Translate

Sunday, August 17, 2014

உளூவின் சட்டங்கள் பகுதி 6 - உளூவை நீக்குபவை


உளூச் செய்த பின்னால் நம்மிடமிருந்து ஏற்படும் சில நிகழ்வுகளால் உளூ நீங்கி விடும்.

 அவ்வாறு நீங்கி விட்டால் மீண்டும் உளூச் செய்து தான் தொழ வேண்டும் என்று திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன.

அவற்றைக் காண்போம்.

மலஜலம் கழித்தல் 

உளூச் செய்த பின் ஒருவர் மலம் கழித்தாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ அவர் செய்த உளூ நீங்கி விடும். அவர் மீண்டும் உளூச் செய்த பின்பே தொழ வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும்,  மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:43
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
அல்குர்ஆன் 5:6

மலம் கழித்த ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து தொழ வேண்டும் என்பதையும், தண்ணீர் கிடைத்தால் உளூச் செய்வது அவசியம் என்பதையும், ஏற்கனவே செய்த உளூவை மலம் கழித்தல் நீக்கி விடும் என்பதையும் இவ்விரு வசனங்கள் கூறுகின்றன.

சிறுநீர் கழிப்பது உளூவை நீக்கி விடும் என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்திக்கும் போது அறிய முடியும்.
'நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும் உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும்' எனவும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள். 
அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 89, நஸயீ 127, இப்னுமாஜா 471, அஹ்மத் 17396

சிறுநீர் கழித்தலும் உளூவை நீக்கி விடும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

காற்றுப் பிரிதல் உளூவை நீக்கும் 

மலஜலம் கழிப்பதால் உளூ நீங்குவது போலவே காற்றுப் பிரிவதாலும் உளூ நீங்கி விடும்.
'ஹதஸ் ஏற்பட்டவனின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். அப்போது ஹள்ரமவ்த்' என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் 'அபூஹுரைராவே! ஹதஸ் என்றால் என்ன?' என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி), 'சப்தத்துடனோ, அல்லது சப்தமின்றியோ காற்றுப் பிரிவது தான்' என்று விளக்கமளித்தார்கள்.
நூல்: புகாரீ 135, 176

காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டால்... 

சிலருக்குக் காற்றுப் பிரியாவிட்டாலும் காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்படும். அல்லது சிறுநீர் ஓரிரு சொட்டுக்கள் இறங்கி விட்டது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் ஆடையில் அதற்கான எந்த அடையாளமும் இருக்காது. இவர்கள் அதற்காக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. திட்டவட்டமாகத் தெரிந்தால் மட்டுமே உளூ நீங்கி விட்டதாக முடிவு செய்து கொள்ள வேண்டும்.
'தொழும் போது ஏதோ ஏற்படுவதாகத் தனக்குத் தோன்றுகிறது' என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், '(காற்றுப் பிரியும்) சப்தத்தைக் கேட்காமல், அல்லது அதன் நாற்றத்தை உணராமல் தொழுகையை விட்டுச் செல்ல வேண்டாம்' என்று பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
நூல்கள்: புகாரீ 137, முஸ்லிம் 540


சமைத்த உணவுகளை உண்பது உளூவை நீக்குமா? 

பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்பதால் உளூ நீங்காது என்பதில் மாறுபட்ட ஹதீஸ்கள் எதுவும் இல்லை. எனவே இவற்றை உண்பதால் உளூ நீங்காது.

சமைத்த பொருட்களை உண்பதால் உளூ நீங்குமா? என்பதில் மாறுபட்ட கருத்துக்களைத் தரும் ஹதீஸ்கள் உள்ளன.
'நெருப்பு தீண்டியவற்றின் காரணமாக (சமைக்கப்பட்ட உணவை உட்கொள்வதன் காரணமாக) உளூச் செய்யுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்போர்: அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்: முஸ்லிம் 528

சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் உளூச் செய்ய வேண்டும் என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறினாலும் இந்தச் சட்டம் நபி (ஸல்) அவர்களால் பின்னர் ரத்து செய்யப்பட்டு விட்டது.
சமைத்த பொருட்களைச் சாப்பிட்ட பின் (உளூச் செய்தல், உளூச் செய்யாமல் விட்டு விடுதல் ஆகிய) இரு காரியங்களில் உளூவை விட்டு விடுவதே நபி (ஸல்) அவர்கள் இறுதியாக நடைமுறைப்படுத்தியதாகும். 
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: நஸயீ 185, அபூதாவூத் 164

'சமைக்கப்பட்ட பொருட்களை உண்பதால் உளூச் செய்ய வேண்டும்' என்ற சட்டம் முன்னர் நடைமுறையில் இருந்ததையும், பின்னர் அது மாற்றப்பட்டு விட்டதையும் இந்த ஹதீஸ் மூலம் விளங்கலாம். எனவே சமைக்கப்பட்ட உணவை உண்பதால் உளூ நீங்காது.


ஒட்டகத்தின் இறைச்சியை உண்பது உளூவை நீக்கும்

எதைச் சாப்பிட்டாலும் உளூ நீங்காது என்றாலும் ஒட்டகத்தின் இறைச்சியைச் சாப்பிடுவது உளூவை நீக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'ஆட்டிறைச்சியை உண்பதால் உளூச் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ விரும்பினால் உளூச் செய்து கொள்! விரும்பினால் உளூச் செய்யாமல் இருந்து கொள்'என்று கூறினார்கள். 'ஒட்டகத்தின் இறைச்சியை உண்பதால் நாங்கள் உளூச் செய்ய வேண்டுமா?' என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'ஆம்! ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் உளூச் செய்' என்று நபி (ஸல்) விடையளித்தார்கள். 
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)
நூல்: முஸ்லிம் 539


மதீ' வெளியானால் உளூ நீங்கும் 

ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ' - இச்சை நீர் எனப்படும். இது இச்சையினால் ஏற்படும் நீர் தானே தவிர இந்திரியம் அல்ல.
மலஜலம் கழித்தல், காற்றுப் பிரிதல் ஆகியவை உளூவை நீக்குவது போலவே இந்த மதீ' எனும் இச்சை நீர் வெளிப்படுவதும் உளூவை நீக்கும்.

அதிக அளவில் மதீ' வெளிப்படக் கூடியவனாக நான் இருந்தேன். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு மிக்தாத் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். 'அதற்காக உளூச் செய்ய வேண்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். 
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: புகாரீ 132, முஸ்லிம் 458

'ஆணுறுப்பைக் கழுவி விட்டு உளூச் செய்து கொள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ 269வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

வாந்தி எடுத்தால் உளூ நீங்குமா? 

