Translate

Monday, March 30, 2009

குழந்தைகளுக்கு இஸ்லாத்தை சொல்லி கொடுப்போம் . பாகம் 3

குர்ஆன் : குழந்தைகளின் புத்திக்கூர்மையை வளர்க்கும்

திருமறைக்குர்ஆனை மனனமிடுவதையும் அதன் கருத்துக்களை சிந்திப்பதையும் குழந்தைகளின் புத்திக் கூர்மையை வளர்க்கும் அதிமுக்கிய வாயில்களில் ஒன்றாகக் கருத முடியும். ஏனெனில், அல்குர்ஆன் அறிவின்பால், சிந்தனையின்பால் அழைக்கின்றது. புதுமை படைக்குமாறு புத்திக்கூர்மையை பயன்படுத்துமாறு அழைப்பு விடுக்கின்றது.

இது ஹல்வான் பல்கலைக்கழக உளவியல் துறை விரிவுரையாளர் இஸ்மாயீல் அப்துல் பத்தாஹ் அவர்கள் மெற்கொண்ட நவீன ஆய்வின் முடிவாகும். அல்குர்ஆனை மனனமிடுவதும் அதன் கருத்துக்களைச் சிந்திப்பதும் அது பற்றிய பரிபூரண அறிவைப் பெறுவதும் சிறியோரின் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கின்றது என்பதை இவரது ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

உமது ஈமான் அதிகரிக்க வேண்டும். அறிவும் செயலும் இணைய வேண்டும் என்ற நோக்கில் அல்குர்ஆன் வானங்கள், பூமி பற்றியும், மனிதனைப் பற்றியும், எம்னைச் சூழ உள்ள பொருட்கள் பற்றியும் சிந்திக்குமாறு அழைப்பதை அவ்வாய்வில் அவர் விளக்குகின்றார். அப்துல் பத்தாஹ் அவர்கள் புஹாரி, அபூதாவூத், நஸஈ போன்ற ஹதீஸ் நூல்களில் வந்துள்ள ஹதீஸ்களையும் அதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்.
அமர் இப்னு ஸலாமா அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எனது தந்தை (ஹிஜ்ரத்துக்கு முன்னர் கூறினார் – நான் அல்லாஹ் வின் தூதரிடம் இருந்து ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் பின்வருமாறு கூறினார்கள் :

உங்களுக்குத் தொழுகையின் நேரம் வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். அல்குர்ஆனை நன்கு மனனமிட்டவர் ஜமாஅத் நடத்தட்டும். அம்ர் இப்னு மஸ்லமா கூறுகிறார் : அப்போது எல்லோரும் உற்று நோக்கினர். அவ்விடத்தில் அதிகம் மனனமிட்டவர் என்னைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. நான் ஏழு வயதுச் சிறுவனாக இருந்த நிலையிலும் என்னையே முற்படுத்தினார்கள்.
ரஸூலுல்லாஹ் மதீனாவுக்கு வருவதற்கு முன்னர் மதீனாவில் முஸ்லிம்களுக்குத் தொழுகை நடத்திய இச்சிறுவன் மக்காவிலிருந்து குர்ஆனைச் சுமந்து வரும் பயணிகளிடமிருந்து குர்ஆனைச் செவிமடுத்தான். அவனுக்கு இறைவன் கொடுத்த திறமை, மனன ஆற்றல் என்பவற்றைப் பயன்படுத்தி அல்குர்ஆனில் அதிகமான பகுதியை மனனம் செய்திருந்தான். இதன் மூலம் மக்களை வைத்து ஜமாஅத் நடத்த தகுதி பெற்றான்.
குழந்தைகளின் புத்திக் கூர்மையை வளர்ப்பதில் பள்ளிவாசல்களும், முக்கிய பங்காற்றுவதை இந்த ஆய்வு தெளிவுபடுத்துகின்றது. பள்ளிவாசல் குழந்தைகளிடத்தில் நல்ல நடத்தைகள், ஒழுக்கங்களை, சிறந்த மார்க்க விழுமியங்களை பரப்புவதிலும், போதிப்பதிலும் ஈடுபடுகின்றது. குழந்தைகளை அது வாழும் நடைமுறை உலகுடன் பள்ளிவாசல் பிணைக்கிறது.

பள்ளிவாசல் குழந்தைகளிடத்தில் நல்ல பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக, அவர்கள் ஏழு வயதை அடையும் போது அதன் பங்களிப்பு விரிவடைந்து குழந்தைகளின் ஆறிவாற்றலை வளர்க்கும் வகையிலும் அதன் பகுத்தறிவுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் குர்ஆனுடைய மனன சக்தி அமைகின்றது. இவ்வாறு சிறு பிராயத்திலேயே குழந்தையிடம் பூரண வளர்ச்சியை ஏற்படுத்துவதில் பள்ளிவாசல் முக்கிய பங்கு வகிக்கின்றது.

புத்தி கூர்மையை ஏற்படுத்துவதில் பரம்பரைக் காரணிகள் தாக்கம் செலுத்திய போதிலும் அது முயற்சியின் மூலமும் கடின உழைப்பின் மூலமுமே துரிதப்படுத்தப்படுகின்றது என்பதை இவ்வாய்வு காட்டுகிறது. குழந்தைகளின் புத்தி கூர்மையை வளர்ப்பதில் குடும்பம், கல்வி, தகவல் தொடர்பு, வணக்க வழிபாடுகள் போன்ற பல்வேறு காரணிகளும் பங்காற்றுகின்றன.

Saturday, March 28, 2009

குழந்தைகளுக்கு இஸ்லாத்தை சொல்லி கொடுப்போம் . பாகம் 1

நம் இஸ்லாமிய குழந்தைகள் , 
பிற மதத்தவர் நடத்தும் பள்ளி கூடங்களுக்கு சென்று திரும்பியவுடன் , கிருத்துவ பாடல்களையோ அல்லது ஹிந்து பஜனைகலையோ பாடுவதை கேட்டல், நம்மில் பலர் கோபப்படுவதுண்டு. நம் குழந்தைகளுக்கு இஸ்லாத்தை பற்றி சொல்லித்தராமல் போவது தான் , இந்த நிலைக்கு காரணம். !

பாடினால் , கோபம் கொண்டு அது எல்லாம் தப்பு என்று மட்டும் குழந்தைகளின் வாயை அடைக்க பார்க்கிறோம் .இது குழந்தைகளின் மனதில் மற்று அபிப்பிராயத்தை பதித்துவிட கூடாது , 

அனைத்து மதத்தினரும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் , ( இப்படி பட்ட பஜனை / கிருத்துவ பாடல்கள் அனைத்து மத குழந்தைகளுக்கும் கட்டாயம் சொல்லிகொடுப்பது தவறு என்ற கருத்து வேறு!..) நம் குழந்தைகள் எது சரி எது தவறு என்ற என்னத்தை மனதில் பதிய வைத்து விட்டால், நம் குழந்தைகள் ஆரம்பம் முதல் தெளிவான இஸ்லாத்தில் காலூன்ற தொடங்கும், 

சரி , குழந்தைகள் மனதில் எளிதில் புரிய வைக்கும் படி , எப்ப சொல்லி கொடுக்கலாம்,

அதன் ஒரு தொடக்கமாக ,எளிதான கேள்வி பதில் முறையை பார்போம் .

கேள்வி : 01 உன்னைப் படைத்தவன் யார்? என்னைப் படைத்தவன் அல்லாஹ்
கேள்வி : 02 உன்னுடைய தாய் தந்தையரைப் படைத்தவன் யார்? என்னுடைய தாய் தந்தையரைப் படைத்தவனும் அல்லாஹ் தான்.
கேள்வி : 03 இரவையும் பகலையும், சூரியனையும் சந்திரனையும் படைத்தவன் யார்? அல்லாஹ் தான் இரவையும் பகலையும் படைத்தான். அல்லாஹ் தான் சூரியனையும் சந்திரனையும் படைத்தான்.
கேள்வி : 04 நாம் நடந்து திரிகின்ற இந்தப் பூமியைப் படைத்தவன் யார்? நாம் நடந்து திரிகின்ற இந்த பூமியைப் படைத்தவனும் அல்லாஹ் தான்.
கேள்வி : 05 மலைகளைப் படைத்தவன் யார்? மலைகளைப் படைத்தவன் அல்லாஹ்.
கேள்வி : 06 வானத்தில் தவழும் மேகக் கூட்டத்திலிருந்து மழையை இறக்கியருளியவன் யார்? அல்லாஹ் தான் மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்தான்.
கேள்வி : 07 மரங்களையும் அது தரும் கனிவர்க்கத்தையும் படைத்தவன் செய்கின்றவன் யார்? அல்லாஹ் தான் மரங்களையும் அது தரும் கனி வர்க்கத்தையும் படைத்தான்.
கேள்வி : 08 நாம் பார்க்கின்ற அனைத்தையும் படைத்தவன் யார்? அல்லாஹ் தான் நாம் பார்க்கின்ற அனைத்தையும் படைத்தான்.
கேள்வி : 09 நமக்கு உணவையும், குடிப்பையும் படைத்தவன் யார்? அல்லாஹ்!
கேள்வி : 10 சூரியனை உதிக்கச் செய்பவனும், அதனை மறையச் செய்பவனும் யார்? அல்லாஹ்!
கேள்வி : 11 வானவில்லைப் படைத்தவன் யார்? அல்லாஹ்!
குறிப்பு : இந்த உலகையும் அதில் உள்ள அத்தனை படைப்பினங்களையும் படைத்தவன் அல்லாஹ்! அவன் தான் நமக்குத் தேவையான அனைத்தையும் தந்தான், அவன் தான் அனைத்தையும் பாதுகாக்கின்றான், அனைத்தும் அவனுக்கு உரியவைகளாகத் தான் இருக்கின்றன. இது தான் ரப் என்ற பதத்திற்குரிய அர்த்தமும், விளக்கமுமாகும், இதனை குழந்தைகள் மனதில் எளிதாக பதிய வைத்துவிடலாம் .

குழந்தைகளுக்கு இஸ்லாத்தை சொல்லி கொடுப்போம் - பாகம் 2

கேள்வி : 01 இறைவன் நம்மை ஏன் படைத்தான்?
அவனை வணங்குவதற்காகவும், அவனது கட்டளைகளுக்குக் கீழ்படிவதற்காகவுமே நம்மைப் படைத்தான்.  

கேள்வி : 02 இபாதா - வணங்குதல் என்றால் என்ன? 
இறைவன் விரும்புகின்ற, அன்பு செலுத்துகின்ற, அவன் நமக்குக் கட்டளையிட்டவாறு செயல்படுகின்ற அனைத்தும் நாம் அல்லாஹ்வுக்குச் செலுத்துகின்ற வணக்கமாகும். உதாரணம் : தொழுகை, நோன்பு, நல்லொழுக்கம், ஏழைகளுக்கு உதவுதல், நல்ல முஸ்லிமாக வாழ்வது .. இன்னும் பல.  

கேள்வி : 03 யாருக்கு நம்முடைய வணக்கத்தைச் செலுத்த வேண்டும்? 
அல்லாஹ்வுக்கு மட்டுமே நம்முடைய வணகத்தை உரித்தாக்க வேண்டும்.  

கேள்வி : 04 உன்னுடைய மார்க்கம் அதாவது நீ பின்பற்றுகின்ற மார்க்கம் எது? 
தீனுல் இஸ்லாம் தான் நான் பின்பற்றுகின்ற மார்க்கமாகும்.  

கேள்வி : 05 இஸ்லாம் என்றால் (அடிப்படைக் கொள்கை) என்ன? 
அல்லாஹ் ஒருவனே!
  • அவனுக்கு இணை துணை ஏதுமில்லை!
  • அவன் அனைத்தையும் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கின்றான்.
  • அவன் வானத்தில் உள்ள அர்ஷில் அமர்ந்திருக்கின்றான்.
  • அவனைப் போல எவருமில்லை.
  • அவன் தான் மழையை இறக்கி வைத்தான்
  • உணவையும் படைத்தான்.
  • அனைத்தையும் பாதுகாப்பவனும் அவனே!
  • இத்தகையவனான அல்லாஹ்வைத் தனித்துவமாக அவனை மட்டுமே வணங்க வேண்டும்.
  • அவன் வெறுக்கின்ற எதனையும், தடுத்திருக்கின்ற எதனையும் நாம் செய்யக் கூடாது.
 
