Translate

Tuesday, October 21, 2008

வாழ்த்துக்களில் சிறந்தது - அஸ்ஸலாமு அலைக்கும்

மனிதர்களின் உரையாடலுக்கும், ஒருவரை ஒருவர் விளங்கிக்கொள்ளும் புரிந்துணர்விற்கும் மொழி ஒரு பாலமாக இருக்கிறது. ஒரு விஷயத்தைப் பேசுகையில் வார்த்தைகளும் அதனை அமைக்கும் சொற்றொடர்களும் மிக முக்கியமானவை.

இஸ்லாம் ஒரு சக சகோதரரை சந்திக்க/உரையாட நேர்ந்தால் "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ" என்று கூறுங்கள் என்று அறிவுறுத்துகிறது. இதற்கு "தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!" என்கிற அழகான பொருள் பொதிந்திருக்கும் வாழ்த்தைக் காணலாம். 

இதுவே அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுடைய போதனையாகவும், மனிதகுலத்திற்குரிய மிகச் சிறந்த முன்மாதிரியாகவும் இருந்தது. மேலும் அளவற்ற அருளாளன் அல்லாஹ்வே முஸ்லிம்களுக்கு ஏவியுள்ள நல்வழியாகிய வாழ்த்து முறையும் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்பது தான். 


அல்லாஹ் குர்ஆனில், கீழ்க்கண்டவாறு கூறுகிறான்:

"மேலும் உங்களிடம் என்னுடைய வசனங்களை(அத்தாட்சிகளை, தெளிவான ஆதாரங்களை) நம்பக்கூடியவர்கள் வரும்போது (அவர்களுக்கு) நீங்கள் கூறுங்கள், "ஸலாமுன் அலைக்கும்"(உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)". (அல் அன் ஆம் 6 : 54 )
இப்னு அல் கைய்யிம்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அர்ரஹ்மான் எனும் சர்வ வல்லமையுடையவன் மிகவும் தூய்மையான, சாந்தியானவன். அவன் முஸ்லிம்க(ளாகிய இஸ்லாமியர்க)ளுக்கு "அஸ்ஸலாமு அலைக்கும் " என்பது வாழ்த்தாக இருக்க வேண்டும் என்று விதித்துள்ளான். 
இது இவ்வுலகில் உள்ள அனைத்து நாட்டினர் தற்போது கடைபிடித்து வரும் வாழ்த்து முறைகள், வழிமுறை செயல்களாகிய உண்மைக்கு புறம்பான வாழ்த்துக்களையும் விட சிறந்த ஒன்றாகும். "ஆயிரம் ஆண்டுகள் வாழ (வேண்டும் என்று) வாழ்த்துகிறேன்" என்பதோ "குட்மார்னிங் - காலை வணக்கம்" என்பதோ அல்லது ஒருவர் மற்றவருக்கு சிரம் பணிவதோ, அப்பொருளுடைய வார்த்தைகள் கூறிக் கொள்வதோ சரியான ஒன்றாகாது.
இவ்வாறே இந்த 'அஸ்ஸலாமு அலைக்கும்' எனும் வாழ்த்து எல்லாவற்றையும் விட சிறந்த ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இதன் பொருள் பாதுகாப்பு , அமைதி (சாந்தி - நிம்மதி) போன்றவை ஆகும். இவைகளே வாழ்க்கை சுபிட்சத்திற்கு அவசியமானவை. மேலும் இவையின்றி வேறு எதையும் அடைவது இயலாதது.
''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்பது வாழ்த்தோடு மட்டுமின்றி மிகச் சிறந்த பிரார்த்தனை ஆகும். எப்படி?

'ஸலாம்' எனும் வார்த்தை 'ஸலெம' எனும் மூல வார்த்தையிலிருந்து வருகிறது. இதற்கு, தீய மற்றும் கேடானவற்றை விட்டு ஒருவர் தன்னை வேறுபடுத்திக் கொள்வது என்று பொருள் வரும். ஆக,நாம் ஒருவரை மற்றொருவர் வாழ்த்தும் போது, "உனக்கு எவ்வித தீங்குகளும் என்புறத்திலிருந்து வராது; உனக்கு எந்த கேடானதும் வரக்கூடாது; உனக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது;" என்ற பிரார்த்தனையாக இது மாறுகிறது. 

மேலும் 'அஸ்-ஸலாம்' என்பது அளவற்ற அருளாளனாகிய எல்லாம் வல்ல 'அல்லாஹ்' வின் அழகிய பெயர்களில் ஒன்றாக இருப்பதால், இந்த ஸலாம் எனும் வாழ்த்து "அவனுடைய பெயரில் உங்கள் மீது அருள் இறங்கட்டும்; உங்களோடு அல்லாஹ் இருக்கட்டும்; உங்களை அல்லாஹ் நல்வழி நடத்தி பாதுகாக்கட்டும்" என்றும் பொருள் வரும். 

ஆனால் இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் நாம் இவ்வளவு அழகான அர்த்தம் பொதிந்துள்ள ஒன்றை விட்டு விட்டு அதற்கு பகரமாக ''குட் மார்னிங்" அல்லது "ஹாய்" போன்ற அலங்காரமான கருத்தற்ற வாழ்த்துக்களை கூறிக் கொள்வதை தற்பொழுது பழக்கமாக்கிக் கொண்டோம்

நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில், நபித்தோழர்களாகிய ஸஹாபா(பெரும)க்களோ யார் ஸலாம் சொல்வதில் முந்திக்கொள்வது என்று போட்டி போட்டுக் கொண்டு ஒருவர் மற்றவருக்கு ஸலாம் கூறி வந்தனர். இன்னும் சிலர் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் கூறி(வாழ்த்தி)க் கொள்வதற்காகவே பொது இடங்களுக்குச் சென்றனர்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: " இருவர் சந்தித்துக் கொள்ளும் போது யார் முதலில் ஸலாம் சொல்லி (பேச) ஆரம்பிக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவராவார்". அறிவிப்பாளர்: இமாம் அந் நவவி அவர்கள்

இவ்வாழ்த்தின் நற்பலன்கள்

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் சில நபித்தோழர்களுடன் அமர்ந்திருந்த இடத்தை கடந்த ஒரு மனிதர் அவர்களுடன் அமரும் போது, "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறினார்.(அப்பொழுது) நபி(ஸல்) அவர்கள், (அவர் பெற்று கொள்வது உறுதி) ''பத்து ஹஸனாத் ''(பத்து நன்மைகள்) என்று கூறினார்கள். அடுத்தொருவர் வந்தார். அவர், "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்'' (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்) என்று கூறி அமர்ந்தார். நபி(ஸல்), அவர்கள் கூறினார்கள்:(அவர் பெற்று கொள்வது உறுதி) ' இருபது ஹஸனாத்'(இருபது நன்மைகள்). மூன்றாவதாக ஒருவர் வந்தார். அவர், "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு"(உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் அருளும் உண்டாகட்டும்) என்று கூறிவிட்டு அமர்ந்தார். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அவர் பெற்று கொள்வது உறுதி) ' முப்பது ஹஸனாத்'(முப்பது நன்மைகள்).

அஸ்ஸலாமு அலைக்கும் என்பது ஈமானி(இறை நம்பிக்கையி)ன் அம்சம் ஆகும்

ஒரு நாள் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், "இஸ்லாத்தில் எந்த அம்சம் மிகச் சிறந்தது" என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பசித்தவருக்கு உணவளித்தலும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதும்" (ஹதீஸ் நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

1 comment:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

Thanks for your posting. Insha Allah Please continue for more article.

Suresh Babu.P