வாந்தி எடுத்தால் உளூ நீங்கும் எனக் கூறும் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானது அல்ல. எனவே வாந்தி எடுத்தால் உளூ நீங்காது.


இரத்தம் வெளியேறுதல் 

உளூச் செய்த பின்னர் உடலிலிருந்து இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்கும் எனக் கூறும் ஹதீஸ்கள் சில உள்ளன. அவையனைத்தும் பலவீனமானவையாகும். எனவே இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்காது என்பதே சரியானதாகும்.


பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா? 

ஆண்கள் பெண்களைத் தொட்டாலோ, அல்லது பெண்கள் ஆண்களைத் தொட்டாலோ அவர்களின் உளூ நீங்கி விடுமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ,பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும்,கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:43
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும்,தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
அல்குர்ஆன் 5:6

இவ்விரு வசனங்களிலும் பெண்களைத் தீண்டினால் உளூ நீங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தீண்டுதல் என்ற சொல்லின் நேரடிப் பொருள் தொடுதல் என்பது தான். எனவே பெண்களைத் தொட்டால் உளூ நீங்கி விடும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
தீண்டுதல் என்பதன் பொருள் தொடுவது தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆயினும் தீண்டுதல் என்ற சொல்லைப் பெண்களுடன் இணைத்துக் கூறும் போது சில நேரங்களில் தொடுதல் என்றும் பொருள் கொள்ள முடியும். சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடுதல் என்றும் பொருள் கொள்ள முடியும்.
இந்த வசனங்களில், 'பெண்களைத் தீண்டினால்' என்ற சொல்லுக்கு பெண்களுடன் உடலுறவு கொண்டால் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்று மற்றும் சிலர் வாதிடுகின்றனர்.

இரண்டாவது சாராரின் கருத்தை வலுப்படுத்தும் வேறு சான்றுகள் இல்லாவிட்டால் முதல் சாராரின் கூற்றையே நாம் தேர்வு செய்தாக வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் நேரடிப் பொருளின் அடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

இரண்டாவது சாராரின் கருத்தை வலுப்படுத்தும் புறச்சான்றுகள் பல உள்ளதால் பெண்களைத் தீண்டினால்' என்பதற்கு பெண்களுடன் உடலுறவு கொண்டால்' என்று இவ்விரு வசனங்களுக்கும் பொருள் கொள்வது தான் பொருத்தமானது.
'நான் நபி (ஸல்) அவர்களுக்கும், கிப்லாவுக்கும் குறுக்கே படுத்துக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாவுக்குச் செல்லும் போது என் கால்களைக் குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன்' என்று
ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நூல்கள்: புகாரீ 519, முஸ்லிம் 796

நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது நீங்களாகவே கால்களை மடக்கிக் கொள்ளலாமே? அவர்கள் காலில் விரலால் குத்தும் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்று எழும் கேள்விக்கும் - இக்கேள்வியை யாரும் கேட்காதிருந்தும் - ஆயிஷா (ரலி) விடையளித்துள்ளார்கள். 'அந்தக் காலத்தில் எங்கள் வீடுகளில் விளக்குகள் கிடையாது' என்பது தான் அந்த விடை!

பார்க்க புகாரீ: 382, 513

வீடு முழுவதும் இருட்டாக இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யப் போவதை விரலால் குத்தினால் தான் அறிந்து கொள்ள முடியும் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கின்றது.

இந்த ஹதீஸைக் கவனத்தில் வைத்துக் கொண்டு மேற்கண்ட வசனங்களை நாம் ஆராய்வோம். 

பெண்களைத் தொட்டால் உளூ நீங்கும் என்பது அந்த வசனங்களின் பொருளாக இருந்தால் நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியின் கால்களைத் தொட்டிருக்க மாட்டார்கள். தொட்டவுடன் தொடர்ந்து தொழுதிருக்கவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆனின் ஒரு வசனத்திற்கு என்ன பொருள் கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களின் விளக்கம் தான் இதற்குத் தீர்வாக முடியும்.

தமது மனைவியின் மேல் தற்செயலாகக் கைகள் பட்டன என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. 'கால்களை மடக்கிக் கொள்' என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக வேண்டுமென்றே அவர்கள் தமது மனைவியைத் தொட்டிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. எனவே மேற்கண்ட வசனத்தில் பெண்களைத் தீண்டினால்' என்பதற்கு, பெண்களைத் தொட்டால்'என்று பொருள் கொள்வது பொருத்தமாகாது.

இந்த ஹதீஸைப் பார்த்த பிறகும் சிலர் புதுமையான விளக்கத்தைக் கூறி தங்களின் கருத்தை நியாயப்படுத்த முனைகின்றனர்.

ஆயிஷா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் நேரடியாகத் தொட்டார்கள் என்று இதற்கு அர்த்தம் இல்லை. அவர்கள் மீது ஆடை இருந்திருக்கும்; அந்த ஆடையின் மேல் நபி (ஸல்) அவர்கள் குத்தியிருக்கலாம் அல்லவா? என்பது இவர்கள் தரும் புதுமையான விளக்கம்.

யாரும் கணவருடன் படுத்திருக்கும் போது முழுமையாக உடலை மறைத்துக் கொள்வதில்லை. மேலும் கால்களையும் மூடிக் கொண்டு படுப்பதில்லை. அப்படியே படுத்திருந்தாலும் தூக்கத்தில் ஆடைகள் விலகியிருப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. மேலும் அங்கே வெளிச்சமாக இருந்திருந்தால் ஆடையால் மூடப்பட்ட இடத்தைப் பார்த்து விரலால் குத்தினார்கள் என்று கருத முடியும். விளக்குகள் இல்லாமல் இருட்டாக இருந்ததால் காலில் ஆடை கிடக்கின்றதா?இல்லையா? என்று தேடிப் பார்த்து தமது விரலால் குத்தவில்லை என்பது தெளிவாகின்றது எனவே பெண்களைத் தொட்டால் உளூ முறியாது என்பதை அறியலாம்.


தூக்கம் உளூவை நீக்குமா? 

