Translate

Thursday, February 26, 2009

786 என்றால் என்ன?

786 என்றால் என்ன?
இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா?
என்ற பல கேள்விகள் மனதில் எழத்தான் செய்கின்றன ! இதற்கு விடையை சிறிது அலசி பார்ப்போம் !

நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர். உதாரணத்திற்கு
அலீஃப் ற்கு 1,
பே விற்கு 2,
ஜீம் மிற்கு 3
தால் லிற்கு 4.

''பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாக கூட்டினால் 786 வரும்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாக கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியுமா என்று கேள்வி எழுந்தால் , பின்வரும் திருகுரான் வசனப்படி கூடாது என்று தான் சொல்ல வேண்டும் .

இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு ) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; 49:11

எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒருவர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவர் குர்ஆனை ஓதியவர் என்று கருதப்பட மாட்டார்.

அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும் எழுதியவராகவும் ஆக மாட்டார். 786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது.
மோசமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்னா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.

அப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.

அவனது திருப் பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும் முஸ்லிமல்லாதவர்கள் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.
ஏனெனில் காபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் ''பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று எழுதியுள்ளார்கள். (பார்க்க அல்குர்ஆன் 27.30)

நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் ''பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்றே எழுதியுள்ளனர். (பார்க்க புகாரி 7,2941,4553)

நாமும் அது போல் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எல்லா நேரத்திலும் எழுத வேண்டும்.

நன்றி : சகோ ஜைனுலாபுதீன்

No comments: