தொழுகை நேரம் வந்து உளூச் செய்வதற்கான தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீர் கிடைத்து அதைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் அதைக் காரணம் காட்டி தொழாமல் இருக்க முடியாது. மாறாக தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி உளூவுக்கு மாற்றுப் பரிகாரமான தயம்மும் செய்து அதன் பின்பே தொழ வேண்டும்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணமாகப் புறப்பட்டோம். 'பைதா' என்ற இடத்தை நாங்கள் அடைந்த போது எனது கழுத்து மாலை அறுந்து விட்டது. அதைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் அங்கே தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினார்கள். அவர்களின் அருகில் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை. மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, '(உங்கள் மகள்) ஆயிஷா செய்ததைப் பார்த்தீர்களா? நபிகள் நாயகத்தையும் மக்களையும் தங்க வைத்து விட்டார். அவர்கள் அருகில் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தலையை எனது தொடையில் வைத்து உறங்கிக் கொண்டிருந்த போது அபூபக்ர் (ரலி) வந்தார்கள். 'நபி (ஸல்) அவர்களுக்கும் மக்களுக்கும் தடங்கலை ஏற்படுத்தி விட்டாய். அவர்களருகிலும் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை' என்று கூறி என்னைக் கண்டித்தார்கள். அவர்கள் எதைக் கூற வேண்டும் என்று அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் கூறினார்கள். எனது இடுப்பிலும் தமது கையால் குத்தினார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தொடை மீது படுத்திருந்ததால் நான் அசையாமல் இருந்தேன். தண்ணீர் கிடைக்காத நிலையில் நபி (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தார்கள். அப்போது தான் தயம்மும் பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான். மக்கள் தயம்மும் செய்தனர். நான் அமர்ந்திருந்த ஒட்டகத்தை எழுப்பிய போது அதன் அடியில் என் கழுத்து மாலை கிடைத்தது.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 334, முஸ்லிம் 550
தயம்மும் பற்றிய வசனம் திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் உள்ளது. அதைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் இங்கே குறிப்பிடுகின்றார்கள். அந்த வசனங்கள் வருமாறு:
நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ,பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும்,கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.அல்குர்ஆன் 4:43
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்பு, கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.அல்குர்ஆன் 5:6
தயம்மும் செய்யும் முறை
உள்ளங்கைகளால் தரையில் அடித்து, வாயால் அதில் ஊதி விட்டு அல்லது கைகளை உதறிவிட்டு இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவ வேண்டும்.
ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, 'எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை' என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, 'உங்களுக்கு நினைவிருக்கின்றதா? நானும் நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். நீங்கள் தொழாமல் இருந்தீர்கள். நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இதை நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது, தமது உள்ளங் கைகளால் தரையில் அடித்து வாயால் அதில் ஊதி விட்டு, இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவிக் காட்டி,இப்படிச் செய்வது உமக்குப் போதுமே!' எனக் கூறினார்கள்' என்று தெரிவித்தார்கள்.அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)
நூல்கள்: புகாரீ 338, முஸ்லிம் 552
... நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைகளால் பூமியில் ஒரு அடி அடித்து, பின்னர் இரு கைகளையும் உதறிவிட்டு தமது வலது கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தமது இடது கரத்தால் வலது புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரு கைகளால் தமது முகத்தைத் தடவி விட்டு, 'இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாகும்'என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அம்மார் (ரலி)
நூல்: புகாரீ 347
புகாரீ, முஸ்லிம் உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் 'ஒரு தடவை தான் தரையில் அடிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வேறு நூல்களில் இடம் பெற்றுள்ள சில அறிவிப்புகளில் இரண்டு தடவை அடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவை ஆதாரப்பூர்மானவை அல்ல.
தயம்மும் செய்ய ஏற்றவை
தயம்மும் செய்வது பற்றிக் கூறும் மேற்கண்ட இரு வசனங்களிலும் தூய்மையான மண்' என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மண்ணில் தான் தயம்மும் செய்ய வேண்டும்.
மண் என்பது அதன் அனைத்து வகைகளையும் குறிக்கும். களிமண், மணல், இறுகிய மண்ணாங்கட்டி, மண் சுவர் போன்ற அனைத்துமே மண்ணில் அடங்கும்.
'நபி (ஸல்) அவர்கள் சுவற்றில் அடித்துத் தயம்மும் செய்தார்கள்' என்று புகாரீ 337வது ஹதீஸில் கூறப்படுகின்றது.