தூங்குவதால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

சில ஹதீஸ்கள் தூங்கினால் உளூ நீங்கி விடும் என்றும் சில ஹதீஸ்கள் நீங்காது என்றும் தெரிவிக்கின்றன.
காலுறை அணிந்தவர்கள் மலஜலம் கழித்தாலோ, தூங்கினாலோ அவர்கள் மீண்டும் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்கள்: நஸயீ 127, அஹ்மத் 17396, 17401, திர்மிதீ 89, 3458, 3459, இப்னுமாஜா 471

மலஜலம் கழிப்பது எவ்வாறு உளூவை நீக்குமோ அவ்வாறே தூக்கமும் உளூவை நீக்கும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. இதற்கு மாற்றமாகப் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.
எனது சிறிய தாயார் (நபிகள் நாயகத்தின் மனைவி) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓர் இரவு நான் தங்கினேன். நபி (ஸல்) அவர்களின் இடது புறத்தில் நான் நின்று கொண்டேன். என் கையைப் பிடித்து தமது வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள். நான் தூங்கி வழியும் போது என் காது சோனையைப் பிடிப்பார்கள். 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1277

இந்த இரண்டு ஹதீஸ்களையும் ஆராயும் போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நின்று கொண்டு தூங்கியது நிச்சயமாக ஆழ்ந்த தூக்கமாக இருக்காது; அரைகுறை தூக்கமாகத் தான் இருந்திருக்கும். எனவே இரண்டு ஹதீஸ்களையும் இணைக்கும் வண்ணம் 'ஆழ்ந்த தூக்கம் உளூவை நீக்கும்; அரைகுறை தூக்கம் உளூவை நீக்காது'என்று முடிவு செய்யலாம்.


மர்மஸ்தானத்தைத் தொடுவது உளூவை நீக்குமா? 

ஆண்களோ, பெண்களோ உளூச் செய்த பின்னர் தங்களின் மர்மஸ்தானத்தைத் தொட்டால் உளூ நீங்குமா என்பதில் அறிஞர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

வேண்டுமென்றோ, மறதியாகவோ, நம்மை அறியாமலோ எப்படித் தொட்டாலும் உளூ நீங்கி விடும் என்று சிலர் கூறுகின்றனர்.
எப்படித் தொட்டாலும் உளூ நீங்காது என்று சிலர் கூறுகின்றனர்.

வேண்டுமென்று தொட்டால் உளூ நீங்கும்; மறதியாகத் தொட்டாலோ, நம்மை அறியாமல் மர்மஸ்தானத்தில் கை பட்டாலோ உளூ நீங்காது என்று மற்றும் சிலர் கூறுகின்றனர்.

இச்சையுடன் தொட்டால் உளூ நீங்கி விடும்; அவ்வாறில்லாமல் தொட்டால் உளூ நீங்காது என்று இன்னும் சிலர் கூறுகின்றனர்.

மர்மஸ்தானத்தை நேரடியாகத் தொட்டால் உளூ நீங்கும்; மர்மஸ்தானத்தின் மீது துணி இருக்கும் நிலையிலோ,கைகளில் உறை அணிந்துள்ள நிலையிலோ தொட்டால் உளூ நீங்காது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

இந்தப் பிரச்சனையில் மாறுபட்ட கருத்துடைய ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது தான் கருத்து வேறுபாட்டுக்குக் காரணமாகும்.

யாரேனும் தனது ஆணுறுப்பைத் தொட்டால் உளூச் செய்யாமல் தொழக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: ஸஃப்வானின் மகள் புஸ்ரா (ரலி)
நூல்கள்: திர்மிதீ 77, நஸயீ 163, அபூதாவூத் 154, இப்னுமாஜா 472, அஹ்மத் 26030,


இந்த ஹதீஸ் ஆண்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது என்றாலும் இச்சட்டத்தில் ஆண்களும், பெண்களும் சமமானவர்களே என்ற கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன.
'ஆண்களில் யாரேனும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவர் உளூச் செய்ய வேண்டும்; பெண்களில் யாரேனும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவரும் உளூச் செய்ய வேண்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)
நூல்கள்: தாரகுத்னீ 1/147, பைஹகீ 1/132, அல்முன்தகா 1/18, அஹ்மத் 6779

ஆண்களாயினும், பெண்களாயினும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவர்களின் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூச் செய்து விட்டுத் தொழ வேண்டும் என்பதை இந்த நபிமொழிகள் தெளிவாக அறிவிக்கின்றன.
உங்களில் ஒருவர் திரை ஏதுமின்றி தமது உறுப்பைக் கையால் தொட்டால் அவர் உளூச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: இப்னுஹிப்பான் 3/401, தப்ரானியின் அவ்ஸத் 2/237 தப்ரானியின் ஸகீர் 1/84

மேற்கண்ட ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனாலும் இந்த ஹதீஸின் கருத்துக்கு மாற்றமான கருத்துடைய ஹதீஸ்களும் உள்ளன.
'தொழும் போது ஒருவர் தனது மர்மஸ்தானத்தைத் தொடுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?' என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அதுவும் உனது மற்ற உறுப்புக்களைப் போன்ற உறுப்பு தானே?' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: தல்க் இப்னு அலீ (ரலி)
நூல்கள்: நஸயீ 165, திர்மிதீ 78, அபூதாவூத் 155, இப்னுமாஜா 476, அஹ்மத் 15700
இந்தக் கருத்துடைய ஹதீஸ் இப்னு ஹிப்பான்  3/403,  தாரகுத்னீ  1/149,  தப்ரானியின் அல்கபீர் 8/330 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரப்பூர்வமான இரண்டு ஹதீஸ்கள் ஒன்றோடொன்று மோதுவது போல் தோற்றமளித்தால் அவ்விரு செய்திகளையும் முறையில் இணைத்து முடிவு செய்யலாம்.

ஒருவன் தனது மர்மஸ்தானத்தைத் தொடுவது இரண்டு வகைகளில் ஏற்படலாம்.

மற்ற உறுப்புகளைப் போன்ற உறுப்பாகக் கருதி தொடுவது முதல் வகை.
அந்த உறுப்பின் தனித் தன்மையைக் கருதி தொடுவது இரண்டாவது வகை.

முதல் வகையான தொடுதலால் உளூ நீங்காது.

இரண்டாவது வகையான தொடுதலால் உளூ நீங்கும் என்று முடிவு செய்யலாம்.

