Translate

Wednesday, August 13, 2014

உளூவின் சட்டங்கள் பகுதி 3 - காலுறைகள் மீது மஸஹ் செய்தல்

காலுறைகள் மீது மஸஹ் செய்தல்

 உளூச் செய்யும் போது கடைசியாக இரு கால்களையும் கரண்டை வரை கழுவ வேண்டும் என்பதை உரிய ஆதாரங்களுடன் முன்னர் கண்டோம்.
காலுறை அணிந்திருப்பவர்கள் கால்களைக் கழுவாமல் காலுறையின் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம் என்பது இந்தச் சட்டத்தில் உள்ள விதி விலக்காகும்.
நான் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது முகத்தையும், இரு கைகளையும் கழுவினார்கள். தலைக்கு மஸஹ் செய்தார்கள். இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள். 
அறிவிப்பவர்: முகீரா (ரலி)
நூல்கள்: புகாரீ 182, முஸ்லிம் 404

பெண்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாமா? 

பெண்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்வது கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இது தவறாகும். நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிய எந்த வணக்கமும் இரு பாலருக்கும் உரியது தான். பெண்களுக்கு இல்லை என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் சொல்யிருக்க வேண்டும். அவ்வாறு ஹதீஸ்களில் கூறப்படாததே இச்சலுகை பெண்களுக்கும் பொருந்தும் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்.
மேலும் காலுறைகள் மீது மஸஹ் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பது அதைக் கழற்றுவதால் ஏற்படும் சிரமத்துக்காகவே! அச்சிரமம் இரு பாலருக்கும் பொதுவானது என்பதால் இச்சலுகையும் பொதுவானது தான்.

காலுறைகள் மீது மஸஹ் செய்யவதற்குரிய நிபந்தனைகள் 

ஆண்களும் பெண்களும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்ற இச்சலுகைக்கு சில நிபந்தனைகள் உள்ளன.
காலுறைகளை அணிவதற்கு முன் கால்களைக் கழுவியிருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனையாகும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றிய போது அவர்களின் காலுறைகளை நான் கழற்ற முயன்றேன். அப்போது அவர்கள், 'அவற்றை விட்டு விடு! ஏனெனில் கால்கள் தூய்மையாக இருந்த நிலையில் தான் அவற்றை நான் அணிந்திருக்கிறேன்' என்று கூறி அவற்றின் மீது மஸஹ் செய்தார்கள். 
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல்கள்: புகாரீ 206, முஸ்லிம் 408

காலுறைகள் அணிவதற்கு முன் கால்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸிருந்து அறியலாம்.

கால்களில் வெளிப்படையாகத் தெரியும் அசுத்தங்கள் ஏதும் ஒட்டியிருந்து அதன் மேல் காலுறை அணிந்து கொண்டால் மஸஹ் செய்ய முடியாது. காலுறையை அணியும் போது உளூவுடன் இருக்க வேண்டும்.
தூய்மையாக இருக்க வேண்டும் என்பது இவ்விரண்டையும் குறிக்கும்.
ஒருவர் உளூச் செய்து கால்களைக் கழுவுகின்றார். உடனே காலுறைகளை அணிந்து கொள்கின்றார் என்றால் அதன் பின்னர் அவர் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் அவர் மலஜலம் கழித்தாலும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம்.
ஒருவர் லுஹர் நேரத்தில் உளூச் செய்கின்றார். அப்போது கால்களையும் கழுவுகின்றார். இதன் பின்னர் அஸர் வரை அவரிடமிருந்து உளூவை நீக்கும் காரியங்கள் ஏதும் நிகழவில்லை. இந்த நிலையில் அஸர் நேரத்தில் காலுறைகளை அணிகின்றார் என்றால் இவரும் இதன் பின்னர் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். காலுறை அணிவதற்குச் சற்று முன்னர் தான் கால்களைக் கழுவ வேண்டும் என்று கட்டாயம் இல்லை. காலுறை அணியக் கூடிய நேரத்தில் அவருக்கு உளூ இருக்க வேண்டும் என்பது தான் கட்டாயம்.

சலுகையின் கால அளவு

உளூவுடனும், கால் அசுத்தம் இல்லாத நிலையிலும் காலுறை அணிந்தவர், காலமெல்லாம் காலுறைகள் மீது மஸஹ் செய்ய முடியாது.
தினமும் ஒரு தடவையாவது காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவிக் கொள்ள வேண்டும். இன்று காலை 10மணிக்கு உளூச் செய்த நிலையில் ஒருவர் காலுறை அணிந்தால் நாளை காலை 10 மணி வரை அவர் எத்தனை தடவை உளூச் செய்தாலும் கால்களைக் கழுவத் தேவையில்லை. காலுறைகள் மீது மஸஹ் செய்வதே போதும். 24மணி நேரம் கடந்து விட்டால் கால்களைக் கழுவி விட்டு உளூவுடன் காலுறையை அணிந்து கொள்ள வேண்டும்.
பயணிகளாக இருப்பவர்களுக்கு இதில் கூடுதல் சலுகை உள்ளது. அவர்கள் உளூவுடன் காலுறை அணிந்தால் காலுறை அணிந்த நேரத்தில் இருந்து மூன்று நாட்கள் (72 மணி நேரம்) காலுறையைக் கழற்றாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். பயணத்தில் இருப்பவர்கள் மூன்று நாட்களுக்குப் பின் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவிவிட்டு உளூவுடன் காலுறையை அணிய வேண்டும்.
காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேள்வி கேட்கச் சென்றேன். அதற்கவர்கள், 'அலீ பின் அபீதாபிடம் சென்று கேள். அவர் தான் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராக இருந்தார்' என்று கூறினார்கள். நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். 'பயணிகளுக்கு மூன்று பகல் மூன்று இரவு எனவும், உள்ளூரில் இருப்பவர்களுக்கு ஒரு பகல் ஓர் இரவு எனவும் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்' என்று அலீ (ரலி) விடையளித்தார்கள். 
அறிவிப்பவர்: ஷுரைஹ்
நூல்: முஸ்லிம் 414

குளிப்பு கடமையானால் இச்சலுகை இல்லை


குளிப்பு கடமையாகி விட்டால் குளிக்கும் போது காலுறைகளைக் கழற்ற வேண்டும். கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது உடல் முழுவதும் கழுவி விட்டு காலை மட்டும் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்தால் கடமையான குளிப்பு நிறைவேறாது.
நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும், உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும் எனவும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். 
அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 89, நஸயீ 127, இப்னுமாஜா 471, அஹ்மத் 17396

காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்தல் 

நபி (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன். 
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 140, அஹ்மத் 699

எவ்வாறு மஸஹ் செய்வது? 

நபி (ஸல்) அவர்கள் தலைக்கு மஸஹ் செய்தது பற்றி அவர்கள் வழியாக விரிவான செயல் விளக்கம் நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் காலுறையின் மேற்பரப்பில் மஸஹ் செய்தார்கள் என்று மட்டுமே கூறப்படுகின்றது. எவ்வாறு என்று விளக்கமாகக் கூறப்படவில்லை.
எனவே தான் ஐந்து விரலால் மஸஹ் செய்ய வேண்டும்; மூன்று விரல்களால் மஸஹ் செய்ய வேண்டும்;காலுறையின் அதிகமான பகுதிகள் மீது மஸஹ் செய்ய வேண்டும் என்றெல்லாம் பலவிதமாக அறிஞர்கள் கருத்துக் கூறியுள்ளனர். ஆயினும் நபி (ஸல்) வழியாக குறிப்பிட்ட அளவு எதுவும் கூறப்படாததால் மஸஹ்' என்று சொல்லப்படும் அளவுக்கு காலுறையின் மீது தடவ வேண்டும் என்று மக்களிடமே அந்த உரிமையை விட்டு விட வேண்டும். இப்படித் தான் செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட முறையைத் திணிக்கக் கூடாது.
இது தவிர காலுறைகள் தோல் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் இன்னும் பல விதிகளைச் சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இவற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை.

No comments: