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வைத் துணைகொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்.

* * *

உலகமெலாம் காக்கின்ற
உயர்தலைவன் அல்லாவே
தோன்றுபுகழ் அனைத்திற்கும்
சொந்தமென நிற்பவனாம்;

அவன் அருளாளன்;
அன்புடையோன்;
நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்;

உன்னையே நாங்கள்
உறுதியாய் வணங்குகிறோம்;
உன்னுடைய உதவியையே
ஓயாமல் கோருகிறோம்;

நேரான பாதையிலே
நீ எம்மை நடத்திடுவாய்;
அருளைக் கொடையாக்கி
யார் மீது சொரிந்தனையோ
அவர்களது பாதையிலே
அடியவரை நடத்தி விடு!

எவர்மீது உன் கோபம்
எப்போதும் இறங்கிடுமோ
எவர்கள் வழிதவறி
இடம் மாறிப் போனாரோ
அவர்களது வழி விட்டு
அடியவரைக் காத்து விடு!”

- கண்ணதாசன்

எத்தனையோ முஸ்லிம் தமிழ்க் கவிஞர்கள் இப்பகுதியை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். ஆயினும் கவியரசர் கண்ணதாசனுடைய மொழியாக்கத்திலுள்ள இனிமையும், எளிமையும், தெளிவும், தேர்ந்த சொல்லாட்சித் திறனும் பிற கவிஞர்களிடம் இல்லை என்பது முற்றிலும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. எல்லாவற்றுக்கும் மேலாகத் திருக்குர்ஆன் வசனங்களின் கருத்துகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல், கற்பனைக் கலப்பில்லாமல் உயிரோட்டமாக மொழியாக்கம் செய்திருப்பது கவியரசர் கண்ணதாசனின் மேல் நமக்குப் பெருமதிப்பை ஏற்படுத்துகிறது. திருக்குர்ஆன் முழுமைக்கும் கவிஞரின் விளக்கவுரை கிடைக்காமல் போயிற்றே என்ற ஏக்கமும் உடன் எழுகின்றது.

கண்ணதாசன் போற்றிய முஸ்லிம் பெருமக்கள்

சமூகத்தின் சிறந்த சான்றோர்களை, அருந்தமிழ் வளர்த்த ஆன்றோர்களை, மணிவிழா கண்ட பெரியோர் களை, மணவிழா கண்ட புதுமண மக்களைக் கவியரசர் கண்ணதாசன் அவ்வப்போது வாழ்த்துப் பாடி மகிழ்ந் திருக்கிறார். சாதி மத பேதமில்லாமல் எல்லாத் தரப் பினரையுமே அவர் மனங்கனிந்து வாழ்த்தியிருக்கிறார். முஸ்லிம் பெருமக்கள் பலரையும் அவர் போற்றிப் பாடியிருக்கிறார்.

திருச்சியிலுள்ள ஜமால் முகம்மது கல்லூரியை நிறுவிய வள்ளல் ஜமால் முகம்மதின் கல்விப் பணியையும் கொடைத் திறனையும் போற்றிப் பாராட்டுகிறார் கண்ணதாசன்.

“சேர்த்துக் காத்துச் செலவுசெய் கின்றதோர்
ஆக்க வழியை அறிந்தவர் வள்ளல்
ஜமால் முகம்மது; தமிழக மக்களின்
கல்விப் பசிக்குக் கனிகள் கொடுத்தவர்;
ஊருணி நீர்போல் உலகம் முழுதும்
உண்ணக் கிடைப்பது உயர்ந்தோர் செல்வம்!
சென்னை நகரிலும் திருச்சி நகரிலும்
கல்விக் கூடம் கண்டவர் முகம்மது!
சீதக் காதியின் சிவந்த கரம்போல்
அள்ளித் தந்தவர்; அருட்பே ராலே
விளங்கும் இந்த வித்தக சாலை
அறிவு மாணவர் ஆயிரம் வளர்த்துத்
தானும் வளர்ந்து தழைத்தினி தோங்குக!”

(”கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்” பக். 146)

கவியரசரால் வாழ்த்தப்பட்ட திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி, அண்மையில் பொன்விழாக் கொண்டாடிக் கல்விப் பணியில் சாதனை நிகழ்த்தியிருக்கிறது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி யாக விளங்கிய நீதியரசர் மு.மு. இஸ்மாயீல், நேர்மை யின் இலக்கணமாக விளங்கியவர். தலைசிறந்த தமிழறிஞர்; சென்னைக் கம்பன் கழகத்தின் தலைவராகப் பல்லாண்டுகள் தொண்டாற்றியவர்; அரும்பெரும் நூல்களை இயற்றி அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்தவர்; அவர் தம் சிறப்பியல்புகள் கவியரசர் கண்ணதாசனைப் பெரிதும் கவர்கின்றன. உடனே மனம் திறந்து பாராட்டுகிறார்.

“புன்னகை மின்னும் தோற்றம்
புகழிலும் பணியும் ஏற்றம்
தன்னரும் திறத்தி னாலே
சபைகளை ஈர்க்கும் ஆற்றல்
இன்முகம் காட்டி னாலும்
இயல்பிலே கண்டிப்பாக
நன்மையே செய்யும் மன்னன்
நாட்டுக்கோர் நீதி தேவன்!
பதவியில் உயர்ந்த போதும்
பாரபட் சம்இல் லாமல்
நதியென நடக்கும் நேர்மை
நண்பர்க்கும் சலுகை யின்றி
அதிகார நெறியைக் காக்கும்
அண்ணலார் இஸ்மா யீல்தம்
மதியினை யேபின் பற்றி
மாநிலம் வாழ்தல் வேண்டும்!”

(”கண்ணதாசன் பாடிக் கொடுத்த மங்கலங்கள்” பக். 158)

நீதியரசர் இஸ்மாயீலின் நேர்மைக்குக் கவியரசர் கண்ணதாசன் வழங்கியிருக்கும் இந்தக் கவிதைச் சான்றிதழ், நல்லோரைப் பாராட்டும் கவிஞரின் நற்பண்புக்கும் சான்றாக விளங்குகிறது.

“நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்” என்ற நூலை இயற்றியவர் கவிஞர் நாஞ்சில் ஷா. அவருடைய நூலுக்குக் கண்ணதாசன் வழங்கிய அணிந்துரையில்,

“நாஞ்சில் ஷா காட்டுகின்ற
நல்ல நபி நாயகத்தை
வாஞ்சையுடன் பார்த்தபின்னர்
மற்றவற்றைக் கற்பதற்குக்
கடைகடையாய் ஏறிக்
கால்வலிக்க நான் நடந்தேன்;

எத்தனையோ அற்புதங்கள்
எத்தனையோ அதிசயங்கள்
அன்னை ஆமினா
அளித்தமகன் வாழ்க்கையிலே!”

என்று மனம் திறந்து பாராட்டுகின்றார். சமயநெறி நோக்காது ஆற்றல் மிக்க கவிஞர்களைத் தம் கவிதை வரிகளால் ஊக்குவிப்பது, கவியரசரின் இயல்பு!

கண்ணதாசன் வாழ்த்திய முஸ்லிம் மணமக்கள் முஸ்லிம் பெருமக்களைப் போற்றியது போன்றே தம்முடைய முஸ்லிம் நண்பர்களுக்கு நடைபெற்ற திருமண விழாக்களின் போது, அருமையான வாழ்த்துப் பாக்களை அகங்கனிந்து பாடி நல்லாசி வழங்கியுள்ளார் கவிஞர் கண்ணதாசன்.

“மணநாள் என்பது வாழ்வின் திருநாள்!
நிக்காஹ் முடிக்கும் நிகரிலாப் பொன்னாள்!
இல்லறம் தொடங்கும் இளமைத் தனிநாள்!
நபிகள் பெருமான் நடத்திய வாழ்வை
வாழ்க்கைத் துணையொடும் வாழ்ந்த
பெருமையை
முகமது ஹனீபா மனதிற் கொண்டு
நீண்ட நாள் வாழ நெஞ்சார வாழ்த்துவேன்!
நானும் அவனும் நகமும் சதையும்
பூவும் காம்பும் பொன்னும் ஒளியும்
இனியதோர் நட்புக்கு இலக்கணம் நாங்கள்
அதனால் தானே அன்பனின் மணத்தை
ஆயிரம் மைல்கள் ஆசையில் கடந்து
காணவந் துள்ளேன் கனிந்து வந்துள்ளேன்!”

என்று தம் நண்பன் முகம்மது ஹனீபாவோடு தமக்குள்ள நட்பின் ஆழத்தை இயம்பி மகிழும் கண்ணதாசன்,

“எல்லாம் வல்ல இறைவன் மூலவன்
அல்லா அருளால் அனைத்தையும் பெறுக!”

என்று மணவாழ்த்தை முத்தாய்ப்பாக முடிக்கிறார். முகம்மது ஹனீபா அன்ஷர் பேகம் மணமக்களை வாழ்த்தியது போலவே, தமது நண்பர்களாகிய சவுக்கத் அலீ மரியம் பீவிக்கும், நூர் முஹம்மது முஹம்மது பீவிக்கும் நடைபெற்ற திருமணங்களின் போதும் மங்கல வாழ்த்துப் பாடியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மணமக்களுக்கு பல நல்ல அறிவுரைகளைக் கூறுவதோடு,

“எல்லாம் வல்ல அருளாளன்
எல்லை இல்லாப் பேராளன்
அல்லா என்றும் உமைக்காப்பார்
அன்பை உணரும் இறையன்றோ!”