உடலில் குறிப்பிட்ட இடத்தில் எறும்பு கடித்தால் அந்த இடத்தில் நம் கையை வைத்து சொறிந்து கொள்கிறோம். இது போல மர்மஸ்தானத்தில் எறும்பு கடிப்பது போன்றோ, ஏதோ ஒன்று ஊர்வது போலவோ தோன்றும் போது அந்த இடத்தையும் சொறிந்து கொள்கிறோம். அந்த உறுப்பின் தனித்தன்மை கருதி அவ்வாறு செய்வதில்லை. மற்ற உறுப்புக்களைப் போல் கருதியே இதைச் செய்கிறோம். இவ்வாறு தொட்டால் உளூ நீங்காது.

உள்ளாடை அணியும் போது நம்மையும் அறியாமல் அவ்வுறுப்பின் மீது நமது கை பட்டு விடலாம். மற்ற உறுப்புகளில் எவ்வாறு கை படுகின்றதோ அவ்வாறு பட்டு விட்டது என்று தான் இதை எடுத்துக் கொள்வோம். இவ்வாறு பட்டாலும் உளூ நீங்காது.

இவ்வாறு இல்லாமல் இச்சையுடன் தொட்டால் மற்ற உறுப்பைப் போல் தொட்டதாகக் கருத முடியாது. அவ்வுறுப்பின் தனித்தன்மை கருதி தொட்டதாகத் தான் கருத முடியும். இப்படித் தொட்டால் உளூ நீங்கி விடும்.
'அதுவும் உனது மற்ற உறுப்புக்களைப் போன்றது தானே' என்று நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வாசகத்திலிருந்து இந்தக் கருத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆணுறுப்பைத் தொட்டால் உளூ நீங்கும் என்பது இச்சையுடன் தொடுவதைத் தான் குறிக்கின்றது.

உளூ நீங்காது என்பது சாதாரணமாகத் தொடுவதைக் குறிக்கின்றது என்று கருதும் போது இரண்டு ஹதீஸ்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.


உளூ அடிக்கடி நீங்கும் நோயாளிகள்


அடிக்கடி சிறுநீர் சொட்டுக்கள் விழுதல், அடிக்கடி காற்றுப் பிரிதல், தொடர் உதிரப் போக்கு போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு உளூவை நீக்கும் காரியங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
இத்தகைய உபாதைகள் உடையவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு தடவை உளூச் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்த பின் அவர்களிடமிருந்து மேற்கண்ட உபாதைகளின் வெளிப்பாடு இருந்து கொண்டே இருந்தாலும் அதனால் உளூ நீங்காது. அடுத்தத் தொழுகை நேரம் வந்தவுடன் மீண்டும் உளூச் செய்ய வேண்டும்.
தொடர் உதிரப் போக்குடைய ஃபாத்திமா என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார்.'அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் இரத்தப் போக்குடையவளாக இருக்கின்றேன். நான் தூய்மையாவதேயில்லை. எனவே தொழுகைகளை நான் விட்டு விடலாமா?' என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'கூடாது! அது மாதவிடாய் அல்ல! மாறாக ஒரு நோயாகும். எனவே (வழக்கமான) மாதவிடாய் நேரம் வந்ததும் தொழுகையை விட்டு விடு! அது நின்றவுடன் இரத்தத்தைக் கழுவி விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து தொழு' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 228
இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட உபாதைகள் உள்ளவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து கொள்ள வேண்டும்.

Saturday, August 16, 2014

உளூவின் சட்டங்கள் பகுதி 5 - தயம்மும் சட்டங்கள்


தொழுகை நேரம் வந்து உளூச் செய்வதற்கான தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீர் கிடைத்து அதைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் அதைக் காரணம் காட்டி தொழாமல் இருக்க முடியாது. மாறாக தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி உளூவுக்கு மாற்றுப் பரிகாரமான தயம்மும் செய்து அதன் பின்பே தொழ வேண்டும்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணமாகப் புறப்பட்டோம். 'பைதா' என்ற இடத்தை நாங்கள் அடைந்த போது எனது கழுத்து மாலை அறுந்து விட்டது. அதைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் அங்கே தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினார்கள். அவர்களின் அருகில் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை. மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, '(உங்கள் மகள்) ஆயிஷா செய்ததைப் பார்த்தீர்களா? நபிகள் நாயகத்தையும் மக்களையும் தங்க வைத்து விட்டார். அவர்கள் அருகில் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தலையை எனது தொடையில் வைத்து உறங்கிக் கொண்டிருந்த போது அபூபக்ர் (ரலி) வந்தார்கள். 'நபி (ஸல்) அவர்களுக்கும் மக்களுக்கும் தடங்கலை ஏற்படுத்தி விட்டாய். அவர்களருகிலும் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை' என்று கூறி என்னைக் கண்டித்தார்கள். அவர்கள் எதைக் கூற வேண்டும் என்று அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் கூறினார்கள். எனது இடுப்பிலும் தமது கையால் குத்தினார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தொடை மீது படுத்திருந்ததால் நான் அசையாமல் இருந்தேன். தண்ணீர் கிடைக்காத நிலையில் நபி (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தார்கள். அப்போது தான் தயம்மும் பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான். மக்கள் தயம்மும் செய்தனர். நான் அமர்ந்திருந்த ஒட்டகத்தை எழுப்பிய போது அதன் அடியில் என் கழுத்து மாலை கிடைத்தது. 
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 334, முஸ்லிம் 550

தயம்மும் பற்றிய வசனம் திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் உள்ளது. அதைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் இங்கே குறிப்பிடுகின்றார்கள். அந்த வசனங்கள் வருமாறு:

Friday, August 15, 2014

அல்லாஹ் சுபஹானஹுதாலாஹ் கூறம் ஒற்றுமை எது

அல்லாஹ் சுபஹானஹுதாலாஹ்  கூறம் ஒற்றுமை எது


மனித சமுதாயமே) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்: உங்களில் சிலரே நல்லுணர்வு பெறுகின்றீர்கள். ( 7:3) 

நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" நீங்கள் (அதிலிருந்து) பிரிந்து விடவேண்டாம். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடை (நிஃமத்)களை எண்ணிப் பாருங்கள். (3:103)


ஓர் ஊரில் அனைவரும் 
 
வரதட்சணை வாங்கினால், அல்லது அனைவரும் மது அருந்தினால் , 
அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா?
என்று கூட சிந்திக்க மாடீர்களா?.



நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால்,
 
இதுவல்ல அல்லாஹ் கூறும் ஒற்றுமை .

அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபிமொழிகளும் 
 
தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபிவழியைப் பற்றிப் 
 
பிடியுங்கள் என்று தான் அல்லாஹ்  திருமறையிலே கூறுகின்றான் .
'குர்ஆன், ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால்
ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்' சொல்லாமல் ஒற்றுமையாக இருங்கள் என்றால் அப்படிப்பட்ட அல்லாஹ்வுக்கு முரணான போலி ஒற்றுமை தேவை இல்லை .
அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப்பிடிக்க முன் வராவிட்டாலும் நாம் பிடியை விட்டு விடக் கூடாது.

அவர்களையும் 

பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.

Thursday, August 14, 2014

உளூவின் சட்டங்கள் பகுதி 4 - தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்தல்

தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்தல் 

காலுறையின் மேல் மஸஹ் செய்யும் சலுகை போலவே தலைப்பாகை அணிந்தவர்களும், தலையை மறைக்கும் துணியை தலையின் மேல் போட்டிருக்கும் ஆண்களும் பெண்களும் தலைக்கு மஸஹ் செய்வதற்குப் பதிலாக தலைப்பாகையின் மீதும் தலைத் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும் காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.  
அறிவிப்பவர்: அம்ரு பின் உமய்யா (ரலி)
நூல்: புகாரீ 205

தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்வது போல் தலை முக்காட்டின் மீதும் தலையின் மேல் போட்டிருக்கும் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலை முக்காட்டின் மீதும் மஸஹ் செய்தனர். 
அறிவிப்பவர்: பிலால் (ரலி)
நூல்: முஸ்லிம் 413

முக்காடு என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில், கிமார்' என்ற சொல் அரபு மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் ஆண்கள் அணியும் தலைத் துணியையும், பெண்கள் அணியும் தலைத் துணி - அதாவது முக்காட்டையும் குறிக்கும்.

பெண்களின் முக்காட்டைக் குறிக்க இச்சொல் திருக்குர்ஆனில் 24:31 வசனத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
இதில் இடம் பெற்றுள்ள 'குமுரிஹின்ன' என்பது கிமார்' என்பதன் பன்மையாகும்.
புகாரீ 5825, 6568, 3321, 3578, 5381, 6688 ஆகிய ஹதீஸ்களிலும் கிமார்' என்பது பெண்களின் முக்காட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதை விரிவாக நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் தலைப்பாகை மற்றும் தலைத் துணியின் மேல் மஸஹ் செய்வது ஆண்களுக்கு மட்டுமே உரியது போல் பலரும் எழுதியுள்ளனர். பெண்களுக்கும் இந்தச் சலுகை உள்ளது என்று எவரும் கூறியதாகத் தெரியவில்லை.

காலுறைகள் மீது மஸஹ் செய்வது எவ்வாறு ஆண்களுக்கும், பெண்களுக்கும் உரிய சலுகையோ அது போலவே தலையில் போட்டிருக்கும் முக்காட்டின் மேல் மஸஹ் செய்வதும் இருவருக்கும் பொதுவானது தான்.
மேலும் தலைப்பாகையை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கழற்ற வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. தப்ரானியில் இவ்வாறு ஹதீஸ் உள்ளது. அதை அபூஸலமா என்ற மர்வான் அறிவிக்கின்றார். இவர் ஏற்கத்தக்கவர் அல்ல என்று புகாரீ, அஹ்மத் பின் ஹம்பல், இப்னு அபீஹாத்தம் மற்றும் பலர் கூறுகின்றனர்.
எனவே காலுறைகளுக்குரிய நிபந்தனைகள் ஏதும் தலைப்பாகை மற்றும் முக்காடுகளுக்குக் கிடையாது.

உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.

உளூச் செய்து முடித்த பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓதுவது நபிவழியாகும்.
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு 
பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன்.
அல்லது
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு 
பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன்.

உளூச் செய்த பின் மேற்கண்டவாறு யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும். அவற்றில் அவர் விரும்புகின்ற வாசல் வழியாக நுழையலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 345

பகுதி 1பகுதி 2 , பகுதி 3 , பகுதி 4

Wednesday, August 13, 2014

உளூவின் சட்டங்கள் பகுதி 3 - காலுறைகள் மீது மஸஹ் செய்தல்

காலுறைகள் மீது மஸஹ் செய்தல்

 உளூச் செய்யும் போது கடைசியாக இரு கால்களையும் கரண்டை வரை கழுவ வேண்டும் என்பதை உரிய ஆதாரங்களுடன் முன்னர் கண்டோம்.
காலுறை அணிந்திருப்பவர்கள் கால்களைக் கழுவாமல் காலுறையின் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம் என்பது இந்தச் சட்டத்தில் உள்ள விதி விலக்காகும்.
நான் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது முகத்தையும், இரு கைகளையும் கழுவினார்கள். தலைக்கு மஸஹ் செய்தார்கள். இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள். 
அறிவிப்பவர்: முகீரா (ரலி)
நூல்கள்: புகாரீ 182, முஸ்லிம் 404

பெண்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாமா? 

பெண்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்வது கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இது தவறாகும். நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிய எந்த வணக்கமும் இரு பாலருக்கும் உரியது தான். பெண்களுக்கு இல்லை என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் சொல்யிருக்க வேண்டும். அவ்வாறு ஹதீஸ்களில் கூறப்படாததே இச்சலுகை பெண்களுக்கும் பொருந்தும் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்.
மேலும் காலுறைகள் மீது மஸஹ் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பது அதைக் கழற்றுவதால் ஏற்படும் சிரமத்துக்காகவே! அச்சிரமம் இரு பாலருக்கும் பொதுவானது என்பதால் இச்சலுகையும் பொதுவானது தான்.

காலுறைகள் மீது மஸஹ் செய்யவதற்குரிய நிபந்தனைகள் 

ஆண்களும் பெண்களும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்ற இச்சலுகைக்கு சில நிபந்தனைகள் உள்ளன.
காலுறைகளை அணிவதற்கு முன் கால்களைக் கழுவியிருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனையாகும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றிய போது அவர்களின் காலுறைகளை நான் கழற்ற முயன்றேன். அப்போது அவர்கள், 'அவற்றை விட்டு விடு! ஏனெனில் கால்கள் தூய்மையாக இருந்த நிலையில் தான் அவற்றை நான் அணிந்திருக்கிறேன்' என்று கூறி அவற்றின் மீது மஸஹ் செய்தார்கள். 
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல்கள்: புகாரீ 206, முஸ்லிம் 408

காலுறைகள் அணிவதற்கு முன் கால்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸிருந்து அறியலாம்.