கேள்வி : 06 மனிதர்கள் பிறப்பது இஸ்லாத்தில் தானா? 
ஆம்! பிறக்கின்ற அனைத்துக் குழந்தைகளும் முஸ்லிம்களாகத் தான் பிறக்கின்றன.  

கேள்வி : 07 சில மனிதர்களை நாம் முஸ்லிம் அல்லாதவர்கள் என்கிறோம்.. ஏன்? 
இறைவனல்லாதவற்றை வணங்கும்படி ஷைத்தான் அவர்களை வழிகெடுத்து விட்டதால், அவர்கள் இறைவனல்லாதவற்றை வணங்குவதால் அவர்களை முஸ்லிம்களல்ல என்கிறோம்.  

கேள்வி : 08 மக்கள் இஸ்லாத்தில் இணைவதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் என்ன? 
லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - வணக்கதிற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனுடைய திருத்தூதராக இருக்கின்றார்கள் என்று மொழிந்து ஏற்றுக் கொள்வது தான் இஸ்லாத்தில் இணைய விரும்புகின்றவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவையாகும்.  

கேள்வி : 09 மனித குலத்திற்கு அருட்கொடையாக அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதரின் பெயரென்ன? 
அப்துல்லா என்பவரது மகனாகிய, முஹம்மது (ஸல்) அவர்கள் தான் மனித குலத்திற்கு அருட்கொடையாகவும், வழிகாட்டவும் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்ட தூதராவார்.  
கேள்வி : 10 இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பி வைத்ததன் நோக்கம் என்ன? 
மக்களுக்கு இஸ்லாத்தின் தூதை எடுத்து வைக்க வேண்டும் என்பதற்காக!  

கேள்வி : 11 முஹம்மது (ஸல்) அவர்கள் மக்களை எதன் பால் அழைத்தார்கள்? அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற அழைப்பை மக்களுக்கு விடுத்ததோடு, அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதனின்றும் மக்களை தவிர்ந்திருக்கும்படியும் அறிவுறுத்தினார்கள்.  

கேள்வி : 12 இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது அன்பு கொண்டு, அவர் கொண்டு வந்த தூதை நாம் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டுமா?
  • ஆம்! ஓவ்வொரு முஸ்லிமின் மீதும் இது அடிப்படைக் கடமையாகும்.
  • இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது அன்பு கொண்டு, அவர் கொண்டு வந்த கொள்கையை ஏற்றுக் கொண்டு நம்பிக்கையும் கொள்ள வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் மீது உள்ள அடிப்படைக் கடமையாகும்.
  • அவரை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல, அவரைப் பின்பற்றவும் வேண்டும்.

இணை வைத்தல் கொடியது

ஐந்து வேளைத் தொழுகையை விட தர்ஹாக்களில் கையேந்துவதை புனிதமாகக் கருதுபவர்கள். பாத்திஹாக்கள் ஓதி இறைவனின் அன்பைப் பெற்றுவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். என்னிடமே கேளுங்கள் என்று இறைமறையில் அல்லாஹ் சொல்லும் வாக்குகளை பொய்யாக்குபவர்களாக நமது அறியாமையினால் அவுலியாக்களிடம் சென்று கேட்கக்கூடியவர்களாக இருக்கிறோம். சிலை வணக்கங்களையும்; கப்று வணக்கங்களையும் ஒழிக்க ரசூல் (ஸல்) அவர்கள் பட்ட சிரமங்களை மறந்தவர்களாக. ரசூல் (ஸல்) அவர்களின் அடிப்படைக் கொள்கைகளைக் கூட மதிக்காதவர்களாக நாம் அறிந்தோ அறியாமலோ இஸ்லாத்திற்கு கடுமையாக ஊறு விளைத்துக் கொண்டிருக்கிறோம்;. சிந்தித்து திருந்துவோமா.
1. தான் பணக்காரனாக வேண்டும் , வீடு வாங்க வேண்டும் , தன் குடும்ப சிக்கல்கள் தீர வேண்டும் என்பதற்காக காஃபிரான சாமியார்களிடம் தன் குடும்பப் பெண்களைக் கூட அழைத்துச் சென்று குறி பார்ப்பது.அவன் மந்திரித்துக் கொடுக்கும் தாயத்துகளை அணிந்தும் , சாம்பிராணி , மற்ற படைத்தப் பொருள்களை உண்டும் , கபட சாமியார்கள் எழுதித்தரும் தகடுகளை வீடுகளில் மாட்டி வைத்தும்; அல்லாஹ்வுக்கு இனைவைக்கும் கொடுமையான செயல்களை செய்ய தயங்குவதில்லை.  

2. நம் தாத்தா, பாட்டன் என்று குடும்பத்தில் இறந்தவர்களுக்காக ஹஜ்ரத்தை வைத்து ஓதி விட்டால் எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும் என்று 3ம் நாள் பாத்தியா 7 ம் நாள் பாத்தியா 40 ம் நாள் பாத்தியா என்றும் உறவினர்களை அழைத்து விருந்து வைத்து விமரிசையாக செய்கிறோம். இதன் மூலம் ஹஜ்ரத்கள்தான் கொஞ்சம் வயிறார உண்டு கையில் கொஞ்சம் காசு பார்த்து விட்டு நமக்கு பாவச்சுமையை இணைவைத்தலின் மூலம் அதிகமாக்கி விட்டுப் போகிறாரே தவிர. யார் செய்த பாவத்தையும் ஹஜ்ரத் ஓதும் பாத்தியா,மொளலூது, ஹத்தம் எதுவும் இறைவனிடம் காப்பாற்றாது. அவனவன் செய்த பாவத்திற்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும். நாம் செய்த நல்ல அமல்கள் கூட வரும். ஹஜ்ரத்களின் பாத்தியாக்கள் கூட வராது. பாத்தியாக்கள் பாவத்தை கூட்டி விடும்.  

3. தர்ஹாக்களில் தவம் கிடக்கிறோம். தர்ஹாக்களுக்கு செல்வதை இஸ்லாம் ஆதரிப்பதாய் இருந்தால் இன்று ரசூல் (ஸல்) அவர்களுக்குதான் பெரிய தர்ஹா இருந்திருக்க வேண்டும். தர்ஹாக்கள் பொய்யானவை என்பதற்கு நிறைய ஆதாரம் இருந்தும் நாம் இந்த மார்க்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயலை ஒரு மார்க்க கடமை என்று செய்து வருகிறோம். தர்ஹாக்களை அண்டிப் பிழைத்து வாழும் ஒரு கூட்டம் நன்றாக செழிப்பாகி வருகிறது. நம் பெண்கள் கூட்டமும் தர்ஹா கூட்டங்களில் கண்டவர்களிடமும் இடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். தர்ஹாக்கள்,மௌலுது,ஹத்தம் பாத்தியா, பூரியான் பாத்தியா,ஒடுக்கத்து புதன், 3,7,40 பாத்தியா...போன்றவைகள் பொய், பித்தலாட்டம், தனிப்பட்ட நபர்கள் பையை நிரப்பிக் கொள்ள மார்க்கம் என்ற பெயரில் புகுத்தப்பட்டவைகள் என்பதற்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றது. இவைகள் எல்லாம் உண்டு மார்க்கம் அனுமதிக்கிறது என்பதற்கு மௌலூது, பாத்தியா ஒதி நவீன பிச்சை எடுக்கும் சில ஹஜ்ரத்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நிருபிக்கத் தயாராய் இருக்கிறார்களா முன் வருவார்களா. நிச்சயம் வர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் பிழைப்பு கெட்டு விடும். அந்நிய கலாச்சாரத்திலிருந்து நமக்கு தொற்றிய நோய் இது. 

அவர்கள் கருமாதி, திவசம் செய்கிறார்கள் 
நாம் 3,7,40...பாத்தியா என்று நிறைய வெரைட்டி பாத்தியா உண்டு.

அவர்கள் கோயிலுக்குப் போனால் 
நாங்க பள்ளிக்குப் போய் தொழ மாட்டோம் மாறாக தர்ஹாவுக்கு தவறாமல் போவோம்.

அவர்கள் தேர் இழுத்தால் 
நாங்கள் சந்தனக் கூடு...

பேர் மட்டும் அப்துல்லா(அப்துல்லா:அர்த்தம் - அல்லாஹ்வின் அடிமை ) பாக்கி எல்லாம் அவர்கள் செய்வதை பேர் மாற்றி செய்யும் கலாச்சாரத்தைத்தான் பின்பற்றி வருகிறோம்;.
நம் மார்க்கத்தையே மரணிக்கச் செய்யும் செயல்களை இங்கு பார்ப்போம். இஸ்லாத்தை முறிக்கும் காரியங்கள் ,
.1. அல்லாஹ்வை வணங்கும் கடமைகளில் அவனுக்கு இணை வைப்பது அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: 'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்க(வே) மாட்டான் இதனைத்தவிர(மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்' (2 : 48)
மரணித்தவர்களிடம் (அவர்களை அழைத்துப்) பிரார்த்தனை செய்வதும் அவர்களைக் கொண்டு உதவி தேடுவதும், அவர்களுக்காக நேர்ச்சை செய்வதும், அவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதும் அல்லாஹ்வுக்கு இணை வைத்தலில் நின்றுமுள்ளது.
2. யார் தனக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் இடைத்தரகர்களை ஏற்படுத்தி, அவர்களை அழைத்து அவர்களிலேயே நம்பிக்கையும் வைக்கின்றானோ அவன் ஏகோபித்த முடிவின் படி காஃபிராகி விட்டான்.
3. இணை வைப்பவர்களை யார் காஃபிர்களாக கணிக்கவில்லையோ, அல்லது குப்ரில் சந்தேகம் வைக்கின்றானோ, அல்லது அவர்களுடைய மார்க்கம் சரி என கருதுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான்
4.யார் நாயகம் (ஸல்) அவர்களுடைய மார்க்கம் அல்லாத வேறு ஒரு மார்க்கத்தை சிறந்ததாகக் கருதுகின்றானோ, அவன் காபிராகிவிட்டான்.
5. நாயகம் (ஸல்) அவர்களுடைய மார்க்கத்தில் ஏதாவதொன்றை வெறுத்த நிலையில் அமல் செய்தால் அவன் திடமாக காபிராகிவிட்டான். திருமறை இவ்வாறு கூறுகிறது. 'இது (ஏனெனில்) அல்லாஹ் இறக்கி வைத்ததை நிச்சயமாக அவர்கள் வெறுத்து விட்டார்கள் என்ற காரணத்தினாலாகும். ஆதலால் அவர்களுடைய செயல்களையெல்லாம் (அல்லாஹ்வாகிய) அவன் அழித்து விட்டான்.' (47:9)
6. நாயகம் (ஸல்) அவர்களுடைய தீனில் ஏதாவதொன்றை யார் பரிகாசம் செய்கின்றானோ அவன் காபிராகிவிட்டான். திருமறையில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் '(அதற்கு நபியே அவர்களிடம்) அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள் என்று நீர் கேட்பீராக. ( 9 : 65 )
7. சூனியம் செய்தல், யார் சூனியம்;; செய்கின்றானோ, அல்லது அதைப் பொருந்திக் கொள்கின்றானோ அவன் காபிராகிவிட்டான். திருமறை கூறுகிறது. ' மேலும் அவ்விருவரும், நாங்கள் சோதனையாக இருக்கிறோம் ஆதலால் (இதைக்கற்று) நீ காபிராகிவிட வேண்டாம் ' என்று கூறும் வரை அவர்கள் (அதனை) ஒருவருக்கும் கற்றுக்கொடுப்பதில்லை ' ( 2 : 102 )
8. முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்ரிக்கீன்(காபிர்)களோடு தோளோடு தோள் நின்று உதவி செய்தல் திருமறை கூறுகிறது ' உங்களில் எவரேனும் அவர்களை (த்தனக்கு) ப்பாதுகாவலராக்கிக் கொண்டால். அப்போது நிச்சயமாக அவரும் அவர்களில் உள்ளவர்தாம். ( 5 : 51 )
9. மனிதர்களில் நின்றும் சிலர் (தரீக்கா, சூபிய்யாக்களுடைய ஷேய்க் மார்களைப் போன்றவர்கள்) உயர்ந்த அந்தஸ்து அடைந்து விட்டார்கள் அவர்கள் நபியவர்கள் மார்க்கத்தை பின் பற்றத் தேவையில்லை அவர் அதிலருந்து வெளியாகலாம் என்று யார் கருதுகின்றானோ அவன் காபிராகிவிட்டான். திருமறை கூறுவதாவது: ' இன்னும் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவராவது தேடினால், அப்பொழுது அவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்படவே மாட்டாது. மேலும் மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் இருப்பார்.' (3 : 85)
10. அல்லாஹ்வுடைய தீனைக் கற்றுக்கொள்ளாமலும் அதன்படி அமல் செய்யாமலும் அதைப் புறக்கணித்து விடுவது. திருமறை கூறுகிறது. 'மேலும் தன்னுடைய இரட்சகனின் வசனங்களைக் கொண்நினைவு படுத்தப்பட்டு அதன் பின்னர் அவைகளைப் புறக்கணித்து விடுகிறவனைவிட மிக அநியாயக்காரன் யார் ? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை (அவர்களின் முந்திய பாவத்திற்காக ) தண்டிக்கக்கூடியவர்களாவோம் ( 32 : 22 )
அல்லாஹ்விற்கு கோபத்தை உண்டாக்கும் இணை வைத்தல் எனும் மன்னிக்க முடியாத குற்றத்திற்கு ஆளாகாமல் நாம் ஒவ்வொருவரும் நம்மையும், நம் குடும்பத்தினரையும் காத்து இஸ்லாம் தடுப்பவைகளிலிருந்து விலகியும் நன்மைகள் செய்பவர்களாகவும் விளங்குவோம்.

