குர்ஆன் : குழந்தைகளின் புத்திக்கூர்மையை வளர்க்கும்
திருமறைக்குர்ஆனை மனனமிடுவதையும் அதன் கருத்துக்களை சிந்திப்பதையும் குழந்தைகளின் புத்திக் கூர்மையை வளர்க்கும் அதிமுக்கிய வாயில்களில் ஒன்றாகக் கருத முடியும். ஏனெனில், அல்குர்ஆன் அறிவின்பால், சிந்தனையின்பால் அழைக்கின்றது. புதுமை படைக்குமாறு புத்திக்கூர்மையை பயன்படுத்துமாறு அழைப்பு விடுக்கின்றது.
இது ஹல்வான் பல்கலைக்கழக உளவியல் துறை விரிவுரையாளர் இஸ்மாயீல் அப்துல் பத்தாஹ் அவர்கள் மெற்கொண்ட நவீன ஆய்வின் முடிவாகும். அல்குர்ஆனை மனனமிடுவதும் அதன் கருத்துக்களைச் சிந்திப்பதும் அது பற்றிய பரிபூரண அறிவைப் பெறுவதும் சிறியோரின் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கின்றது என்பதை இவரது ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
உமது ஈமான் அதிகரிக்க வேண்டும். அறிவும் செயலும் இணைய வேண்டும் என்ற நோக்கில் அல்குர்ஆன் வானங்கள், பூமி பற்றியும், மனிதனைப் பற்றியும், எம்னைச் சூழ உள்ள பொருட்கள் பற்றியும் சிந்திக்குமாறு அழைப்பதை அவ்வாய்வில் அவர் விளக்குகின்றார். அப்துல் பத்தாஹ் அவர்கள் புஹாரி, அபூதாவூத், நஸஈ போன்ற ஹதீஸ் நூல்களில் வந்துள்ள ஹதீஸ்களையும் அதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்.
அமர் இப்னு ஸலாமா அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எனது தந்தை (ஹிஜ்ரத்துக்கு முன்னர் கூறினார் – நான் அல்லாஹ் வின் தூதரிடம் இருந்து ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் பின்வருமாறு கூறினார்கள் :
உங்களுக்குத் தொழுகையின் நேரம் வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். அல்குர்ஆனை நன்கு மனனமிட்டவர் ஜமாஅத் நடத்தட்டும். அம்ர் இப்னு மஸ்லமா கூறுகிறார் : அப்போது எல்லோரும் உற்று நோக்கினர். அவ்விடத்தில் அதிகம் மனனமிட்டவர் என்னைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. நான் ஏழு வயதுச் சிறுவனாக இருந்த நிலையிலும் என்னையே முற்படுத்தினார்கள்.
ரஸூலுல்லாஹ் மதீனாவுக்கு வருவதற்கு முன்னர் மதீனாவில் முஸ்லிம்களுக்குத் தொழுகை நடத்திய இச்சிறுவன் மக்காவிலிருந்து குர்ஆனைச் சுமந்து வரும் பயணிகளிடமிருந்து குர்ஆனைச் செவிமடுத்தான். அவனுக்கு இறைவன் கொடுத்த திறமை, மனன ஆற்றல் என்பவற்றைப் பயன்படுத்தி அல்குர்ஆனில் அதிகமான பகுதியை மனனம் செய்திருந்தான். இதன் மூலம் மக்களை வைத்து ஜமாஅத் நடத்த தகுதி பெற்றான்.
குழந்தைகளின் புத்திக் கூர்மையை வளர்ப்பதில் பள்ளிவாசல்களும், முக்கிய பங்காற்றுவதை இந்த ஆய்வு தெளிவுபடுத்துகின்றது. பள்ளிவாசல் குழந்தைகளிடத்தில் நல்ல நடத்தைகள், ஒழுக்கங்களை, சிறந்த மார்க்க விழுமியங்களை பரப்புவதிலும், போதிப்பதிலும் ஈடுபடுகின்றது. குழந்தைகளை அது வாழும் நடைமுறை உலகுடன் பள்ளிவாசல் பிணைக்கிறது.
பள்ளிவாசல் குழந்தைகளிடத்தில் நல்ல பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக, அவர்கள் ஏழு வயதை அடையும் போது அதன் பங்களிப்பு விரிவடைந்து குழந்தைகளின் ஆறிவாற்றலை வளர்க்கும் வகையிலும் அதன் பகுத்தறிவுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் குர்ஆனுடைய மனன சக்தி அமைகின்றது. இவ்வாறு சிறு பிராயத்திலேயே குழந்தையிடம் பூரண வளர்ச்சியை ஏற்படுத்துவதில் பள்ளிவாசல் முக்கிய பங்கு வகிக்கின்றது.
புத்தி கூர்மையை ஏற்படுத்துவதில் பரம்பரைக் காரணிகள் தாக்கம் செலுத்திய போதிலும் அது முயற்சியின் மூலமும் கடின உழைப்பின் மூலமுமே துரிதப்படுத்தப்படுகின்றது என்பதை இவ்வாய்வு காட்டுகிறது. குழந்தைகளின் புத்தி கூர்மையை வளர்ப்பதில் குடும்பம், கல்வி, தகவல் தொடர்பு, வணக்க வழிபாடுகள் போன்ற பல்வேறு காரணிகளும் பங்காற்றுகின்றன.
No comments:
Post a Comment