கால்களில் வெளிப்படையாகத் தெரியும் அசுத்தங்கள் ஏதும் ஒட்டியிருந்து அதன் மேல் காலுறை அணிந்து கொண்டால் மஸஹ் செய்ய முடியாது. காலுறையை அணியும் போது உளூவுடன் இருக்க வேண்டும்.
தூய்மையாக இருக்க வேண்டும் என்பது இவ்விரண்டையும் குறிக்கும்.
ஒருவர் உளூச் செய்து கால்களைக் கழுவுகின்றார். உடனே காலுறைகளை அணிந்து கொள்கின்றார் என்றால் அதன் பின்னர் அவர் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் அவர் மலஜலம் கழித்தாலும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம்.
ஒருவர் லுஹர் நேரத்தில் உளூச் செய்கின்றார். அப்போது கால்களையும் கழுவுகின்றார். இதன் பின்னர் அஸர் வரை அவரிடமிருந்து உளூவை நீக்கும் காரியங்கள் ஏதும் நிகழவில்லை. இந்த நிலையில் அஸர் நேரத்தில் காலுறைகளை அணிகின்றார் என்றால் இவரும் இதன் பின்னர் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். காலுறை அணிவதற்குச் சற்று முன்னர் தான் கால்களைக் கழுவ வேண்டும் என்று கட்டாயம் இல்லை. காலுறை அணியக் கூடிய நேரத்தில் அவருக்கு உளூ இருக்க வேண்டும் என்பது தான் கட்டாயம்.

சலுகையின் கால அளவு

உளூவுடனும், கால் அசுத்தம் இல்லாத நிலையிலும் காலுறை அணிந்தவர், காலமெல்லாம் காலுறைகள் மீது மஸஹ் செய்ய முடியாது.
தினமும் ஒரு தடவையாவது காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவிக் கொள்ள வேண்டும். இன்று காலை 10மணிக்கு உளூச் செய்த நிலையில் ஒருவர் காலுறை அணிந்தால் நாளை காலை 10 மணி வரை அவர் எத்தனை தடவை உளூச் செய்தாலும் கால்களைக் கழுவத் தேவையில்லை. காலுறைகள் மீது மஸஹ் செய்வதே போதும். 24மணி நேரம் கடந்து விட்டால் கால்களைக் கழுவி விட்டு உளூவுடன் காலுறையை அணிந்து கொள்ள வேண்டும்.
பயணிகளாக இருப்பவர்களுக்கு இதில் கூடுதல் சலுகை உள்ளது. அவர்கள் உளூவுடன் காலுறை அணிந்தால் காலுறை அணிந்த நேரத்தில் இருந்து மூன்று நாட்கள் (72 மணி நேரம்) காலுறையைக் கழற்றாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். பயணத்தில் இருப்பவர்கள் மூன்று நாட்களுக்குப் பின் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவிவிட்டு உளூவுடன் காலுறையை அணிய வேண்டும்.
காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேள்வி கேட்கச் சென்றேன். அதற்கவர்கள், 'அலீ பின் அபீதாபிடம் சென்று கேள். அவர் தான் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராக இருந்தார்' என்று கூறினார்கள். நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். 'பயணிகளுக்கு மூன்று பகல் மூன்று இரவு எனவும், உள்ளூரில் இருப்பவர்களுக்கு ஒரு பகல் ஓர் இரவு எனவும் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்' என்று அலீ (ரலி) விடையளித்தார்கள். 
அறிவிப்பவர்: ஷுரைஹ்
நூல்: முஸ்லிம் 414

குளிப்பு கடமையானால் இச்சலுகை இல்லை


குளிப்பு கடமையாகி விட்டால் குளிக்கும் போது காலுறைகளைக் கழற்ற வேண்டும். கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது உடல் முழுவதும் கழுவி விட்டு காலை மட்டும் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்தால் கடமையான குளிப்பு நிறைவேறாது.
நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும், உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும் எனவும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். 
அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 89, நஸயீ 127, இப்னுமாஜா 471, அஹ்மத் 17396

காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்தல் 

நபி (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன். 
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 140, அஹ்மத் 699

எவ்வாறு மஸஹ் செய்வது? 

நபி (ஸல்) அவர்கள் தலைக்கு மஸஹ் செய்தது பற்றி அவர்கள் வழியாக விரிவான செயல் விளக்கம் நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் காலுறையின் மேற்பரப்பில் மஸஹ் செய்தார்கள் என்று மட்டுமே கூறப்படுகின்றது. எவ்வாறு என்று விளக்கமாகக் கூறப்படவில்லை.
எனவே தான் ஐந்து விரலால் மஸஹ் செய்ய வேண்டும்; மூன்று விரல்களால் மஸஹ் செய்ய வேண்டும்;காலுறையின் அதிகமான பகுதிகள் மீது மஸஹ் செய்ய வேண்டும் என்றெல்லாம் பலவிதமாக அறிஞர்கள் கருத்துக் கூறியுள்ளனர். ஆயினும் நபி (ஸல்) வழியாக குறிப்பிட்ட அளவு எதுவும் கூறப்படாததால் மஸஹ்' என்று சொல்லப்படும் அளவுக்கு காலுறையின் மீது தடவ வேண்டும் என்று மக்களிடமே அந்த உரிமையை விட்டு விட வேண்டும். இப்படித் தான் செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட முறையைத் திணிக்கக் கூடாது.
இது தவிர காலுறைகள் தோல் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் இன்னும் பல விதிகளைச் சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இவற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை.

Monday, August 11, 2014

உளூவின் சட்டங்கள் பகுதி 2 - உளூ செய்யும் முறை

உளூச் செய்யும் முறை நிய்யத் எனும் எண்ணம்

ஒருவர் எந்த அமலைச் செய்தாலும் அந்த அமலைச் செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வேண்டும். அந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது.
ஒருவர் சுப்ஹ் முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருக்கின்றார்; ஆனால் நோன்பு நோற்கும் எண்ணம் அவருக்கு இல்லை; நேரமின்மையின் காரணமாகவோ, மருத்துவர்களின் ஆலோசனைப்படியோ இவ்வாறு இருக்கின்றார் என்றால், நோன்பாளி கடைப்பிடிக்கும் அனைத்தையும் அவர் கடைப்பிடித்த போதும் நோன்பு நோற்கும் எண்ணம் இல்லாததால் அவர் நோன்பு நோற்றவராக மாட்டார்.