என்று இறைவனிடம் இறைஞ்சவும் செய்கிறார்.

கவியரசர் தந்த இஸ்லாமிய கீதங்கள் : ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல் களை எழுதித் தமிழ்ப் படவுலகில் தனியாட்சி செலுத் தியவர் கவியரசர் கண்ணதாசன். அவருடைய இசைப் பாடல்களில் இஸ்லாமிய கீதங்களும் உண்டு.

“எல்லாரும் கொண்டாடுவோம்!
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லாரும் கொண்டாடுவோம்!”

என்ற பாடல் முஸ்லிம்கள் மட்டுமின்றி எல்லாராலும் இன்றளவும் பாடப்படுகின்ற, காலத்தை வென்று நிற்கும் இசைப்பாடலாகும்.

பாவமன்னிப்பு, சங்கர் சலீம் சைமன், நான் அவனில்லை, குழந்தைக்காக…, கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் இஸ்லாமியக் கருத்துகள் அமைந்த இசைப்பாடல் களைக் கவியரசர் கண்ணதாசன் பாடியுள்ளார்.

நிறைவுரை

இதுகாறும் கண்டவற்றால் முஸ்லிம் நண்பர் களோடும், கவிஞர்களோடும், அறிஞர்களோடும், பெரிய வர்களோடும் கவியரசர் கண்ணதாசன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தார் என்பதை உணர்கிறோம்.

நட்புக்கும் நல்லிணக்கத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய கவியரசர் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுத மேற்கொண்ட முயற்சியும், திருக்குர்ஆனின் சிறப்புகளைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையும், “அல்ஃபாத்திஹா” எனப்படும் திருமறையின் தோற்று வாய்க்குத் “திறப்பு” என்ற தலைப்பில் அவர் தந்துள்ள மொழியாக்கமும் கண்ணதாசனின் இஸ்லாமிய ஈடு பாட்டைத் தெளிவாகக் காட்டுகின்றன. அந்த மனித நேய மகாகவிக்கு முஸ்லிம் மக்களும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

- பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர்

(கட்டுரையாளர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் முதுகலைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்.)

நன்றி: சமரசம் 1-15 ஜூலை 2006

Thursday, February 26, 2009

இஸ்லாத்தைப் பற்றி இவர்கள்........

பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தை கிடையாது. -

-அம்பேத்கார்.-

இன இழிவுகளை நீக்கி சிக்கலைத் தீர்க்கக் கூடிய மார்க்கம் இஸ்லாம்தான். இன இழிவுகள் நீங்க அதுவே நன்மருந்து. -

-பெரியார் -

பகுத்தறிவுக்குப் புரியாத விடயங்கள் எதுவும் இஸ்லாத்தில் கிடையாது. இஸ்லாத்தின் பலமும் அழகும் அதன் எளிய தன்மையிலேயே இருக்கின்றன. அது ஓர் இயற்கைமதம்.

- டாக்டர் ராதா கிருஷ்ணன்.-

ஆண்டவன் ஒருவனே கடவுள் ஒன்றுதான் என்பதை எள்ளளவும் குழப்பமின்றி உறுதிப்படுத்தியது இஸ்லாம்தான். குர்ஆனைப் பக்திப் பரவசத்துடன் படிக்கும் போது எனக்கு ஒரு வித காந்த சக்தி ஏற்படுகின்றது. என் இந்து சகோதரர்கள் இதைப் பரிசுத்த உள்ளத்துடன் படித்தால் உண்மை உபதேசம் வெளியாவதை உணர்வார்கள்.

-மஹாத்மா காந்தி -

முஹம்மது போதித்த மார்க்கம் இஸ்லாம் வைரம் போன்றது.
ஒரே இனம் ஒரே குலம் ஒரே மறை ஒரே வணக்கம் இவைகளைச் சிந்திக்கத் தலைப்பட்டேன். இஸ்லாம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் எனக்கு விடை தரவில்லை.

-அண்ணாத் துரை-

786 என்றால் என்ன?

786 என்றால் என்ன?
இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா?
என்ற பல கேள்விகள் மனதில் எழத்தான் செய்கின்றன ! இதற்கு விடையை சிறிது அலசி பார்ப்போம் !

நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர். உதாரணத்திற்கு
அலீஃப் ற்கு 1,
பே விற்கு 2,
ஜீம் மிற்கு 3
தால் லிற்கு 4.

''பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாக கூட்டினால் 786 வரும்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாக கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியுமா என்று கேள்வி எழுந்தால் , பின்வரும் திருகுரான் வசனப்படி கூடாது என்று தான் சொல்ல வேண்டும் .

இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு ) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; 49:11

எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒருவர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவர் குர்ஆனை ஓதியவர் என்று கருதப்பட மாட்டார்.

அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும் எழுதியவராகவும் ஆக மாட்டார். 786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது.
மோசமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்னா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.

அப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.

அவனது திருப் பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும் முஸ்லிமல்லாதவர்கள் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.
ஏனெனில் காபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் ''பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று எழுதியுள்ளார்கள். (பார்க்க அல்குர்ஆன் 27.30)

நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் ''பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்றே எழுதியுள்ளனர். (பார்க்க புகாரி 7,2941,4553)

நாமும் அது போல் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எல்லா நேரத்திலும் எழுத வேண்டும்.

நன்றி : சகோ ஜைனுலாபுதீன்

Monday, February 23, 2009

இன்ஷ்யூரன்ஸ்! இஸ்லாத்தின் பார்வையில்

இன்ஷ்யூரன்ஸ் என்பது வட்டியை அடிப்படையாகக் கொண்டதாகும். அதன் மூலதனங்கள் யாவும் வட்டியின் தேவைக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற நிறுவனங்களில் பணியாற்றுவது வட்டிக்குத் துணை செய்வதாகவே கொள்ளப்படும்.

மேலும் இன்ஷ்யூரன்ஸ் என்பது முழுக்க முழுக்க ஒரு சூதாட்டமேயாகும். பலரிடம் பணம் வசூல் செய்து யார் இடையிலே இறந்து விடுகிறானோ அல்லது இழப்புக்கு ஆளாகிறானோ அவனுக்குப் பலரது பணமும் போய்ச் சேருகின்றது.

''ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.''

(அல்குர்ஆன் 5:90)

மற்ற சூதாட்டங்களில் வென்றவன் மற்றவர்களின் பணத்தை அடைகின்றான். இந்த சூதாட்டத்தில், இறந்தவனும், இழந்தவனும் அடைகின்றான். மனிதனுடைய உயிரையும், உடமையையும் பணயமாக வைத்து விளையாடப்படும் சூதாட்டத்திற்கு எந்த முஸ்லிமும் துணை போகக் கூடாது.

Sunday, February 22, 2009

சகாபக்களை பின்பற்றலாமா ? ஓர் அலசல் !


ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

(அல்குர்ஆன் 9:100)


அல்லாஹ் சொர்கத்தை பற்றி குறிப்பிடும் பொழுது தனது திருமறையில் 

"நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான்." 

இப்படி சொல்லி காட்டுகின்றான் , 

அப்படியானால் சகாபாக்களை பின்பற்றலாம் என்று தானே குரான் சொல்லுகிறது ...
----------------------------------------------------------------------------


அல்லாஹ்வும் தன் திருமறையில் நபித்தோழர்களைப் புகழ்ந்து கூறுகின்றான்.

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.

(அல்குர்ஆன் 9:117)

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள்.

(அல்குர்ஆன் 57:10)

இத்தகைய சிறப்புகள் நபித்தோழர்களுக்கு இருப்பதை நாம் எப்போதுமே மறுக்க முடியாது !

அப்படி சொல்லும் பொழுதே , பின்பற்றுவதை கோடிட்டு "நல்ல விஷயத்தில்" என்று இறைவன் சொல்லிகாட்டுகின்றான் .


நபித்தோழர்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும்.
( தவறுகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் , கிழே கொடுக்கப்பட்டுள்ளன ) 

இஸ்லாத்தில் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டும் தான் மார்க்கத்தின் ஆதாரங்கள்.


சில நபித் தோழர்களின் கருத்துக்களும் செயல்களும் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக இருந்துள்ளன.

சிறப்புகள் உள்ளதால் நபித்தோழர்களின் கருத்துக்களை மார்க்கமாகக் கருதும் எந்தவொரு செயல்பாட்டையும் ஏற்றுக் கொள்ளலாமா என்றால் , 
குரான் ஹதீசுக்கு முரணாகும் பொழுது , கூடாது என்று தான் சொல்ல வேண்டும் .
 
குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக ஒன்றல்ல, இரண்டல்ல. பல்வேறு விஷயங்களில் ஸஹாபாக்கள் கருத்து கூறியுள்ளார்கள்.

தமத்துஃ ஹஜ்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமத்துஃ ஹஜ் செய்ய அனுமதித்துள்ளார்கள். ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் இதைத் தடுத்துள்ளார்கள்.

நான் உஸ்மான் (ரலி) உடனும், அலீ (ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும், உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து, ''லப்பைக்க பி உம்ரதின் வஹஜ்ஜதின்'' என்று கூறிவிட்டு, ''நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டு விட மாட்டேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : மர்வான் பின் ஹகம்
நூல் : புகாரி 1563

ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார். அதற்கு அவர், ''அது அனுமதிக்கப்பட்டதே!'' என்று கூறினார். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், ''உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!'' என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி), ''என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபி (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், ''நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்'' என்றார். அப்போது இப்னு உமர் (ரலி), ''நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்'' என்று விடையளித்தார்.

அறிவிப்பவர் : ஸாலிம்
நூல் : திர்மிதீ (753)


தமத்துஃ ஹஜ் என்ற ஒரு ஹஜ் முறை இருப்பதை இன்றைக்குக் கூட, நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற சொல்பவர்கள் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். 
ஆனால் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய மிகப் பெரிய நபித் தோழர்களுக்கு இது தெரியாமல் இருந்துள்ளது. இதை மேலே சொல்லப்பட்ட ஹதீஸ்கள் நமக்கு எடுத்து காட்டுகின்றது .

நபிதோழர்களின் சிறப்புகளை ஒரு போதும் மறுப்பதற்கில்லை , 

நபித்தோழர்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. 
அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும், என்பதும் தெள்ள தெளிவாக விளங்குவதாலும் ,

அவர்கள் சொன்ன கருத்துகளை அப்படியே பின்பற்றலாமா என்றால் ( அவர்களின் கருத்துக்கள் குரான் ஹதீசுக்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் )அதுவும் கூடாது , 
என்ற கருத்துக்கு தான் நம் வரவேண்டும் .

தண்ணீர் வியாபாரம் செய்யலாமா?

தண்ணீரை வியாபாரம் செய்தல் கூடாது , என்று தான் நமக்கு ஹதீஸ்கள் தெளிவாக எடுத்து கூறுகின்றன ,

பின்வரும் ஹதீஸை பாருங்கள் .


தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை விற்பது கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் 2925


தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பிறர் பயன் படுத்துவதைத் தடுக்க வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 2353, 2354, 6962


நம்மிடம் ஒரு கிணறு உள்ளது. அதில் நம் தேவைக்கு மேல் தண்ணீர் இருக்கின்றது. இதில் நாங்களும் இறைத்துக் கொள்கிறோம் என்று ஒருவர் கேட்கும் போது, அவரிடம் கட்டணம் கேட்டால் அது தண்ணீரை விற்பதில் அடங்கும். 

நம்மிடம் தண்ணீர் இறைத்துத் தருமாறு அவர் கேட்கும் போது, அதற்கு நாம் கட்டணம் கேட்டால் அது குற்றமாகாது. இறைத்துத் தருவதற்காகவே கட்டணம் கேட்கிறோம்.

தண்ணீரை வியாபாரம் செய்யக் கூடாது என்றால் இன்றைய சூழலில் இதில் பல கேள்விகள் எழுகின்றன.

லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகத்திற்கு விலை நிர்ணயித்தல், தண்ணீரின் நிறம் மற்றும் சுவையை மேம்படுத்தி கிருமிகளை அழித்துத் தயாரிக்கப்படும் மினரல் வாட்டர் விற்பனை செய்தல் போன்றவை தண்ணீரை விற்பனை செய்த குற்றத்தில் சேருமா? என்பது தான் அந்தக் கேள்விகள்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இது தண்ணீரை விலைக்கு விற்பது போல் தோன்றினாலும் உண்மையில் இது தண்ணீர் வியாபாரமாகாது.

ஏனெனில் லாரியில் சுமந்து செல்லுதல், அதில் முதலீடு செய்தல் போன்ற காரணங்களுக்காகவே கட்டணம் வாங்கப்படுகின்றது. அது போல் சாதாரண தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் தான் மினரல் வாட்டருக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. எனவே இது தண்ணீரை விற்ற குற்றத்தில் அடங்காது.

இந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் இதில் குழப்பம் ஏற்படாது.

Monday, February 16, 2009

இஸ்லாமிய அழைப்புப்பணி

டாக்டர் ஜாகீர் நாய்க் அவர்கள் ஒற்றுமை 
இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி

   

    இஸ்லாத்தைப் பற்றித் தவறான பல கருத்துக்கள் குறிப்பாக செய்தி ஊடகங்களால் பரப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் கருத்துகள் திணிக்கபடுகின்றன. இச்சூழலில் நாம் மதி நுட்பத்துடன் அழைப்புப் பணிச் செய்ய கடமைப்பட்டுள்ளோம். சாதாரணமாக முஸ்லிம்களாகிய நாம் அழைப்புப் பணிச் செய்யும்போது, கருத்துகளை பூசி மெழுகும் பாணியைத்தான் கடைப்பிடிக்கின்றோம். ஆனால் இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துகளை மதி நுட்பத்தைப் பயன்படுத்தி கலைக்கும் பணியை நாம் மேற்கெள்ள வேண்டும்.

    உதாரணமாக முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் மக்கள் கூறும்போது, நான் "அடிப்படைவாதி" என்பவன் யார் என்ற கேள்வியை எழுப்புவேன். அடிப்படைவாதி என்பவர் ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது நம்பிக்கையின் அல்லது படிப்பின் அடிப்படைகளை பின்பற்றுபவர் ஆவார். உதாரணமாக ஒரு மருத்துவர் நல்ல மருத்துவராக இருக்கவேண்டும் எனில் மருத்துவத்தின் அடிப்படைகளை அறிந்து புரிந்து அதனை செயல்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். மருத்துவத்துறையில் அவர் ஒரு அடிப்படைவாதியாக இருக்காவிடில், அவர் ஒரு நல்ல மருத்துவராக இருக்க முடியாது. என்னை பொருத்தவரை ஒரு முஸ்லிம் அடிப்படைவாதி என்று என்னை அழைத்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஏனெனில் நான் இஸ்லாத்தின் அடிப்படைகளை அறிந்து புரிந்து அவற்றை பின்பற்றுபவனாக இருக்கிறேன். மனித குலத்திற்கு எதிரான ஏதாவது ஒரேயொரு அடிப்படை அம்சத்தை சுட்டிக் காட்டுமாறு இஸ்லாத்தை விமர்சிப்போருக்கு நான் சவால் விடுகிறேன். இஸ்லாத்தைப் பற்றி தெரியாத ஒருவர் இஸ்லாத்தின் சில அடிப்படை அம்சங்களை மனித குலத்திற்கு எதிரானது என்று எண்ணலாம். ஆனால் அவரது சந்தேகங்களுக்கு அறிவுப் பூர்வமாக விளக்கம் அளித்தால், எந்தவொரு மனிதராலும் மனித குலத்திற்கு எதிரான ஒரேயொரு விஷயத்தைக் கூட இஸ்லாத்தில் சுட்டிக்காட்ட முடியாது.

    அடிப்படைவாதி என்பதற்கு பொருள், பழங்கால மதங்களில் ஏதாவது ஒன்றின் கோட்பாட்டை கண்டிப்புடன் பின்பற்றுபவர் என்று ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி கூறுகின்றது. ஆனால் ஆக்ஸ்போர்ட் அகராதியின் புதிய பதிப்பை நீங்கள் படித்தால் இந்த பொருளில் சிறிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம். புதிய பதிப்பில் பழங்கால மதங்களில் ஏதாவது ஒன்றில் குறிப்பாக இஸ்லாத்தின் கோட்பாட்டை கண்டிப்புடன் பின்பற்றுபவரே அடிப்படைவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இஸ்லாம் என்ற வார்த்தை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே "அடிப்படைவாதி" என்ற சொல்லை கேள்விப் பட்டவுடனேயே, முஸ்லிமைப் பற்றிய எண்ணம் தான் ஒருவரது எண்ணத்தில் வரும். முஸ்லிம் என்றாலே அடிப்படைவாதி, பயங்கரவாதி என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

    பயங்கரவாதி என்பவன் அப்பாவி மக்களை கதிகலங்க வைப்பவன் என்ற பொருளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் அறிவேன். இந்த அடிப்படையில் எந்தவொரு முஸ்லிமும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. எந்தவொரு அப்பாவியையும், எந்தவொரு சமயத்திலும் முஸ்லிம் ஒருவர் கதிகலங்க வைக்கக் கூடாது. சமூக விரோதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து முஸ்லிம்கள் கதிகலங்க வைக்கவேண்டும். இப்படியே நாம் விரிவாக விளக்கிக் கொண்டே போகலாம். எனவே மதி நுட்பத்துடன் நாம் கருத்துகளை மக்களிடையே எடுத்துரைக்க வேண்டும்.


    இளைஞர்களை பொருத்தவரையில், இஸ்லாத்தின் சத்தியச் செய்திகளை எடுத்துரைக்க அவர்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. உதாரணமாக நான் ஒரு மருத்துவராக ஆக வேண்டும் என்று விரும்பியதற்குக் காரணம் மருத்துவப் பணி ஒரு உன்னதமான பணி என்பதால் தான். ஆனால் அதனைவிட சிறந்த பணியை பின்னர் நான் கண்டேன்.

    திருக்குர்ஆனில் இறைவன்:

    (41:33) وَمَنْ اَحْسنُ قَوْلا ًمِّمَّنْ دَعَآاِلىَاللهِ وَعمِلَ صَاِلحا ًوَّقَالَ اِنَّنِيْ مِنَ الْمُسْلِمِيْنَ

    எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல)அமல்கள் செய்து: "நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று  கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?" (இருக்கின்றார்?)