Sunday, March 22, 2009

அதிகமாகக் கஷ்டப்பட! கூடுதலான நன்மைகள் கிடைக்குமா?

மனிதன் பொதுவாகவே ஒரு கஷ்டமான காரியத்தை முடித்த மற்றொருவனைப் பார்த்து இந்த வேலையை இவன் இவ்வளவு கஷ்டப்பட்டுச் செய்திருக்கிறான். அதனால் அவனுக்குப் பலன் அதிகம். அவன் நிச்சயமாக உழைப்பாளிதான். 

  • அவன் கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் நடந்திருக்கிறான். வாகனம் இருந்தும் அவன் நன்மை நாடி நடந்துள்ளான். 

  • நடந்து செய்யும் இவ்வமலில் தான் கஷ்டத்தை உணரவேண்டும் என்பதற்காக நோன்பில்லா விட்டாலும் உண்ணாமலும், நீரருந்தாமலும் பசியுடன் நடந்துள்ளான். 

  • நிழலில் நடக்காது வெய்யிலில் தலைதிறந்து நடந்துள்ளான். அவனது பக்தி எங்களுக்கு வருமா!? 

ஆச்சரியத்தோடு கேள்வி கேட்கும் மக்கள் கூட்டத்தை இந்த 21ம் நூற்றாண்டிலேயும் பார்க்கிறோம்.

இதுமட்டுமல்ல, இன்னும் பலர் அதிகமாகக் கஷ்டப்பட்ட அளவிற்கு கூடுதலான நன்மைகள் கிடைக்கும் என்று நினைத்து அல்லாஹ் எங்களுக்கு அளித்திருக்கக் கூடிய சலுகைகளைக் கூட ஒதுக்கி விடுபவர்களைப் பார்க்கிறோம். வாகன வசதியிருக்கும்போது வேண்டுமென்றே நடந்து செல்வது. நடந்து செல்வதற்கும் தூர வழியைத் தெரிவு செய்வது. தங்குமிட வசதிகளில் கஷ்டமானதைத் தெரிவு செய்வது. இப்படி எந்தவொரு செயலை எடுத்துக் கொண்டாலும் அதில் கஷ்டமானதையே செய்ய முன்வருவது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு காரியத்தைச் செய்யும் போது அந்தக் காரியம் எளிதான முறையில் செய்வதற்கு முடியுமானதாக இருந்தால் அந்த வழியையே தெரிவு செய்தார்கள். ஹஜ்ஜின் போது அவர்கள் ஒட்டகை மீதே பயணம் செய்திருக்கிறார்கள்.

அல்லாஹ் கூறுவதைப் பின்பற்றுபவர்கள் வழிதவறி விட மாட்டார்கள்:
நீர் கஷ்டப்படுவதற்காக குர்ஆனை உம்மீது நாம் இறக்கவில்லை. (அல்-குர்ஆன் 20:1)

அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான், அவன் உங்களுக்குச் சிரமத்தை நாடவில்லை. (அல்-குர்ஆன் 2:185 வசனத்தின் ஒரு பகுதி)

இந்தக் குர்ஆன் வசனங்களுடன் நாம் கவனத்திற்கெடுக்க வேண்டிய ஒரு ஹதீஸைப் பார்ப்போம்:

ஒரு முதியவர் தமது இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''இவருக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். ''(கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்!'' என்று மக்கள் கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ''இவர் தம்மை இவ்விதம் வேதனைப் படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது!'' என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு. நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

நம்மைப் படைத்து நமது வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் நமக்கு வசமாக்கித் தந்திருக்கிறான். அப்படி வசமாக்கித் தந்திருப்பது ஏன் என்ற சிந்தனை கூட இல்லாமல் இன்று நாம் நடந்து கொண்டிருக்கிறோம். 

உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
என் சகோதரி கஅபா வரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அவர், இதுபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தீர்ப்புப் பெறும்படி எனக்கு உத்தரவிட்டார். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''அவர் (சிறிது தூரம்) நடந்து விட்டு வாகனத்தில் ஏறிக் கொள்ளட்டும்,'' என்றார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி)

இந்த சம்பவங்களிலிருந்து முஸ்லிம்கள் படிக்க வேண்டிய பாடம் என்ன என்பது மிகவும் தெளிவானது. 

  • அல்லாஹ் தேவையற்றவன். 
  • அவனுடைய திருப்தியைப் பெறுவதற்காக கஷ்டப்படக் கூடிய நேர்ச்சைகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
  •  இஸ்லாம் மனிதனுக்கு எளிமையான வாழ்க்கையையும் இலகுவான நடைமுறைகளையும் வகுத்துத் தந்திருக்கிறது. 
  • இஸ்லாம் நடுநிலைமையான அமைப்பில் இருந்து கொண்டுதான் நற்செயல்களைக் கூடச் செய்ய வேண்டும் என்பதை எப்போதும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.


தொழுகை என்ற கடமையில் அல்லாஹ் தந்திருக்கக் கூடிய சலுகைகளைக் கவனிக்கும் போது கஷ்டப்பட்டுத்தான் நல்லமல்களைச் செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இஸ்லாத்தில் இடமில்லை.

 வுளுவுக்குப் பதிலாக தயம்மும் செய்வது.
 வுளுவின் போது காலுறைக்கு மேல் மஸ்ஹு செய்வது.
 பெருமழையின் போது பள்ளியில் மஃரிப் தொழுகையுடன் இஷாத் தொழுகையையும் சேர்த்துத் தொழுவது.
 பெருமழையின் போது வீடுகளிலேயே தொழுது கொள்ளும்படி அறிவித்ததன் மூலம் அனுமதியளித்தது.
 பிரயாணத்தின் போது சேர்த்து, சுருக்கித் தொழுவதற்குள்ள அனுமதி.

இப்படி எத்தனையோ சலுகைகளை இஸ்லாம் எந்தக் கடமையை எடுத்துக் கொண்டாலும் அக்கடமையில் தந்திருக்கிறது. இவற்றின் உண்மையான அர்த்தம் என்ன என்று சிந்தித்தால் தெளிவு வரும்.

இன்று இஸ்லாமியர்கள் மத்தியில் பக்தி என்ற போர்வையில் பெரியார்கள் என்ற ஊர், பெயர் தெரியாத சந்நியாசிகளைப் பற்றிய கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. கஷ்டப்பட்ட அளவிற்கு பலன் உண்டு என்பதைப் போதிக்கத்தான் இந்தக் கதைகள். அப்படிப்பட்ட போதனைகள்தான் மற்றவனைச் சுரண்டி வாழ்வதற்கு பக்கபலமாக இருந்து கொண்டிருக்கிறது. 

இந்தக் கதைகளுக்கும் நம்மைச் சூழவுள்ள மாற்றுமதத்தவர்களிடையே உள்ள அவர்களுடைய நம்பிக்கைகளுக்கும் வித்தியாசம் இல்லை. 

அவர்கள் ஒரு நம்பிக்கையைத் தம் கடவுளோடு சம்பந்தப்படுத்திக் கூறும் போது, முஸ்லிம்களிலும் பலர் அதற்குப் போட்டியாகக் கதைகளை எழுதிப் பள்ளிபள்ளியாக விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கஷ்டப்பட்டால்தான் இறைவனை நெருங்க முடியும் என்பதுதான் அவர்களின் சித்தாந்தம். அதனால்தான், அவர்களின் கதைப்புத்தகங்களிலே:
ஒவ்வொரு நாளும் 1000 ரக்அத்கள் ஸுன்னத்தான தொழுகை தொழுத பெரியார்.
40 வருடங்கள் ஒரே வுளுவில் இஷாவையும் ஸுப்ஹையும் தொழுத பெரியார்.
தஸ்பீஹ் செய்யும் காலணியைக் கனவில் கண்ட பிரபல சூஃபி.
அல்லாஹ்வின் மீதிருந்த பேரின்பக் காதலில் மூழ்கி அறுபது வருடமாக அழுத பெரியார்.
எல்லா மாதங்களும் ரமளானே என்று வரித்த பெண் பெரியார்.
15 ஆண்டுகள் படுக்காத பெரியார்.
கப்ரில் தொழுத பெரியார்.
போன்ற பெரும் பெரும் கப்ஸாக்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. 

இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதைச் சிந்திப்பவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட கதைகளை குர்ஆன், ஹதீஸைவிட மதிப்புக் கொடுத்துப் பின்பற்றுபவர்கள்தான் இன்று அதிகம்.

குர்ஆன், ஹதீஸை விட்டு விட்டுக் கொஞ்சக் காலம் மத்ஹபுகளைப் பின்பற்றினார்கள். இன்று மத்ஹபுகளோடு இந்த கப்ஸாக்களையும் சேர்த்து புதிய மத்ஹபொன்றை ஆரம்பித்துப் பள்ளி பள்ளியாகப் போதித்து அங்கேயே பள்ளி கொள்கிறார்கள்.

எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக் கொள்வான். முஸ்லிம் என்று சொல்பவன் தன்னைத் தானே வருத்திக் கொண்டு அவனை வணங்கிக் கொண்டிருக்க வேண்டும். எவ்வளவு கஷ்டப்பட முடியுமோ அவ்வளவு கஷ்டப்பட வேண்டும். அப்போதுதான் அதிகமான நன்மை?

அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதில் எந்தத் தர்க்கமும் இல்லை. அவன் பார்த்துக் கொண்டிருப்பதற்கு மட்டுமுள்ளவனல்ல. கேள்வி கணக்குக் கேட்பதிலும் மிகவும் கண்டிப்பானவன். அல்லாஹ் சொல்கிறான்:

நிச்சயமாக உமதிரட்சகன், மனிதர்களுக்கு அவர்களின் அக்கிரமங்களுக்காக மன்னிப்பை உடையவன், (அவ்வாறே) நிச்சயமாக உமதிரட்சகன் தண்டிப்பதிலும் மிகக் கடுமையானவன். (அல்-குர்ஆன் 13:6)

மார்க்கத்தில் அவன் எங்களுக்குக் கஷ்டத்தை வைக்கவில்லை. அவன் எங்களுக்குக் கூறுவதெல்லாம் அவன் ஆகுமாக்கியவற்றை ஏற்றுத் தடுத்தவற்றிலிருந்து விலகி நடக்கும்படிதான்.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் அவன் இட்டிருக்கும் கட்டளைதான்.