Saturday, August 9, 2014

உளூவின் சட்டங்கள் பகுதி 1 - எந்தெந்த நீரில் உளூ செய்யாலாம்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் இர்ரஹீம் ,

இன்ஷாஹ் அல்லா , உளூவின் அவசியத்தை முதலில் பார்த்துவிட்டு பிறகு எப்படி பட்ட நீரில் உளூ செய்யலாம் என்பதனை பார்போம்.

தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவி, தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். 
அல்குர்ஆன் 5:6

'உளூ நீங்கியவர் உளூச் செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 135, முஸ்லிம் 330.

தண்ணீர் - எந்தெந்த நீரில் உளூ செய்யாலாம்


உளூச் செய்வதற்குத் தண்ணீர் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஆயினும் உளூ செய்யும் தண்ணீர் குறித்து தவறான நம்பிக்கைகள் சில முஸ்லிம்களிடம் நிலவுகின்றன.



ஆறு, குளம், கண்மாய், ஏரிகள், கிணறுகள் ஆகியவற்றிலும் மழை நீர், நிலத்தடி நீர் போன்றவற்றாலும் உளூச் செய்யலாம்; குளிக்கலாம் என்பதை அனைவரும் சரியாகவே விளங்கி வைத்துள்ளனர். இவற்றுக்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை.

கடல் நீர்


கடல் நீரால் உளூச் செய்யக் கூடாது என்ற கருத்து சிலரிடம் காணப்படுகின்றது.
'கடல் நீரில் அதிக அளவில் உப்பு கலந்திருப்பதால் அது தண்ணீரின் கணக்கில் சேராது' என்று அவர்கள் நினைக்கின்றனர். இது தவறாகும்.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கடல் நீரால் உளூச் செய்ய அனுமதியளித்துள்ளனர். 
நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அதன் தண்ணீர் தூய்மை செய்யத்தக்கது;அதில் செத்தவையும் உண்ண அனுமதிக்கப்பட்டவை' என்று பதிலளித்தார்கள்.  
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 382
எனவே கடல் நீரால் தாராளமாக உளூச் செய்யலாம். கடமையான குளிப்பு உட்பட அனைத்துக் குளிப்புகளையும் நிறைவேற்றலாம். 

பயன்படுத்திய தண்ணீர்

'சிறிய பாத்திரங்களில் உளூச் செய்யும் போது தண்ணீர் அப்பாத்திரத்தில் தெறித்து விட்டால் அத்தண்ணீர் அசுத்தமாகி விடு'ம் என்ற நம்பிக்கை சிலரிடம் காணப்படுகின்றது. சில மத்ஹப்களிலும் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. மேலும் சிறிய பாத்திரத்தில் கைகளை நுழைத்து தண்ணீரை எடுத்தால் அத்தண்ணீர் உளூச் செய்வதற்கான தகுதியை இழந்து விடும் எனவும் நம்புகின்றனர்.
உஸ்மான் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார்கள். தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை (பாத்திரத்தில்) விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர், 'எனது இந்த உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்று உஸ்மான் (ரலி) தெரிவித்தார்கள். 
அறிவிப்பவர்: ஹும்ரான்
நூல்: புகாரீ 160

உஸ்மான் (ரலி) அவர்கள் மணிக்கட்டு வரை கழுவிய பின் பாத்திரத்தில் கை விட்டு தண்ணீர் எடுத்துள்ளனர். அதன் மூலம் மற்ற உறுப்புகளைக் கழுவியுள்ளனர். இறுதியில் இவ்வாறு நபி அவர்கள் உளூச் செய்து காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 
இதே கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.
(புகாரீ 192)

நபி அவர்களின் செயல்முறை விளக்கம் மட்டுமின்றி வாய் மொழியாகவும் அவர்கள் அனுமதி அளித்ததற்குச் சான்றுகள் உள்ளன.
'உங்களில் ஒருவர் தூக்கத்திருந்து விழித்தால் உளூச் செய்யும் தண்ணீரில் கையை விடுவதற்கு முன் கையைக் கழுவிக் கொள்ளட்டும்; ஏனெனில் அவரது கை எங்கெங்கே பட்டது என்பதை அவர் அறிய மாட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 162

படக் கூடாத இடத்தில் கை பட்டிருக்கும் என்பதற்காகவே கையை நபி (ஸல்) அவர்கள் கழுவச் சொல்கின்றார்கள். இவ்வாறு கழுவி விட்டால் பாத்திரத்தில் கையை விட்டு தண்ணீர் எடுத்து உளூச் செய்யலாம் என்று தெளிவான அனுமதியை அளித்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் தெளிவான அனுமதியளித்த பின் அதை நிராகரிக்க எந்தக் காரணத்தை யார் கூறினாலும் ஏற்கத் தேவையில்லை.

மீதம் வைத்த தண்ணீர்

பெண்கள் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண்களும், ஆண்கள் மீதம் வைத்த தண்ணீரில் பெண்களும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையும் தவறாகும்.
'கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது நானும், நபி (ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் குளித்திருக்கின்றோம்' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நூல்: புகாரீ 263

கடமையான குளிப்பும் உளூவைப் போலவே மார்க்க அடிப்படையிலான தூய்மைப்படுத்துதல் ஆகும். ஒரு நேரத்தில் ஒரு பாத்திரத்தில் கணவன், மனைவி இருவரும் தண்ணீர் எடுத்துக் குளிக்கும் போது இருவர் மேனியில் பட்ட தண்ணீர் துளிகள் பாத்திரத்தில் விழாமல் இருக்காது. தண்ணீரை எடுப்பதற்காகக் கையைக் கொண்டு செல்லும் போது கையிருந்து பாத்திரத்தில் தண்ணீர் விழும். அப்படியிருந்தும் அதை நபி (ஸல்) அவர்கள் பொருட்படுத்தவில்லை.
எனவே உளூச் செய்யும் போதும், கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் ஒருவர் மீதம் வைத்த தண்ணீரை மற்றவர் பயன்படுத்துவது குற்றம் இல்லை என்பதை இதிருந்து விளங்கலாம்.