    எனவே மருத்துவப்பணியைவிட சிறந்த பணியாக அழைப்புப்பனி தென்பட்டபோது நான் அதனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். எனவே முஸ்லிமாகிய நாம் முஸ்லிம் என்று நம்மை அழைத்துக் கொள்வதில் வெட்கமடையத் தேவையில்லை. முஸ்லில்லாதவர்களின் உள்ளத்தில் உள்ள தவறான எண்ணங்களைப் போக்க நாம் மதி நுட்பத்துடன் முயற்சி செய்ய வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களின் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற போர்வையில் கடினப்போக்கை மேற்கொள்ளாமல் அன்புடனும் கணிவுடனும் முஸ்லிம் அல்லாதவர்களிடையே நாம் பணியாற்ற வேண்டும்.

மார்க்கத்தில் புதிதாக ஒன்றை ஏற்படுத்தாதே

இஸ்லாத்தில் பிரிவுகளில்லை

மார்க்கத்தில் புதிதாக ஒன்றை ஏற்படுத்தாதே
நான்கு மத்ஹப் இமாம்களின் எச்சரிக்கை

இமாம் அபூஹனிபா (ரஹ்) கூறியுள்ளார்கள் :-

        நீங்கள் ஹதீஸ் ஆதாரங்களையும், நபிதோழர்களின் நடை முறைகளையும் பற்றிப் பிடிப்பவர்களாய்  இருங்கள்.  மார்க்கத்தில் புதிதாக தோன்றியவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அனைத்தும் பித்அத்துக்களும் வழிகேடுகளேயாகும்.


இமாம் மாலிக் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-

        "மார்க்கத்தில் பித்அத்தை உண்டாக்கி அதற்கு பித்அத்து ஹஸனா என்று எவன் பெயர் சூட்டுகின்றானோ,அவன் நபி(ஸல்) அவர்கள் தனது ரிஸாலத்தில்(தூதுவப் பணியில்) மோசடி செய்து விட்டார்கள் என்றே கருதுகிறான்.எனேன்றால், அல்லாஹ், "அல்யவ்ம அக்மல்து லக்கும் தீனுக்கும்......என்று சொல்லிவிட்டான். அன்று மார்க்கமாக இல்லாதது ன்றும் மார்க்கமாக ருக்க முடியாது.

இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறியுள்ளார்கள் :-

        எவன்  மார்க்கத்தில் புதிதாக ஒன்றை  உண்டாக்கி, அதை பித்அத்து ஹஸனா என்று சொல்கிறானோ அவன் புதிதாக ஒரு மார்க்கத்தையே  உண்டாக்கி  விட்டான்.


இமாம் அஹ்மது ப்னு ஹன்பல் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-

        எங்களிடம் சுன்னாவின் அடிப்படையாவது:ரசூல் (ஸல்)  அவர்களும்,  அவர்களது தோழர்களும்  இருந்த வழியை உறுதியாகப் பற்றிப் பிடித்து, அவர்களைப் பின்பற்றி பித்அத்துக்களை விடுவதேயாகும். ஏனென்றால் பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளேயாகும்.   நூல்:அஸ்ஸுன்னத்து வல் பித்ஆ

____________________________________________________________________________________

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை யுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்கு கடுமையான வேதனை உண்டு.  
(அல்குர்ஆன் 3:105)

நிச்சயமாக உங்கள் "உம்மத்து" சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான்; மேலும் நானே உங்கள் இறைவன் ஆகையால் என்னையே நீங்கள் வணங்குங்கள். (பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்க) காரியங்களில் பிளவுபட்டனர். அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள். 
(அல்குர்ஆன் 21:92,93)


Sunday, February 15, 2009

கியாமத்[இறுதி தீர்ப்பு] நாள் (FINAL JUDGEMENT DAY)

ஒரு நாள் நாம் மலைகளை பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். 18:47

அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்களாகிவிடும். 73:14

ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாள் அது குற்றவாளிகளை, (பயத்தினால்) நீலம் பூத்த கண்ணுடையோராக் நாம் அந்நாளில் ஒன்று சேர்ப்போம். 20:102

ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள். 23:10

அந்நாளில் (தங்கள்) கப்றுகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள். 70:43

ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். 78:18

அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் - அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது. 42:47

(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும் வெளிப்படுத்தும். 10:54

ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். 16:111 

அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும். காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல. அந்நாளில் "(தப்பிக்க) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான். 
அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு. அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான். 74:9,3

காஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரபரப்பாக பரப்பி வைப்போம். 18:100

அந்நாளில் அர்ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய  பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது. 20:109

அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும். 50:42

அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள். 30:14

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும். 75:22,24

ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். 44:41

(அந்நாளில்) எதை அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். 45:33 

அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். 52:46

அந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடித்துக்கொண்டு; "அத்தூதருடன் நானும்  (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?" எனக் கூறுவான். 25:27

அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்். 22:2

அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும். 24:24

அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா." 26:88

அந்நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையே அன்றி (அதிக நேரம்) தங்கி இருக்கவில்லை என்று சத்தியம் செய்வார்கள். 30:55

அந்நாளில், அநியாயம் செய்தவர்களுக்கு, அவர்கள் (கூறும்) காரணங்கள் ஒரு பயனும் தராது, அவர்கள் (அல்லாஹ்வைத்) திருப்தி செய்யவும் முடியாது. 30:57

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், "ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள். 33:66 

(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர். 42:22

உங்கள் உறவினரும், உங்கள் மக்களும் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான், அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான். 60:3

அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது. 69:18

எழுதப்பட்ட ஏடுகளைச் சருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!) 21:104

அல்லாஹ்வின் வல்லமை

அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி நபி (ஸல்) 

அல்லாஹ் கூறுகிறான்: 

எனது அடியார்களே! நான் நிச்சயமாக அநீதியை ஹராமாக்கிக் கொண்டேன். மேலும் உங்கள் மீதும் ஹராமாக்கி விட்டேன். எனவே நீங்களும் அநீதி இழைக்காதீர்கள். 

என் அடியார்களே! நீங்கள் அனைவரும் வழிதவறியவர்கள்தாம். எனினும் நான் நேர்வழியில் நடத்துபவர்களைத் தவிர. ஆகவே நேர்வழியைக் காட்டுமாறு என்னிடம் கேளுங்கள். நான் (உங்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறேன்.

என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்துப் பசியாற்றியர்வர்களைத் தவிர (மற்ற) அனைவரும் பசித்தர்வர்களே. ஆகவே அவர்களுக்கு உணவளிக்குமாறு என்னிடம் கேளுங்கள், நான் உணவளிக்கிறேன்.

என் அடியார்களே! உங்களில் நான் உடை அணிவித்தவர்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரும் உடையற்றவர்களே. என்னிடம் உடையளிக்குமாறு கேளுங்கள். நான் உங்களுக்கு உடை அணிவிக்கிறேன். 

என் அடியார்களே! நீங்கள் இரவிலும் பகலிலும் பாவ காரியங்களைப் புரிகிறீர்கள்; நான்(அல்லாஹ்) சகல பாவங்களையும் மன்னிக்கிறேன். ஆகவே என்னிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள். நான் உங்களுக்கு மன்னிப்பளிக்கிறேன்.

என் அடியார்களே! எனக்கு நீங்கள் தீங்கிழைக்கவோ, நன்மை புரியவோ முடியாது. என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், உங்களுக்கு பின்னால் தோன்றக் கூடியவர்களும், மனிதர்களூம், ஜின்களும்,  (அனைவரும்) உள்ளத் தூய்மைப் பெற்ற முத்தக்கீன்களாகி (இறையச்சமுடையவர்களாகி) விட்டாலும் அது என் அதிகாரத்தை சிறிதளவும் அதிகப்படுத்தி விடாது. 

என் அடியார்களே! உங்களுக்கு முன்னால் தோன்றியவர்களும், இனி தோன்றக் கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், ஜின்களும், (ஒன்று சேர்ந்து) மிகக் கெட்ட மனம் படைத்தவர்களாகி விட்டாலும் அதுவும் என் அதிகாரத்தை சிறிதளவும் குறைத்து விடாது!

என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், பின்னால் தோன்றக்கூடியவர்களும், மனிதர்களும், ஜின்களும் அனைவரும் பூமியில் ஓர் இடத்தில் நின்றுகொண்டு என்னிடம் கேட்கட்டும் . அவர்கள் கேட்கின்ற அனைத்தையும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுப்பேன். (அவ்வாறு கொடுப்பதால்) கடலில் ஓர் ஊசி முனையை நுழைத்து எடுத்தால் அதி கடல் நீர் ஒட்டிக் கொள்வதால் எவ்வளவு கடல் நீர் குறையுமோ அந்த அளவுக்குக்கூட என்னிடமுள்ள அருட்கொடைகள் குறைந்து விடாது.

என் அடியார்களே! இதோ உங்கள் செயல்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். பிறகு (மறுமையில்) இதன் கூலியை உங்களுக்கு நான் அளிப்பேன். நீங்கள் நற்கூலி பெற்றுக்கொண்டால், அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி காட்டுங்கள்; நல்லது அல்லாததை (தண்டனை) நீங்கள் பெற்றுக் கொண்டால் அதற்கான காரணம் நீங்கள்தாம்.

அறிவிப்பவர்: அபூதர் (ரழி) நூல்: முஸ்லிம்