ஒரு விடயத்தில் நீங்கள் தர்க்கித்துக் கொண்டால் அவ்விடயத்தை அல்லாஹ்வின் பக்கமும் அவன் திருத்தூதரின் பக்கமும் திருப்புங்கள். (அல்-குர்ஆன் 4:59)

இப்படித் தெளிவான மார்க்கத்தை அல்லாஹ் தந்திருக்கும் போது இன்று பலர் மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு பகுதியினரைக் குறை சொல்வதை விட பலர் தாமாகவே வழிகேட்டிலாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சரியான விளக்கமாகும்.

இன்று சந்தையில் வரக்கூடிய எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதை இயக்கும் விதத்தைத் தனது பெயரைக் கூட எழுதத் தெரியாதவர்களெல்லாம் படித்துக் கொள்கிறார்கள்.

மறுமையின் வெற்றியைத் தரக்கூடிய மார்க்கத்தை மட்டும் படிக்கவோ அதன் அறிவுரைகள் பற்றிச் சிந்திக்கவோ அவர்கள் முற்படுவதில்லை. காரணங்கள் இல்லாமலில்லை:

ஒன்று, ஏற்கனவே மௌலவிப் பட்டம் பெற்ற பலர், குர்ஆனை எல்லாருக்கும் விளங்க முடியாது என்று பிரச்சாரம் செய்வது. 

இரண்டு, அப்படிப் பிரச்சாரம் செய்பவர்கள் மற்றவர்கள் குர்ஆனைப் படித்து விடக்கூடாது என்பதற்காக வியூகம் அமைத்து படிக்க முடியும் என்று சொல்பவர்களை பகிரங்கமாக மானபங்கப் படுத்தவும் தயாரான நிலையிலே இருந்து கொண்டிருப்பது.

மூன்று, அப்படியும் அவர்கள் குர்ஆனைப் படிக்க முற்படும் பட்சத்தில், அதற்காக மக்களை ஏவும் பட்சத்தில், அவர்களின் சொத்துக்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பயம் காட்டுவது.

நான்கு, இப்படிப்பட்ட இருட்டடி மஸ்தான் வேலை செய்யும் சிலர் இன்று சமூகத்திலே உலமாக்களாகவும், பள்ளி நிருவாகிகளாகவும் இருப்பதுதான் இன்று நமது சமூக அமைப்பின் இலட்சணமாகிக் கொண்டு வருவது.

இஸ்லாம் எளிமையானது. அதன் சட்டங்கள் அல்லாஹ்வினால் ஆக்கப்பட்டவை. அந்தச் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதற்கு மிகவும் இலகுவானவை. இதை முஸ்லிம்கள் மறந்து செயல்பட எத்தனிக்கக் கூடாது. அப்படியிருந்தால்தான் அவன் எங்களுக்கு நேர்வழியைக் காட்டுவான். அப்படியல்லாமல், அவனுடைய சட்டங்களில் இடைச்செருகல்களைப் புகுத்த நாம் முற்பட்டால் அவன் மிகவும் கோபக்காரன் மட்டுமல்ல, அவனுடைய அதிகார எல்லைக்குள் புகுந்தவர்களை அவன் சும்மா விடமாட்டான். 

இவற்றைக் கவனமாக, உன்னிப்பாக உணர்ந்து அவனுக்குக் கீழ்ப்படிவோமாக. அவன் கட்டளையிட்டபடி அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி மறுமையில் நமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வோமாக. அப்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அந்தப் பெருநெருப்பினாலான நரகிலிருந்து பாதுகாப்புப் பெற ஒரு காரணியாக அமையும்


Saturday, March 21, 2009

சின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள்

சின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள்

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் நம்பிக்கை மட்டும் போதாது. அத்துடன் நல்ல செயல்களும் அவசியம். இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். 

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்? (அல்குர்ஆன் 4:122)

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 2:148)

நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 22:77)

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இருள் நிறைந்த ஒரு பகுதியைப் போன்று (வரவிருக்கும்) குழப்பத்திற்கு (முன்னால்) நற்செயல்களில் போட்டி இடுங்கள். (அந்தக் குழப்பம் வந்தால்) ஒரு மனிதன் முஃமினாக காலைப் பொழுதை அடைந்து மாலையில் காஃபிராகி விடுவான். அல்லது மாலையில் முஃமினாக இருப்பவன் காலையில் காஃபிராகி விடுவான். உலகத்தின் செல்வங்களுக்காகத் தனது மார்க்கத்தை விற்று விடுவான்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 186

மேற்கூறப்பட்ட குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களிலிருந்து நல்ல செயல்களின் காரணமாகவே சுவனம் செல்ல முடியும் என்று தெரிகின்றது. 

நாம் ஒவ்வொரு நாளும் நம்மையே அறியாமல் எவ்வளவோ பாவங்கள் செய்து வருகின்றோம். அவற்றை அழிக்கும் கருவியாக இருக்கக் கூடிய நல்ல செயல்களை நாம் தொடர்ந்து செய்து வர வேண்டும். 

அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப் படையாகவும் (நல் வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு. (அல்குர்ஆன் 13:22)

நன்மை என்றால் தொழுகை, நோன்பு, ஸகாத் இவை தான் நன்மை என்று நாம் நினைத்து வைத்துள்ளோம். இவை தவிர இன்னும் எவ்வளவோ நல்ல செயல்கள் உள்ளன. அவை அதிக நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியதாகவும் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.

அல்லாஹ்வை நினைவு கூர்வது

எந்தச் சிரமத்தையும் எடுத்துக் கொள்ளாமல் சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் என்று கூறினால் அந்த வார்த்தைகள் அதிக நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன. 

இரண்டு வார்த்தைகள் நாவிற்கு எளிதானதாகவும், (நன்மையின் தராசில்) கனமானதாகவும் இருக்கின்றன. அவை, சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 7563

ஸலாம் கூறுதல்

இன்று முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டு சிலர் ஸலாம் சொல்வதற்கு வெட்கப்படுவதைப் பார்க்கிறோம். ஸலாம் கூறுவதால் அவர்களுடைய அந்தஸ்து கெடுவதைப் போன்று நினைக்கிறார்கள். ஆனால் ஸலாம் கூறுதல் இஸ்லாத்தில் சிறந்த செயல் என்பதை அவர்கள் விளங்கவில்லை. 

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்தது எது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 12

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: திர்மிதீ 2613

தீங்கு தரும் பொருளை அகற்றுவது

நாம் செல்லும் பாதையில் மக்களுக்குத் தொல்லை தரும் பொருளை அகற்றினால் அதற்கும் நமக்கு நன்மை உண்டு. 

''ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்ற போது முற்கிளையைக் கண்டு அதை எடுத்து அகற்றிப் போட்டார். அவரின் இந்த நல்ல செயலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 2472

தொல்லை தரும் பொருளை அகற்றிப் போடுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 246

நல்ல வார்த்தைகளைப் பேசுதல்

தேவையற்ற பேச்சுக்களைப் பேசாமல் நல்ல வார்த்தைகளைப் பேசுவதால் அதிக நன்மையை அடைய முடியும். 

நல்ல வார்த்தை பேசுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 6023

பேரீச்சம் பழத்தின் கீற்றைக் கொண்டாவது நீங்கள் நரகத்தை விட்டுத் தப்பிக்க நினையுங்கள். இல்லையென்றால் நல்ல வார்த்தையின் மூலம் (நரகத்தை விட்டுத் தப்பியுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 6023

மற்றவருக்காகப் பிரார்த்தனை செய்தல்

மற்றவருக்காக நாம் துஆச் செய்தால் அதற்காக அதிக நன்மைகள் கிடைக்கின்றன. எத்தனையோ பேர் நம்மிடம் துஆச் செய்யும்படி சொல்லியிருப்பார்கள். அதை நாம் அலட்சியப்படுத்தாமல் நம்முடைய வாழ்வில் செயல்படுத்த வேண்டும். 

ஒரு மனிதன் தன்னுடைய சகோதரனுக்காக மறைவில் துஆச் செய்தால், ''உனக்கும் அவ்வாறே ஏற்படட்டும்'' என்று வானவர்கள் அவருக்காக வேண்டுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி) நூல்: அபூதாவூத் 1534

பிற முஸ்லிமைப் பார்த்து புன்னகை செய்தல்

வழியில் நாம் சந்திக்கும் ஒரு முஸ்லிமைப் பார்த்து நல்ல எண்ணத்துடன் புன்னகைத்தால் அதற்கும் நன்மை கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இப்படிப்பட்ட ஓர் அருமையான மார்க்கத்தில் இருக்கும் நாம் அதன் சிறப்பைப் பற்றி தெரியாமல் இருக்கின்றோம். 

உன்னுடைய சகோதரனுடைய முகத்தைப் பார்த்து நீ சிரிப்பது கூட உனக்கு நன்மையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: முஸ்லிம் 4760

கால்நடைகள் மீது இரக்கம் காட்டுதல்

ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் காட்டும் அன்புக்கு நன்மைகள் கிடைப்பது போன்று, விலங்கினத்தின் மீது இரக்கம் காட்டினால் அதற்கும் நன்மை உண்டு என்று இஸ்லாம் கூறுகின்றது. 

கால்நடைகளுக்குச் சூடு வைப்பதையும் போட்டியில் அது தோல்வியடைந்தால் அதைச் சுட்டுக் கொல்வதையும் பார்க்கும் மக்கள், இஸ்லாத்தின் இந்த உன்னதத் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். 

''ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ''எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக்கின்றது போலும்'' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி 2363, 6009

குறைந்த தர்மம் அதிக நன்மை

நம்மில் அதிகமானோர் தர்மம் செய்யும் விஷயத்தைப் பற்றி தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். அதாவது அதிகமான பொருளைத் தான் தர்மம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல! தூய்மையான சம்பாத்தியத்தில், தூய்மையான எண்ணத்துடன் நம்மால் முடிந்ததை தர்மம் செய்தாலும் அதற்கு இறைவனிடம் கூலி உண்டு. நமக்கு அது அற்பமாகத் தெரிந்தாலும் இறைவனிடம் அது மிகப் பெரியதாக இருக்கும். 

எவர் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் அளவு தர்மம் செய்தாரோ லி அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான் லி அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு, பிறகு நீங்கள் உங்கள் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவிற்கு வளர்த்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1410

இது போன்ற சின்னச் சின்னச் செயல்கள் ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியதாக உள்ளன. அவற்றை நாம் செய்து நன்மை செய்யும் நல்லடியார்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக!

காலம் சொல்லும் பாடம்

காலம் சொல்லும் பாடம்

ரஃபிக் ஜக்கரியா - ஐக்கிய அமீரகம்

வானத்திலிருந்து மழையை இறக்கி அதனைக்கொண்டு பூமியை அது இறந்ததன் பின் உயிர்ப்;பவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், அல்லாஹ் என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள், (அதற்கு) 'புகழைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது என்று நீர் கூறுவீராக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள். சங்கைமிகு அல்குர்ஆன் 29:63

கடந்த சில வாரங்களாக ஐக்கிய அமீரகத்தின் பகுதிகளான துபாய், அபுதாபி, அஜ்மான், ஷார்ஜா, அல்அய்ன், ராஷ்அல்கைமா, உம்மல் குய்ன், ஃபுஜைரா போன்ற இடங்களிலும் மற்றும் மஸ்கட், கத்தார் போன்ற நாடுகளில் நல்ல மழை பெய்தது என்பதினை நாம் அறிந்து இருப்போம். அல்ஹம்துலில்லாஹ்..