மண் என்பது உதிரியாகக் கிடப்பவை மட்டும் அல்ல; ஒன்று சேர்த்து திரட்டப் பட்டவையும் மண்' என்பதில் அடங்கும் என இதிருந்து விளங்கலாம்.
குளிர் தாங்க முடியாத போது தயம்மும் செய்தல்
தாங்க முடியாத குளிர் இருந்தாலும் அந்நேரத்தில் தண்ணீரைப் பயன்படுத்தாமல் தயம்மும் செய்யலாம்.
தாதுஸ்ஸலாஸில் எனும் இடத்தில் நடந்த போரில் குளிராக இருந்த ஒரு இரவில் எனக்குத் தூக்கத்தில் விந்து வெளியானது. நான் குளித்தால் நாசமாகி விடுவேன் என்று அஞ்சினேன். எனவே தயம்மும் செய்து என் சகாக்களுக்கு சுப்ஹ் தொழுவித்தேன். இதை நபி (ஸல்) அவர்களிடம் (பின்னர்) தெரிவித்தேன். 'அம்ரே! உமக்குக் குளிப்பு கடமையாக இருந்த போது உமது சகாக்களுக்குத் தொழுவித்தீரா?' என்று நபி (ஸல்) கேட்டனர். குளிப்பதற்குத் தடையாக இருந்த காரணத்தை அவர்களிடம் கூறினேன். 'உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் உள்ளவனாக இருக்கிறான்' என்று அல்லாஹ் கூறுவதை நான் செவியுற்றுள்ளேன் (4:29) என்று விளக்கினேன். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். வேறு எதையும் கூறவில்லை.அறிவிப்பவர்: அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 283, அஹ்மத் 17144
தொழுது முடித்த பின் தண்ணீர் கிடைத்தால்...
தயம்மும் செய்து தொழுத பின்னர் அந்தத் தொழுகையின் நேரம் முடிவதற்குள் அல்லது நேரம் முடிந்த பின் தண்ணீர் கிடைத்தால் அந்தத் தொழுகையை மீண்டும் தொழத் தேவையில்லை.
தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.அல்குர்ஆன் 4:43
இவ்வசனத்தில் தண்ணீர் கிடைக்காதவர்கள் தயம்மும் செய்து தொழுமாறு கட்டளையிடுகிறானே தவிர தண்ணீர் கிடைத்து விட்டால் மீண்டும் தொழவேண்டும் என்று கட்டளையிடவில்லை. எனவே தொழுது முடிந்த பின்னர் தண்ணீர் கிடைத்தால் தொழுகையைத் திரும்பத் தொழத் தேவையில்லை.
ஒரு தயம்முமில் பல தொழுகை
நாம் தயம்மும் செய்து ஒரு தொழுகையைத் தொழுகின்றோம். பின்னர் அடுத்த தொழுகையின் நேரம் வருகின்றது. அப்போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. உளூவை நீக்கும் காரியம் எதுவும் நம்மிடம் நிகழவில்லை. இந்த நிலையில் ஒரு தொழுகைக்குச் செய்த அதே தயம்மும் மூலம் அடுத்த தொழுகையையும் தொழலாமா? என்றால் இதிலும் இரண்டு கருத்துக்கள் உள்ளன.
ஒரு தயம்மும் செய்து ஒரு கடமையான தொழுகை தொழுவது தான் நபிவழி. மற்ற தொழுகைக்கு மீண்டும் தயம்மும் செய்ய வேண்டும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தாரகுத்னீ, பைஹகீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹஸன் பின் உமாரா என்பவர் வழியாக இது அறிவிக்கப்படுகின்றது. இவர் பலவீனமானவர் என்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு முடிவெடுக்கக் கூடாது.
ஒரு தடவை தயம்மும் செய்து ஒரு கடமையான தொழுகையைத் தான் தொழ வேண்டும் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதும் இல்லை.
எனவே ஒரு உளூவைக் கொண்டு எத்தனை தொழுகைகளையும் தொழலாம் என்பது போல் உளூவின் மாற்றாக அமைந்துள்ள தயம்முமையும் கருதுவதே சரியானதாகும். ஒரு தயம்மும் மூலம் ஒரு தொழுகை தொழுத பின் அடுத்த தொழுகை நேரத்திலும் தண்ணீர் கிடைக்காவிட்டால் அந்தத் தொழுகையையும் அதே தயம்மும் மூலம் தொழலாம்.
No comments:
Post a Comment