வீட்டுப் பிராணிகள் வாய் வைத்த தண்ணீர்


மனிதர்களை அண்டி வாழும் கோழி, சிட்டுக் குருவி, காகம், பூனை போன்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இதுவும் தவறாகும்.
அபூகதாதா (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். உடனே ஒரு பூனை வந்து அதைக் குடிக்க ஆரம்பித்தது. பூனை குடிப்பதற்கு ஏற்றவாறு பாத்திரத்தை அவர் சாய்த்தார். 'என் சகோதரர் மகளே! இதில் ஆச்சரியப்படுகிறாயா?' என்று கேட்டார். நான் ஆம் என்றேன். 'இவை அசுத்தமில்லை. இவை உங்களைச் சுற்றி வரக் கூடியவையாகும்' என்று நபி (ஸல்) கூறியதாகக் குறிப்பிட்டார்.
அறிவிப்பவர்: கப்ஷா
நூல்கள்: திர்மிதி 85, நஸயீ 67, அபூதாவூத் 68 பூனை வாய் வைத்தால் தண்ணீர் அசுத்தமாகாது என்பதும், அத்தண்ணீரில் உளூச் செய்யலாம் என்பதும் இதிருந்து தெரிகின்றது.
மேலும் 'இவை உங்களைச் சுற்றி வரக் கூடிய பிராணிகள்' என்ற வாக்கியம், காட்டில் வசிக்காமல் வீட்டைச் சுற்றி வரும் பிராணிகள் அனைத்துக்கும் பொருந்தும் என்பதை விளக்குகின்றது.
மனிதர்களுடன் அண்டி வாழும் பிராணிகளில் நாயைத் தவிர மற்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யலாம்.
'நாய் வாய் வைத்து விட்டால் ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவ வேண்டும்' என்று நபி (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: புகாரீ 172


சூடாக்கப்பட்ட தண்ணீர் 

சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும், வெந்நீரிலும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நினைக்கின்றனர்.
சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட தண்ணீரை நபி (ஸல்) தடுத்ததாகவும் அதனால் குஷ்ட நோய் வரும் என்று நபி (ஸல்) கூறியதாகவும் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் நபி (ஸல்) பெயரால்இட்டுக்கட்டப்பட்டவையாகும்.
காத் பின் இஸ்மாயீல், வஹப் பின் வஹப், ஹைஸம் பின் அதீ போன்றோர் தான் இது பற்றிய ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். இவர்கள் பெரும் பொய்யர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர்களுமாவர்.
எனவே சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும், நெருப்பால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும் உளூச் செய்ய எந்தத் தடையும் இல்லை.

வீட்டில் உளூச் செய்தல்

வீட்டில் உளூச் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டில் உளூச் செய்து விட்டுப் புறப்படுவதே சிறந்ததாகும். ஒருவர் உளூச் செய்த நிலையில் பள்ளிவாசலுக்குச் சென்றால் அவர் நடந்து செல்வது கூட வணக்கமாகக் கருதப்படும்.
'ஒருவர் தமது வீட்டிலும், கடை வீதியிலும் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்கு ஒரு படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகின்றான். ஒரு பாவத்தை அவரை விட்டும் நீக்குகின்றான். தொழுகையை எதிர்பார்த்து அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும் போது அவர் தொழுபவராகவே கருதப்படுவார். தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்குத் தொல்லை அளிக்காத வரையில் இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா! இவருக்கு அருள் புரி!' என்று வானவர்கள் கூறுகின்றனர்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 477, முஸ்லிம் 1059

பள்ளிவாசல் உளூச் செய்ய ஏற்பாடு செய்தல்

வீட்டில் உளூச் செய்ய வசதியுள்ளவர்கள் வீட்டிலேயே உளூச் செய்வது தான் சிறப்பு என்றாலும் அத்தகைய வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்காக, பள்ளிவாசன் சார்பில் ஏற்பாடு செய்வது குற்றமில்லை.

தொழுகை நேரம் வந்தது. பள்ளிவாசலுக்கு அருகில் யாருடைய இல்லங்கள் அமைந்திருந்தனவோ அவர்கள் உளூச் செய்ய (வீட்டிற்குச்) சென்றனர். சிலர் எஞ்சினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் கல் பாத்திரம் ஒன்று தண்ணீருடன் கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் தமது கையை வைத்தனர். நபி (ஸல்) அவர்களால் அதனுள் தமது கையை விரிக்க இயவில்லை. எனவே தமது விரல்களை இணைத்து அப்பாத்திரத்தில் வைத்தனர். எஞ்சிய அனைவரும் உளூச் செய்தனர்' என்று அனஸ் (ரலி) கூறினார்கள். '(அப்போது) எத்தனை பேர்கள் இருந்தனர்?' என்று அவர்களிடம் நான் கேட்டேன். 'எண்பது பேர்கள்' என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹுமைத்
நூல்: புகாரீ 3575

Monday, August 4, 2014

வேளாண்மையும் நிலக் குத்தகையும்

2320.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.  என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.  வேளாண்மைக் கருவிகளைத் துஷ்பிரயோகம் செய்வதால் விளையும் தீமைகளுக்கு அஞ்சுவதும், (வணிகம், வேளாண்மை இவற்றில் ஈடுபடுவதில்) விதிக்கப்பட்டுள்ள வரம்பை மீறுவதால் விளையும் (கேடுகளான இறைவனை மறத்தல், மார்க்கக் கடமைகளைப் புறக்கணித்தல் ஆகிய) தீமைகளுக்கு அஞ்சுவதும் (அவசியம்).
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 41. வேளாண்மையும் நிலக் குத்தகையும்

Sunday, August 3, 2014

காலத்தின் மதிப்பு

* ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

* ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

* ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!

* ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!

* ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!

* ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!

* ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!

* ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் வெற்றி பெற்ற
ஒருவரை கேட்டால் தெரியும்...!

-->நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பாருங்கள்.. ஓடுவது முள் அல்ல..! உங்களின் வாழ்க்கை...!!!

Friday, August 1, 2014

தொழுகையில் எற்படும் மறதி

1224. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.  அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, மக்களும் நபி(ஸல்) அவர்களோடு எழுந்துவிட்டார்கள். தொழுகை முடியும் தருவாயில் நாங்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்தபோது, அந்த இருப்பிலேயே ஸலாத்திற்கு முன் தக்பீர் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 22.

1225. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.  தொழுகை நடத்திய நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும்போது இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள். அதன்பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 22.

1226. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடம் தொழுகை அதிகமாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “என்ன விஷயம்?“ எனக் கேட்டார்கள். “நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுகை நடத்தினீர்கள்“ என ஒருவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 22.