அல்லாஹ்வின் நாட்டப்படி மொஹரம் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து இந்த மழையானது பெய்ய ஆரம்பித்தது. இதனால் அமீரக சாலைகள் மழை நீரால் மிதந்தது. நம்ம ஊரில் மழை பெய்தால் மழை தண்ணீர் செல்வதற்கு உரிய வழிமுறைகள் இருக்கிறது. ஆனால் வளைகுடா நாடுகளில் மழை பெய்தால் தண்ணீர் செல்வதற்கு உரிய எந்த வழிமுறைகளையும் அரசாங்கம் செய்யவில்லை. ஆகையால் மழை நீர் வடிகால் வசதியில்லாத காரணத்தால் ஆங்காங்கே நீர் தேக்கம் ஏற்பட்டது இதனால் பல வாகனங்கள் அங்கேங்கே சாலைகளில் நின்று விட்டது. சாலைகளில் வாகனங்கள் நின்றதால் போக்குவரத்துகள் பல மணி நேரங்கள் பாதிக்கப்பட்டு பல நிறுவனங்களில் பணிகள் முடக்கப்பட்டது. சென்ற வாரம் அமீரகத்தில் மழையின் காரணத்தால் பள்ளி மற்றும் நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறையும் விடப்பட்டது. இதனால் பல இழப்பீடுகள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்பட்டது. தற்போது எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு கடுமையான குளிர் பிரதேசம் போல் அமீரக நாடுகள் ஆகிவிட்டன என்பதினையும் இங்குள்ளவர்கள் அறிவார்கள். அமீரக பகுதிகளில் 6 டீகிரி செல்ஷியஸ் வரை குளிரானது இருந்தது. 

சில வாரங்கள் பெய்த மழைக்கே பல திர்ஹம் பாதிப்புள்ள பொருட்கள் நஷ்டம் அடைந்து விட்டன. அத்துடன் மண்ணுடன் கலந்து 38 – 52 knots என்ற அளவில் பாலைவனக்காற்றும் அமீரகம் முழுவதும் அடித்தது என்பதினை பலர் அறிவார்கள். இதனால் இங்கு பல பாதிப்புகள் ஏற்பட்டன. மழை மற்றும் பாலைவனக்காற்றினால் தரையில் மட்டும் பாதிப்பு இல்லை. கடலிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. எப்படியென்றால் கடல்கொந்தளிப்போ, சுனாமியோ, கொனோவோ (சில மாதங்களுக்கு முன்பு மஸ்கட் நாட்டில் கடல் அலைகள் வேகமாக வீசி அதனால் கடல் நீர் ஊருக்குள் வந்து பல பாதிப்புகளை ஏற்படுத்தியது அதற்கு பெயர் - கொனோ என்று அழைத்தார்கள்) ஏற்படவில்லை. அல்லாஹ்வின் கோபப்பார்வையால் 1.2.08 அன்று வெள்ளிக்கிழமையன்று மண்ணுடன் கலந்த பயங்கர குளிர் காற்றானது அமீரக எங்கும் அடித்தது. அமீரக நாட்டில் மட்டுமல்லாமல் ஐரோப்பா நாடுகளிலும் தற்போது கடும் குளிர் காற்று, பனிமூட்டம், பனி மழையானது பொழிந்துக்கொண்டு இருக்கிறது. இதனால் அமெரிக்கா, லண்டன், இல்லினாய்ஸ், மிசிசிபி, சீனா, காஷ்மீர் போன்ற நாடுகளில் மிகப்பெரும் பொருட் சேதங்களும், உயிர் சேதங்களும் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. 

சென்ற சில நாட்களாக அமீரகத்தின் பல பகுதிகளில் இலேசாக நில நடுக்கங்கள் அபுதாபி, ஷார்ஜா, ஃபுஜைரா, மாஷாஃபி, டிப்பா, கொர்பகான் மற்றும் உள்ள பகுதிகளில் ஏற்பட்டது. இதனால் சில பாதிப்புகள் அமீரக பகுதிகளில் ஏற்பட்டு உள்ளன. 3.1.08 அன்று ஆப்ரிக்கா நாட்டில் காங்கோ மற்றும் ரவண்டா போன்ற பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டு 34 உயிர்கள் பிரிந்தன. பல பொருட் சேதங்களும் அந்நாட்டில் ஏற்பட்டது.

தொலைதொடர்பு வசதிக்காக வேண்டி அமீரகம் மற்றும் மஸ்கட் நாடுகளில் இடையே கடலுக்கு அடியில் போடப்பட்ட (Under Sea Cable)  இணைப்புகளானது 1.2.08 அன்று துண்டிக்கப்பட்டன. இந்த துண்டிப்பானது துபாய் நாட்டிலிருந்து 55 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடல் பகுதியில் ஏற்பட்டது. ஆகையால் துபாய் நாட்டிலிலும் மற்றும் ஓமன் நாட்டிலும் பல பகுதிகளில் தொலைதொடர்புகள், இணையத்தளம் வசதிகள் மற்றும் உள்ள தொலைத்தொடர்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. கடலுக்கு அடியில் தொலைதொடர்பு இணைப்பு பணிகளை செய்து இருப்பவர்கள் பிரிட்டன் நாட்டினை சார்ந்த FLAG – FALCON  என்ற நிறுவனங்களாகும். இந்த நிறுவனத்தினை சார்ந்தவர்கள் மேலும் குறிப்பிடுகையில், எகிப்து நாடு மற்றும் இத்தாலி நாடுகளிடையே உள்ள இதுபோல் உள்ள இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. எகிப்து நாட்டில் அலக்ஸாண்டாரியா என்ற இடத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. அமீரகத்தில் உள்ள ETISALAT மற்றும் DU தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த நிறுவனத்துடன் தொடர்புகள் செய்து இருப்பதால் இந்த இரண்டு நிறுவனங்களின் தொலைபேசி இணைப்புகளும் இதனால் பல பாதிப்புகளை அடைந்தது என்றார்கள். 

இந்த கடல் மார்க்கத்தில் ஏற்பட்ட துண்டிப்பால் அமீரக நாட்டில் மட்டும் 1.7 மில்லியன் இணையத்தளம் உபயோகப்படுத்துவோர் இணையத்தளம் தொடர்பு இல்லாமல் பாதிக்கப்பட்டனர். மற்றும் 60 மில்லியன் மக்கள் இந்தியாவிலும், 12 மில்லியன் மக்கள் பாகிஸ்தானிலும், 6 மில்லியன் மக்கள் எகிப்து நாட்டிலும், 4.7 மில்லியன் மக்கள் செளதி அரேபியாவிலும் பாதிக்கப்பட்டனர் என்பதினை அமீரக ஊடகமான கலீஜ் டைம்ஸ் தன்னுடைய 5.2.08 அன்றைய பத்திரிகையில் முதல் பக்க செய்தியாக வெளியிட்டு இருந்தது. 

துபாய் நாட்டில் 11வது சுற்று சூழல் தினமானது (National Environment Day)  4.2.08 திங்கள் அன்று துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை பிரதமரும் மற்றும் சுற்றுப்புற சூழல் அமைப்பின் சேர்மனுமாகிய ஷேக் ஹம்தான் பின் சையத் அல் நாஹியான் (Shaikh Hamdan Bin Zayed Al Nahyan)  அவர்கள் குறிப்பிடுகையில், தற்போது உலகில் பல வடிவங்களில் மாசுவானது படிந்து உள்ளது. இதனால் மாசுபடிந்த நீர், காற்று, சுற்றுப்புறம் போன்றவைகளிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டி உலக முழுவதும் டாலர் மதிப்பின் 150 மில்லியன் தேவைப்படுகிறது என்றார். (செய்தி பார்க்க - அரபு செய்தி பத்திரிகை - பக்கம் 6 - தேதி 5.2.08) 

மழைகளால் பாதிப்பு, காற்றால் பாதிப்பு, தொலை தொடர்பு துண்டிப்பால் ஏற்பட்ட பாதிப்பு போன்றவைகள் செய்திகளாக இருந்தாலும் அதனை நாம் ஏதோ ஒரு சாதாரண விஷயமாக எடுத்து கொள்ள கூடாது. இதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டு விட போகிறது என்று நாம் சிந்தித்தால் பல கோடி இழப்புகளானது சாதாரணமாகவே ஒவ்வொரு நாதட்டிலும் ஏற்பட்டு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அல்லாஹ்வின் கோபப்பார்வை எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த காலத்தில் வரும் என்று நம்மால் யாராலும் சொல்ல முடியாது. எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் தான். வானமும், பூமியும், காற்றும், மழையும், கடலும் மற்றும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைப்படி நடக்கின்றன. 

மனிதர்களின் கைகள் சம்பாதித்த (தீய) வற்றின் காரணமாகக் கரையிலும், கடலிலும் (அழிவு) குழப்பம் வெளிப்பட்டு விட்டன. அவர்கள் செய்த(தீய)வற்றில் சிலவற்றை அவர்களுக்கு அவன் சுவைக்கும்படி செய்வதற்காக (இவ்வாறு) சோதிக்கிறான். அதன் மூலம் அவர்கள் (தவ்பாச் செய்து அவன் பால்) திரும்பி விடலாம். அல்குர்ஆன் 30:41

ஒரு மனிதன் அல்லது ஒரு சமுதாயம் வெறும் உலக செல்வச்செழிப்பில் மிதப்பதை அல்லது அதிகார பீடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அல்லாஹ் இத்தகைய மக்களின் விஷயத்தில் திருப்தி கொண்டு விட்டான் எனக்கூறுவது சரியல்ல. மாறாக, இது கடுமையான சோதனை மற்றும் வேதனைக்குரிய ஒரு நிலையே ஆகும். இதன் பிறகு இறைவனின் வேதனை தீடிரென வந்து அந்தக்குற்றவாளிகளை பிடித்துக்கொள்கிறது. அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் காலஅவகாசம் கொடுப்பான். மீன் பிடிப்பவன் மீன்வாயில் முள் சிக்கிய உடனே தூண்டிலை வெளியே இழுத்து விடுவதில்லை. மாறாக, கொஞ்ச நேரம் அதன் போக்கில் விட்டு விடுகிறான். அந்த மீன் அங்குமிங்குமாய் சுற்றி களைத்து போகும் போது தீடிரென வேகமாக அதனை வெளியே இழுத்து தரைக்கு கொண்டு வந்து விடுகின்றான். ஆனால் அந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த அப்பாவி மீன் சுதந்திரச்சூழலில் சொகுசாக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும். மீனுடைய வாழ்க்கை எப்படியோ அது போல் மனிதனுடைய வாழ்க்கையும் இருக்கிறது. அல்லாஹ் ஒரு மனிதனுக்கு எல்லா வசதிகளையும், செல்வங்களையும் கொடுத்து அவன் அதனை கொண்டு எப்படி வாழ்கிறான் என்பதில் சோதனை செய்வான்.

பாகிஸ்தான் மற்றும் பங்காதேஷ் நாடுகளில் தற்போது H 5 N 1 என்ற பறவைகள் நோய்கள் (Bird Flu)  பரவி விட்டன. இதனால் அந்த நாட்டில் பல கோடிகள் நஷ்டம். மேற்குறிப்பிட்ட இரண்டு நாடுகளில் 3.38 மில்லியன் பறவைகள் பாதிக்கப்பட்இதற்கு முன்பாக இந்தோனிஷியா மற்றும் செளதி அரேபியாவிலும் பறவைகள் நோய் ஏற்பட்டன. அங்கும் பாதிப்புகள். 

பயங்கர ஆயுதங்கள் பதுங்கப்பட்டுள்ளன என்ற காரணம் காட்டி ஈராக் மீது தொடுக்கப்பட்ட அநியாய போரால் இன்றும் பல இழப்பீடுகள். இந்த இழப்பீடுகள் போதாது என்று, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானை அழிக்க இன்னும் பல கோடிகளை செலவு செய்ய அமெரிக்கா தயாராகி விட்டது 2009 ஆண்டின் போர் கால பட்ஜெட்டாக 588.3 பில்லியன் டாலர்களை செலவு செய்ய அமெரிக்கா நாடாளுமன்றம் தயாராகி விட்டது. அக்டோபர் மாதம் முதல் தவணையான 70 பில்லியன் அவசர கால தேவைக்காக அவசியப்படுகிறது என்று கூறுகிறார் மனிதப்பசி பிடித்த அமெரிக்க அதிபர் புஷ்.

அமெரிக்கா ஒரு பக்கம் என்றால் இஸ்ரேல் இன்னொரு பக்கம் மனித உயிர்களுக்கு பல பாதிப்புகளை அதிகமாக தருகிறது. பாலஸ்தீனம் மற்றும் காஸா மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் உணவு பொருட்கள், மின்சாரம், குடிதண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பல உயிர்கள் மாய்ந்து வருகிறது. காஸா எல்லைப்பகுதிகளை மூடிவைத்து விட்டு வேடிக்கை பார்க்கிறது ஆதிக்கச்சக்திகள். இதனால் உணவு தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அங்கு கிடைக்காமல் பல அவஸ்தைகள் நாள்தோறும்.

4.2.08 அன்று அறுபதாவது சுதந்திர தின கொண்டாடங்கள் ஒரு பக்கம் இலங்கையில் ஆடம்பரமாக, ஆனால் மக்கள் சுதந்திரமாக இல்லாமல் அகதிகளாக சுற்றி வருகிறார்கள் சொந்த நாட்டில். தினந்தோறும் வெடி சப்தங்கள் எங்கள் தாய்த்;திருநாட்டில் என்று சொல்லக்கூடிய அளவில் உள்ளது இலங்கை. உள் நாட்டு போரா.. அல்லது வெளி நாட்டு போரா.. என்று தெரியாமல் பல நஷ்டங்கள் அந்த நாட்டில். 

தேர்தல் வந்தால் அமைதி ஏற்படும் என்ற காரணத்தினை காட்டி பாகிஸ்தானில் அமைதியினை குலைத்த ஆதிக்கச்சக்திகளால் பல டாலர்கள் மதிப்பு உள்ள பாதிப்புகள் பாகிஸ்தானில். இது போல் பல பாதிப்புகளை பல நாடுகளும் அடைந்துகொண்டு தான் வருகின்றன நாள்தோறும்.

இஸ்ரேலிய கூலிப்படைக்கு ஆதரவாக இந்தியா ஏவுகணை தளத்தினை ஆதிக்கச்சக்திக்கு கொடுத்து இருந்தது.ஜனவரி 21ம்தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரேலிய ஏவுகணை விண்ணில் பறக்க விடப்பட்டது. இதனை கண்ட ஈரான் நாடும் சும்மா இருக்கவில்லை. ஈரான் நாட்டின் பாலை வனத்தின் வட பகுதியில் சோதனை ஏவுகணை ஒன்றினை செய்து இருக்கிறது. இந்த சோதனை ஏவுகணையானது மே மாதம் அல்லது ஜுன் மாதம் விண்ணில் செலுத்துப்படும் என்று அங்குள்ள விண் வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஏவுகணை பற்றிய செய்தியினை ஈரான் நாட்டு தொலைக்காட்சியானது படம் பிடித்து 3.2.08 அன்று வெளியிட்டு இருந்தது. அத்துடன் இஸ்ரேலுக்கு இந்தியாவில் ஏவுகணைக்காக இடம் கொடுத்ததால் நடுநிலையாளர் போராட்டங்களையும் செய்தனர் என்பதினையும் நாம் அறிவோம். 

அத்துடன் டில்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு, இந்தியாவிற்கு ஏதிரான கடிதம் ஒன்றும் ஈரான் நாட்டு மக்களிடமிருந்து வந்துள்ளது என்றும் ஊடகத்துறைகள் தெரிவிக்கின்றன. ஈரான் நாடானது இந்தியாவிடம் வைத்துள்ள எண்ணெய் வர்த்தக தொடர்பானது துண்டிக்க படுமா..? என்ற வினாக்களும் பல பேரின் மத்தியில் தெரிகிறது. ஈரான் தன்னுடைய எண்ணெய் வர்த்தக தொடர்பினை துண்டித்தால் இந்தியாவானது பல பாதிப்புக்கும் உள்ளாகும் என்பது திண்ணமே. 

மழை, கடும் பனி, புயல் காற்று, சுற்றுப்புற சூழல் பாதிப்பு போன்றவற்றினை நாம் பார்க்கும் போது, அல்லாஹ்வை பற்றிய பயமும் உள்ளச்சமும் நமக்கு மேன் மேலும் அதிகரிக்க வேண்டும். திருக்குர்ஆனை இத்தகைய தருணங்களில் அதிகமதிகமாக ஒதக்கூடிய மக்களாக நாம் இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் நஷ்டம் அடையக்கூடியவர்களாக தான் இருப்போம்.

மனிதன் எப்போதும் நஷ்டத்தில் தான் இருப்பான் என்பதினை திருமறையானது தன்னுடைய அல் அஸ்ர் 103 அத்தியாயத்தில் மிகவும் அழகாக கூறுகிறது.

காலத்தின் மீது சத்தியமாக..

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.

விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்து சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும் (பாவங்களை விடுவதிலும், நன்மைகளைச்; செய்வதிலும் எற்படும் கஷ்டங்ளைச் சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத்தவிர. அல்குர்ஆன் 103 : 1,2,3

Friday, March 20, 2009

சிகரெட்: என்னை எரித்தால்.. உன்னை அழிப்பேன்..


கட்டுரை ஆசிரியை பற்றி சில குறிப்புகள்: சகோதரி. சுமையா மேஹன் அவர்கள், இஸ்லாத்தினை மனமுவந்து ஏற்றுக்கொண்ட அமெரிக்க பெண் எழுத்தாளர். தற்போது இவர் வசிப்பது குவைத் நாட்டில். அமீரகத்திலிருந்து வெளிவரும் ஆங்கில தினசரி நாளேடான கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் LIVING ISLAM  என்ற பகுதியில் இவருடைய ஆங்கில கட்டுரையானது தொடர்ந்து இடம் பெற்றுக்கொண்டு இருக்கிறது. 8.2.2008 அன்று அவர் அந்த பத்திரிகையில், STUB OUT THOSE CIGARETTES, PLEASE..!  என்ற தலைப்பில் எழுதி இருந்த கட்டுரையானது இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு தற்போது பலருக்கு பல உள் மற்றும் புறநோய்களை எளிதாக தந்துக்கொண்டு இருக்கும் புகை பிடிக்கும் பழக்கத்தினை பற்றி ஆசிரியை கூறிய கருத்துக்களை நாம் இங்கு காண்போம்.

விசுவாசங்கொண்டோரே..! உங்களிடையே இரு சாராரின் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவன்றி, (உங்களுடைய) பொருள்களைத் தவறான முறையில் நீங்கள் உண்ணாதீர்கள், அன்றியும் (இதற்காக) உங்களையே நீங்கள் கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், உங்களிடம் மிக்க கிருபையுடையோனாக இருக்கின்றான். திருக்குர்ஆன் 4:29

புகை மற்றும் போதை பழக்கமானது நம்மை நாமே கொலை செய்து கொள்வதற்கு சமமாகும் என்பதினை தான் மிகவும் அழகாக மேற்கண்ட இறைவசனமானது குறிப்பிடுகிறது என்பதினை நாம் அறியலாம். செல்வங்களை தவறான முறையில் செலவு செய்து வீண் விரயமாக்கும் அனைத்து மனிதர்களுக்கும் அச்சமூட்டக்கூடிய அளவிலும் அந்த இறைவசனம் உள்ளது.

அபாயகரமானது என்றும், புகை பிடிப்பவர்களையும், புகை பிடிப்பவர்களின் பக்கத்தில் இருப்பவர்களையும் நோய்க்கு ஆளாக்க கூடியது இப்பழக்கம் தான் என்றால் மிகையாகாது. சிகரெட்டிலிருந்து வெளிவரும் ஒரு வகை நஞ்சானது இருவரையும் எளிதாக தாக்கக்கூடியது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று கூறுவது என்னவென்றால், புகை பிடிப்பவர்களை விட பக்கத்தில் இருப்பவர்கள் தான் அந்த கொடிய நஞ்சு கிருமி நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள்.

புகை பிடிப்பதால், வாய்புற்றுநோய் இதய நோய் மனஅழுத்தம் மன வேதனை மன கஷ்டம் சிறுநீரக கோளாறுகள் இரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்ற இன்னும் பல தொடர்புடைய நோய்கள் வர அதுவே காரணமாகி விடுகின்றன. இந்த நூற்றாண்டில், ஒரு பில்லியன் மக்கள் புகைப்பழக்கம் தொடர்பான நோய்களால் இறக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பானது தன்னுடைய ஆய்வில் வெளியிட்டு உள்ளது. 

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், எவ்வாறு இருக்க வேண்டும், எந்த வகையில் பொருள்களை செலவு செய்ய வேண்டும், யாரை நண்பர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனிதகுலம் அனைத்திற்கும் அறிவுரை வழங்கக்கூடியதாகவும் அவர்களை நேர்வழியின்பால் வழி நடத்திச்செல்லக்கூடியதாகவும் திருக்குர்ஆன் உள்ளது. 

அவனே வானங்களிலும், பூமியிலும் (வணக்கத்திற்குரிய) அல்லாஹ், அவன் உங்களுடைய இரகசியத்தையும், உங்களுடைய பரகசியத்தையும் நன்கறிவான், இன்னும் (நன்மையோ, தீமையோ செய்து) நீங்கள் சம்பாதிப்பவைகளையும் அவன் நன்கறிவான்.திருக்குர்ஆன் 6:3

அல்லாஹுதஆலா மனிதனின் அனைத்து தவறுகளையும் மற்றும் அறியாமைக்காலத்து பாவங்களையும் மன்னித்து அருள் செய்பவன். ஆனால் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை செய்தால் இறைவன் மன்னிக்க மாட்டான். அந்த வரிசையில் புகை பிடித்தலையும், மற்றும் குடிப்பழக்கத்தினையும் கூறலாம். 

புகைக்க, மதுக்குடிக்க செலவிடும் பணத்தினை கொண்டு நல்ல உணவுபொருட்களையும், நல்ல ஊட்டச்சத்தான பழங்களையும் வாங்கி உண்ணலாம். புகை பிடிப்பதால் மனிதனுக்கு என்ன பயன்.? அல்லாஹுதஆலா மனிதனுக்கு கொடுத்த அவனுடைய பணத்தினையும்;, பொன்னான நேரங்களையும் காலங்களையும் இதனால் வீணாக்கிறான். ஒரு சிகரெட்டினை ஊதி தள்ள ஒரு மனிதனுக்கு குறைந்தது ஐந்தோ அல்லது பத்து நிமிடமோ எடுத்துக் கொள்வான். அந்த நேரத்தினை ஏதேனும் பயனுள்ள காரியத்திற்கு எடுத்துக்கொண்டால் அவனுடைய நேரமும் மற்றும் காலமும் பயனுள்ளதாக அமையும்.

சிகரெட் மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் பல ஆதிக்க சக்தி கொண்ட நிறுவனங்கள் பல நாடுகளில் உள்ள பல மில்லியன் மக்களை பல்வேறு சூழ்நிலைகளால் கொலை செய்கிறார்கள். மற்றும் பல கோடிகளை விளம்பரங்களுக்காகவும் மற்றும் பிரசுரங்களுக்காகவும் வீண் விரயம் செய்கிறார்கள். அத்துடன் குடிப்பழக்கம் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று பெருமையாக சிகரெட் அட்டையிலும், மற்றும் மதுபானப்பாட்டிலிலும் போட்டு இருப்பார்கள். போட்டு என்ன பயன்..? முதலில் போதை தரும் எந்த வஸ்துவாக இருந்தாலும் அதனை அந்தந்த அரசாங்கங்கள் உற்பத்தி செய்யவே கூடாது. இதனை அவர்கள் கண்டிப்பாக செயலுக்குக் கொண்டு வர வேண்டும். 

ஒரு பொருள் சந்தைக்கு வந்தால் தான் மக்கள் வாங்குவார்கள். சந்தைக்கே வரவில்லை என்றால் எங்கு போய் வாங்குவார்கள். போதை பொருள்களுக்காக செலவு செய்யும் இத்தகைய பணங்களை புற்று நோய் புனரமைப்பு இயக்கத்திற்கும், பல தொண்டு நிறுவனங்களும், குழந்தைகள் நல காப்பங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் கொடுத்தால் அதன் மூலமாக பலர் பயன் பெறுவார்கள். 

ஆதமுடைய மக்களே..! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் (ஆடைகளினால் உங்களுடைய அலங்காரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், மேலும், (அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள், மேலும், பருகுங்கள். (ஆனால்) வீண் விரயமும் செய்யாதீர்கள், ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான். திருக்குர்ஆன் 7:31

புகை பிடிப்பதால் பல சாலை விபத்துகள் பலகோணங்களில் ஏற்படுகின்றன. வாகனசெலுத்துபவர்கள் ஸ்டைலாக ஒரு கையில் சிகரெட்.. ஒரு கையில் ஸ்டெரிங் என்ற தோரணையில் வாகனத்தினை ஓட்டுவார்கள். ஆனால் ஒரு நொடியில் மரணம் என்பதினை அவர்கள் எங்கே அறிய போகிறார்கள். சாலை விபத்துகளால் நாட்டில் பல பேர்கள் இறந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதினை ஊடகங்களை படிப்பவர்கள் அறிவார்கள். அத்துடன், மறதியின் காரணமாக புகைபிடிப்பவர்கள் சிகரேட் புகையினை அணைக்காமல் விட்டு விடுவதால் இரவு நேரங்களில் இல்லங்களில் தீ விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பினை உண்டாக்கி விடுகிறது இந்த புகைப்பழக்கம்.

புகைப்பிடிப்பதால் சுற்றுப்புற சூழல் மாசுஅடைகிறது. மாசுக்கள் அதிகமாக படிவதால் தூய்மையான காற்றானது அசுத்தமாக மாறி விடுகிறது. ஒரு வெள்ளைத்துணியினை எடுத்து சிகரெட் புகையினை அதில் ஊதிப்பாருங்கள்.. மஞ்சளாகக் கறை ஒன்று படிந்து போய் இருக்கும். அதைப்போல் புகைப்பிடிப்பவர்கள், புகைப் பிடிப்பதால் இதயத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக கறை படிந்து வரும். 

புகைப்பிடிப்பவர்கள், அவர் ஏழையாக இருந்தாலும் ஜகாத் வாங்குவதை இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கிறது. ஏனெனில் ஜகாத் என்பது புனிதமான ஒன்றாகவும், ஜகாத் பணத்தினை கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுங்கள் என்றும் இஸ்லாம் கூறுகிறது. புகைப்பிடிப்பவனிடமோ அல்லது குடிப்பழக்கம் உள்ளவனிடமோ ஜகாத் பணத்தினை கொடுத்தால் அவன் அதனை குடிக்கவும் மற்றும் புகைக்கவும் பயன் படுத்தி அந்த புனிதத்தினை கெடுத்து விடுவான். 

புகைப்பிடிக்கும் பழக்கமானது 500 ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்பானிஷ் என்ற நாட்டிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. அங்கு தோன்றிய இந்த கலாச்சார சீரழிவானது கொஞ்சம் கொஞ்சமாக பல நாட்டு மக்களை பிடித்து ஆட்டுகிறது. 100 வருடங்களுக்கு முன்பு வரை தான் இந்த புகைப்பழக்கமானது இஸ்லாமிய நாடுகளை முற்றுகையிட்டது எனலாம். 

தற்போது வளைகுடா நாடுகளில் அதிகமான இடங்களில், சிஸா (Shisha – Hubbly bubbly -  உக்கா) அதாவது கண்ணாடி குடுவைகளில் வைத்து புகை இழுக்கும் பழக்கமானது அரேபியஆண்களிடமும் அரேபியப்பெண்களிடமும் ஒரு கெட்ட பழக்கமாக ஆகி விட்டது. அந்த சிஸாவினை ஒரு தடவை இழுத்தால் 10 சிகரெட்டினை பிடித்தால் என்ன மாதிரியான உடல் உபாதைகள் வருமோ அதனை விட அதிகமான பாதிப்புகள் அதில் உள்ளன. இதனால் வாய்ப்புற்று நோய்கள் வருவதற்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. இதனை பற்றித்தெரிந்தும் போதை அதிகம் வேண்டும் என்பதற்காக இரவு வேளைகளில் அதிகமாக இங்குள்ளவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். 

வளைகுடா அரசாங்கங்கள் சமீபத்தில், பேருந்து நிலையம், வணிக வளாகம், உணவு விடுதிகள், மருத்துவமனை மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகை பிடிப்பதினை தடை செய்து உள்ளது. மற்றும் 18 வயதிற்கு குறைந்தவர்கள் கடைகளில் சிகரெட் வாங்கினால் அதனை அவர்களுக்கு விற்கக்கூடாது என்றும் அப்படி மீறி விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்துச்செய்யப்படும் என்றும் கடுமையான சட்டங்களையும் பிறப்பித்துள்ளது. 

துரதிஷ்ட்டவசமாக புகை மற்றும் போதை பொருட்கள் உட்கொள்ளும் பழக்கமானது இஸ்லாமியர்களாக இருக்கக்கூடிய நம்முடைய சமுதாயத்தினரை ஆட்க்கொண்டு விட்டது. அல்லாஹ் நாடினால் இனி வரும் நாள்களில் நாம் இத்தகைய சூழ்நிலைக்கு அடிமைப்படாமலும், நம்முடைய சந்ததியினரும் அடிமைப்படாமலும் இறைவன் நம்மை பாதுகாத்து அருள வேண்டும்.

STUB OUT THOSE CIGARETTES, PLEASE..!

By SUMAYYAH MEEHAN

இது போல் பல பயன் உள்ள கட்டுரைகளை சகோதரி மேன்மேலும் நம் சமுதாய மக்களுக்கு தர வேண்டி ஏக இறைவனிடம் பிராத்தனை செய்வோமாக..ஆமீன்.. 

Saturday, March 14, 2009

நபிகள் பெருமானாரின் சிந்தனையும் உலக மனிதனின் உருவாக்கமே. - பழ. கருப்பையா

மேற்கு ஆசியாவில் மக்கா என்னும் நகரம் ஏற்கெனவே அறியப்பட்ட நகரம்தான். ஆனால் கி.பி. 570-ல் அங்கே நிகழ்ந்த ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று. உலகம் முழுவதிலுமுள்ள கோடானுகோடி முஸ்லிம்கள் தாங்கள் பிறந்த நாடு, பிறந்த ஊர் எதுவாயினும் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை கஅபாவை முன்னிறுத்தி, அந்த நகரம் இருக்கும் திக்கு நோக்கித் தொழுகிறார்கள்!

 

வாழ்நாளில் ஒருமுறையாவது அந்த நகரத்திற்குச் செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் ஐம்பெருங்கடமைகளில் ஒன்றாகும்.

உலகின் எந்தப் பகுதியிலுள்ள எந்த மண்ணும் ஒருதன்மையானதுதான்! அதற்கென்று தனிப்பெருமையோ சிறுமையோ கிடையாது. அந்த மண்ணில் பிறக்கின்ற மனிதர்களைப் பொருத்து அது பெருமையோ சிறுமையோ அடைகிறது. நபிகள் நாயகத்தின் ஏற்றமிகு பிறப்பு மக்கா மேன்மைப்படக் காரணமாயிற்று. அதேபோல் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்துப் பெற்ற முப்பது வெள்ளிக் காசுகளை, தன்னுடைய இழிசெயலை எண்ணி மன உளைச்சலுக்கு உள்ளாகி, அவன் வீசி எறிந்த நிலம் 'ரத்த நிலம்' ஆகிச் சிறுமைப்பட்டுவிட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) 63 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் பிந்தைய 23 ஆண்டுகள் இறைவாக்குகள் அவர் வழியாக இறங்கின.

இறைவாக்கினராக நபிகள் நாயகம் (ஸல்) இருப்பினும், அவர் தன்னைத் தெய்வநிலைக்குத் தூக்கிக்கொள்ள விழையவில்லை! தன்னை எளிய மனிதனாகவே பிறர் கருத வேண்டும் என்பதைத் தன்னைப் பின்பற்றுவோரிடம் சட்டமாக்கினார். இசுலாம் என்பதற்கு 'ஒப்படைப்பு' என்பது பொருள். அது முழுச் சரணாகதி நிலை.

பொழுது புலர்வதற்கு முன்னர் தொடங்கி, ஒவ்வொரு நாளும் இடைவெளிவிட்டு ஐந்துமுறை தொழுகைக்கு அழைக்கப்படுகிறது. பொதக்குடியிலும் கூத்தாநல்லூரிலும் வாலாஜாபேட்டையிலும் வங்கதேசத்திலும் இரானிலும் ஈராக்கிலும் ஒரேமாதிரியாக ஐந்துமுறை தொழுகை விளிகுரல் ஓரிடத்தில் கூடித் தொழுது இறையிடம் தம்மை ஒப்படைத்துக் கொள்ளுமாறு அழைக்கிறது.

இசுலாத்திற்கு ஐந்து கடமைகள் உண்டு என்று திருக்குர்ஆன் விதிக்கிறது.

முதற்கடமை - இறை நம்பிக்கை; இரண்டாவது கடமை - தொழுகை; மூன்றாவது கடமை - ஜக்காத்; நான்காவது கடமை - ரம்ஜான் நோன்பு; ஐந்தாவது கடமை - ஹஜ் யாத்திரை.

திருக்குர்ஆனில் 'அல்ஃபாத்திஹா' என்று கூறப்படும் தோற்றுவாய்ப் பகுதிக்கான விளக்கங்களை எவ்வளவு விரித்துச் சொன்னாலும், இன்னும் சொல்வதற்கு ஏதோ எஞ்சி நிற்பதுபோன்ற உணர்வே ஏற்படும்! இறைவன், "அல்லாஹ்" என்றழைக்கப்படுகிறான். "அல்லாஹு அக்பர்" என்னும் சொற்றொடர் இறைவனை மிகப்பெரியவன் என்று பறையறைந்து சொல்கிறது!

இசுலாத்தில் 'இறை ஒருமை' இன்றியமையாதது. இறைவனை ஏகன் என்றும் அனேகன் என்றும் இருவேறு வகையாகத் திருவாசகம் கூறும். அதனுடைய பொருள் அவன் வரையறைக்குட்பட்டவனில்லை என்பதாகும். இது மாணிக்கவாசகர் என்னும் மனிதரின் கூற்று. இந்தக் கூற்றோடு உடன்படலாம்; மாறுபடலாம். எதுவும் குற்றமில்லை. மனிதன் கூறியதை மற்றொரு மனிதன் மறுப்பது இயல்பே! இந்து சமயம் நெகிழ்ச்சிப் போக்குடையது.

ஆனால் திருக்குர்ஆன் என்பது இறைவாக்கு! ஆகவே ஐயத்திற்கிடமான விவாதிக்கத்தக்க நிலை என்று குர்ஆனில் எதுவுமே இருக்க முடியாது. எல்லாமே தீர்மானமாகச் சொல்லப்பட்டவை! மாற்றம் செய்ய எந்த மாந்தனுக்கும் உரிமையில்லை. இசுலாம் கட்டிறுக்கமானது.

இன்றைய உலகமயமாக்கல் எல்லா நாகரிகங்களையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. சிலரைக் கொழுக்க வைத்துப் பலரை அன்னக்காவடிகளாக்கும் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையே அகிலத்தின் கொள்கையாகிவிட்டது. ஒரு மொழி, ஒரு கொடி, ஒரு பண்பாடு என்னும் நிலையை நோக்கி எல்லா நாடுகளும் தங்களின் தனித்தன்மையை இழக்குமாறு செய்யப்பட்டுத் தலைகீழாக இழுத்துச் செல்லப்படுகின்றன. முன்பு சோசலிசக் கோட்பாடு தடுத்து நிறுத்தி வைத்திருந்த அமெரிக்கச் சீரழிவுக் கலாசாரம், இன்று தடுப்பாரின்றித் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இன்னும் அமெரிக்கச் சீரழிவுக் கலாசாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாசாரம் இசுலாமியக் கலாசாரம்தான். அதற்குக் காரணம் அதனுடைய கட்டிறுக்கமான அமைப்புத்தான்.

நபிகள் பெருமகனார் எல்லாத் தட்பவெப்ப நிலைகளையும் தாங்குவதற்கும் எதிர்கொள்வதற்கும் தோதாக "உம்மா" என்கிற இசுலாமியச் சமூக அமைப்பை உருவாக்கியிருக்கிறார்!

அரபுத் தேசியத்தைக் கட்டியமைக்கப் புறப்பட்ட நபிகள் பெருமானார் கஅபாவிலிருந்து விக்கிரகங்களை விலக்கினாரே ஒழிய, கஅபாவை விலக்கிவிடவில்லை. கஅபா என்னும் பழைய அரபு வேரிலிருந்து புதுமை படைத்தவர் நபிகள் பெருமானார்.

ஒருவன் இசுலாமியனாகத் திகழ்வதற்கு இறைநம்பிக்கை எப்படி இன்றியமையாததோ, அப்படியே இன்றியமையாதது கூடித் தொழுதல்.

தொழுகை விளிகுரல் தொழுகைக்கான நேரத்தை வரையறுத்து அழைப்பதன் நோக்கமே கூடித் தொழுதலின் இன்றியமையாமை காரணமாகவே! ஆகவே இசுலாத்தில் தொழுகை தனிமனித விவகாரமில்லை. அது சமூக உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

தொழுதால் போதாதா? கூடித்தான் தொழ வேண்டுமா என்று கேட்டால், இசுலாம் "ஆம்" என்று உறுதிபடக் கூறுகிறது.

தொழுதல் 'உம்மாவோடு' தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. உம்மா என்பது சமூகம். அது ஒரு கொள்கை வழிப்பட்ட கூட்டத்தைக் குறிக்கிறது. இது நபிகள் பெருமானாரின் தனிப் பெருஞ்சிந்தனை! இஸ்தான்புல்லில் உள்ள இப்ராஹீமோடு நம்முடைய இளையான்குடி புதூரில் உள்ள அப்துல்லாஹ்வும் இணைய முடிவதற்கு நபிகள் பெருமானார் உருவாக்கிய உம்மாதான் காரணம்! இசுலாத்தில் 'உம்மா' முக்கியத்துவம் உடையது என்பதால் கூடித் தொழுதல் முக்கியத்துவமுடையதாகி விடுகிறது.

(கடைசிக்) கடமையான ஹஜ் யாத்திரையின் நோக்கமே இந்தச் சமூகக் கட்டமைப்பைக் கெட்டிப்படுத்துவதுதான்!

மக்கா கஅபாவின் முன்னால் ஆப்பிரிக்கரும் சீனரும் இளையான்குடி புதூர் திராவிடரும் வளைகுடா நாட்டு அரேபியரும் டாக்காவைச் சேர்ந்த வங்காளியும் பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபியும் அருகருகே குனிந்தும் நிமிர்ந்தும் கைகளைச் சேர்த்தும் விரித்தும் ஒரே மாதிரியாகத் தொழும்போது ராணுவ அணிவகுப்புத் தோற்றுவிடும் என்பது அழகியல் பார்வை! விரிந்து, பரந்த, சமூக உருவாக்கம் நபிகள் பெருமானாரின் சிந்தனையாக இருந்தது என்பது கருத்தியல் பார்வை!

அரபு தேசியத்திலிருந்து படிப்படியாக விரிந்து, உலக சமுதாயத்தை நோக்கி வளர்கிறது நபிகள் பெருமானாரின் கூடித் தொழுதல் என்னும் கோட்பாடும் உம்மா உருவாக்கமும்!

இசுலாத்தின் மூன்றாவது கடமை ஜக்காத். ஒருவன் தன் வருவாயில் நாற்பதில் ஒரு பங்கை, அஃதாவது இரண்டரை விழுக்காட்டை ஏழைபாழைகளுக்கு வழங்குவது! இந்தத்தொகை ஒன்றும் அதிகமானதில்லை. யாருக்கும் இயலக்கூடியதுதான்!

ஒரு சமூகத்தில் சிலர் வசதியானவர்களாகவும் பலர் வறியவர்களாகவும் இருக்கும்போது, வறியவர்கள் இயல்பாக வாழ வழி செய்யப்படவில்லை என்றால் இவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதும் வழிப்பறியாளர்களாகக் கையோங்குவதும் தவிர்க்க இயலாததாகிவிடும். அத்தகையச் சூழ்நிலையில் எந்த அரசும் வறியவர்களைக் கட்டுக்குள் வைக்க முடியாது!

ஆகவே உலகிலுள்ள எல்லா நெறியாளர்களும் கொடையைப் போற்றியிருக்கிறார்கள். "ஈத்துவக்கும் இன்பம்" என்று ஈகை பாராட்டி அதை ஊக்குவிப்பான் வள்ளுவன். வறியவர்கள் பெருவாரியாக இருக்கும் உலகில் ஈகை வறுமைக்குத் தீர்வாகாது எனினும், அது பேருந்துகளிலுள்ள அதிர்ச்சிதாங்கிபோல் செயல்படுவதால், வறியவர்கள் பொங்கி எழுந்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதில்லை.

இன்றைக்கு ஒரு கிலோ அரிசி ரூ.38க்கு விற்கும் நிலையில் வறியவர்களுக்கு ஓர் அரசு ரேஷன் கடையில் கிலோ 1 ரூபாய்க்கு அரிசி போடுவது, வறியவர்களின்மீது கொண்ட பற்றினால் அல்ல; ஆட்சியிலிருக்கும் வசதிமிக்க கோமான்கள் தங்களையும் தங்களையொத்த வசதியானவர்களையும் கிளர்ச்சிகளிலிருந்து காத்துக்கொள்வதற்காகத்தான்!

எல்லாரும் கொடுப்பதைப் பாராட்டுகிறார்கள் எனினும் "ஈவார் மேல் நிற்கும் புகழ்" என்று வள்ளுவன் புகழாசை காட்டி கொடுக்கச் சொல்கிறான் என்றாலும், நபிகள் பெருமானார் ஜக்காத் என்று சொல்லப்படும் கொடையை இசுலாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக்கி அதைக் கட்டாயமாக்கிவிடுகிறார்.

"ஜக்காத் கொடுக்காதவர்களின் நம்பிக்கையையோ தொழுகையையோ அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை" என்று நபிகள் பெருமானார் அடித்துக் கூறும்போது, ஏழைபாழைகளின்மீது அவர் கொண்டுள்ள பரிவு அல்லாஹ்வின்மீது கொண்டுள்ள அன்பையும் விஞ்சி நிற்கிறது!

நான் முதற்கடமையான கடவுள் நம்பிக்கை உடையவன்; இரண்டாவது கடமையான தொழுகையையும் தவறாது நிறைவேற்றுபவன் என்று ஒருவன் நபிகளிடம் சொன்னால், மூன்றாம் கடமையான ஈயும் குணம் உன்னிடம் இல்லை. ஆகவே அல்லாஹ் உன்னை ஏற்க மாட்டார் என்று தள்ளிவிடுகிறார்.

மூன்றாம் கடமைக்குள் முதலிரண்டு கடமைகளையும் அடக்கிய நபிகள் பெருமானாரின் சிந்தனை ஈடுஇணையற்ற அழகுடையது; ஒப்பற்றது; சமூக உய்வை நோக்கமாகக் கொண்டது!

தீர்ப்பு நாளன்று நீங்கள் செய்த நல்ல தீய செயல்களுக்குத் தக்க வெகுமதி அல்லது தண்டனை உண்டு என்று திருக்குர்ஆன் சொல்வது நாம் ஏற்கெனவே கேட்டறிந்த கோட்பாடுதான்!

ஆனால் செய்யத்தவறிய செயலுக்குக்கூடத் தீர்ப்புநாளில் தண்டனை உண்டு என்று நபிகள் சொல்வதும் "உங்களுக்கு இவ்வளவு வசதி இருந்தும், உங்கள் பக்கத்திலேயே ஆதரவற்றவர்கள் இருந்தும் அவர்களுக்கு ஏன் உதவவில்லை? என்ற கேள்விக்குத் தீர்ப்பு நாளில் பதில் சொல்ல நேரிடும்" என்று சொல்வதும் நாம் கேட்டறியாத ஒப்பற்ற கோட்பாடு!

நான்காம் கடமை ரம்ஜான் நோன்பு. அந்த நோன்பு மாதம் முழுவதும் உண்ணாமலும் எதையும் அருந்தாமலும் இணைவிழைச்சு முதலியவற்றில் ஈடுபடாமலும் பகற்பொழுது முழுவதையும் கழிப்பது; தொழுவது!

பொதுவாகப் பண்டிகைகள் ஆட்டபாட்டம், விருந்து என்ற வகையில் கொண்டாடப்படும். ஆனால் பட்டினி கிடந்து பண்டிகை கொண்டாடு என்ற சிந்தனை இன்னொரு அழகிய சிந்தனை.

பட்டினி கிட; பசியை உணர்; பசித்தவனுக்குச் சோறுபோடு! இதுதான் நான்காம் கடமையின் உட்பொருள்.

ஒரு திருவிழாவைப் பட்டினித் திருவிழாவாக்கி, பட்டினிக்கு எதிராக இயக்கம் நடத்திய நபிகள் பெருமானாரின் உன்னதமான சிந்தனை உலகை உயர்த்தவல்லது.

ஐந்தாம் கடமையான ஹஜ் யாத்திரை உம்மாவோடு இணைத்து ஏற்கெனவே பேசப்பட்டிருக்கிறது!

இசுலாத்திற்கு ஏக இறைத்துவம் எனப்படும் இறை ஒருமை முக்கியம்! இறையச்சம் முக்கியம். இறைவனுக்கு இணை சொல்லக்கூடாது என்பது முக்கியம். தீர்ப்பு நாளில் நம்பிக்கை முக்கியம். ஐந்துவேளை தொழுகை முக்கியம். ஜக்காத் முக்கியம். உம்மா முக்கியம்.

இன்னும் எத்தனையோ முக்கியங்கள் உண்டு. விரித்தால் விரிகடலெனப் பெருகும். ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் உடன்பிறந்தோன் என்பதை வலுப்படுத்தவே ஹஜ் யாத்திரை. தனிச்சாதி, தனிக்குலம், தனி இனம் என்பதெல்லாம் தகர்ந்து போகும். தேசத்தின் எல்லைக் கோடுகள் தளர்ந்து போகும். தகர்ந்துதான் போகட்டுமே. அவற்றை இறைவனா போட்டான்?

1947-க்கு முன்பு நம்முடைய தேசபக்தி முழுப் பஞ்சாபையும் முழு வங்காளத்தையும் உள்ளடக்கியது. 1947-க்குப் பின் கிழக்கு வங்கத்தின்மீதும் பலுசிஸ்தான்மீதும் பற்றுக் காட்டுவது தேசபக்தி ஆகாது. நம்முடைய தேசபக்தி ஒச்சமுடையதுபோலும். ஒருகாலத்தில் விரிகிறது; பிறிதொரு காலத்தில் சுருங்குகிறது.

"யாதும் ஊரே; யாவருங் கேளிர்" என்னும் தமிழ்ச் சிந்தனை உலகு தழுவியது. நபிகள் பெருமானாரின் சிந்தனையும் உலக மனிதனின் உருவாக்கமே.

உலக மனிதனை உருவாக்குவது இன்னும் கற்பனாவாதமாகவே இருந்தாலும், இசுலாத்தின் முயற்சி அதுதான்.

உலக மனிதனே இசுலாத்தின் சாரம்.

நன்றி : பழ. கருப்பையா