Translate

Sunday, May 24, 2009

கல்வியில் ஆர்வம் காட்டுவோம்

இந்திய முஸ்லிம் சமூகம் இந்திய விடுதலைப் போருக்காக இழந்தவைகளில் கல்வியும் ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த பொழுது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு ஆதரவாக ஆங்கிலக் கல்வியைக் கற்க மாட்டோம் என்று கூறி பள்ளி, கல்லூரிகளை விட்டும் வெளியேறிய முஸ்லிம்கள் இன்று வரை, கல்விக் கூடங்களுக்கு வெளியில் தான் நின்று கொண்டிருக்கின்றார்கள். ஏன்? ஆங்கிலக் கல்வியைக் கற்பது ஹராமானது என்று கூட மார்க்க அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.


இந்த தியாகங்கள் எல்லாம் இன்றைக்கு ஏட்டில் கூட இருக்கக் கூடாது என்று அதனை அழித்து விடும் பணியில் அயோக்கியர்கள் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இன்னும் இந்திய முஸ்லிம் சமூகம் தனக்கு எதிராக பின்னப்பட்டுக் கொண்டிருக்கும் சதி வலையை அறிந்து கொள்ள இயலாமல் இருந்து வருவது வேதனைக்குரியது.


உலக மதங்களில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மதங்களில் தலையாயது இஸ்லாம். கல்வி கற்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படை உரிமையாக்கி வைத்திருக்கின்றது இஸ்லாம். ஆனால் இதை உணராத இந்திய முஸ்லிம் சமூகம் மற்ற சமூகங்களை விடப் கல்வியில் மிகவும் பின் தங்கி இருக்கின்றது. இதன் காரணம், சமூக, பொருளாதாரக் காரணங்களை விட, அரசியல் தலையீடுகளின் காரணமாகத் தான் இன்றைக்கு இந்திய முஸ்லிம் சமூகம் கல்வியில் பின்தங்கி வருகின்றது என்று சொன்னால் அதில் மிகையில்லை. வறுமை அரசின் ஒதுக்கல் போக்கு வேலையின்மை கடுமையான போட்டி மேலே நாம் கண்ட இந்த நான்கு அம்சங்களை அடுத்து கீழே உள்ள இந்த பிரதான காரணங்கள் கல்விச் சாலைகளை விட்டும் முஸ்லிம்களை ஓரங்கட்டுகின்றன.


அரசின் நடவடிக்கைகள் காரணமாக சிறுபான்மையினரின் கல்வி கற்கும் உரிமை பறிப்பு கல்வியின் முக்கியத்துவம் அறியாத சமுதாய மக்கள், தங்கள் குழந்தைகளின் பள்ளிப்படிப்பை இடைநிறுத்துதல் வறுமை இந்திய முஸ்லிம் சமுதாயம் வளமான சமுதாயப் பின்னணி கொண்டது கிடையாது. இருப்பினும் இந்த வறுமையை நம்முடைய மார்க்கத்தின் அடிப்படைக் கடமையான ஜக்காத் தைப் பின்பற்றுவதன் மூலம் துடைத்தெறிந்திருக்க முடியும். சமுதாயத்தின் பொடுபோக்குத்தனம் மற்றும் மார்க்க அறிவின்மை காரணமாக நாம் இந்த நோயிலிருந்து விடுபட முடியாமல் இருக்கின்றோம்.


இந்த ஜகாத் என்னும் கடமையைப் பூரணமாக இந்திய முஸ்லிம் சமுதாயம் பின்பற்றினால், நம் சமுதாயத்தில் வறுமை, வறுமையின் காரணமாக கல்வி கற்க இயலாமை போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். மேலும் அரசின் உதவிகள் கூட முஸ்லிம்களை அடைவது மிகவும் சிரமமாக உள்ளது. இந்திய அரசில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் பொழுது, வயிற்றுப் பாட்டுக்கே வழியில்லாதவர்கள் எப்படி, லஞ்சத்தைத் தேடிப்பிடித்துக் கொடுத்து, அரசின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், அரசின் உதவிகள் யாவும் ஆட்சியிலிருக்கும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களைச் சென்றே அடைகின்றன. இந்த நிலையிலும் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்டு விடுகின்றார்கள்.


முஸ்லிம்களின் பக்கம் அரசின் முகம் திரும்புவது எப்பொழுதென்றால், தேர்தல் சமயங்களில் மட்டுமே என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. வேலையின்மை இன்றைக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து விட்டு, வேலைக்காகக் காத்திருப்போர் பட்டியல் அனுதினமும் நீண்டு கொண்டே வருகின்றது. எல்லா அரசுகளும் வேலைவாய்ப்பை முன்வைத்தே ஆட்சிக்கு வருகின்றன.


ஆனால் சாதித்தது என்னவோ குறைவு தான். இதில் இந்திய சமூகத்தில் 20 சதவீதமாக அங்கம் வகிக்கும் இந்திய முஸ்லிம் சமூகம், அரசின் பாரபடசக் கொள்கையின் காரணமாக, தன்னுடைய சதவீதத்திற்கும் குறைவாகவே வேலை வாய்ப்பைப் பெற்று வருகின்றது. இன்றைக்கு இவ்வாறு கஷ்டப்பட்டு படித்து முடித்து வேலைவாய்ப்புப் பெற்ற முஸ்லிம்கள் மொத்த இந்தியாவில் 3 சதவீதம் பேர் தான். இன்னும் முஸ்லிம்கள் நம்பத்தாகதவர்கள் என்று கூறி, இந்தியாவின் மிக முக்கிய அரசு அமைப்புகளான உளவுத்துறை, பாதுகாப்புத் துறை, கணக்குத் தணிக்கை அலுவலகம் போன்றவற்றில் முஸ்லிம்களின் சதவீதம் பூஜ்யமாக இருந்து கொண்டிருக்கின்றது.


தனியார் நிறுவனங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இன்னும் மோசமான நிலையில் உள்ளது. அதாவது ஒரு சதவீத பிரதிநிதித்துவம் தான் உள்ளது. மேலும் இன்றைக்கு மார்க்கத்தைத் தொலைத்து விட்டு வருபவர்களுக்குத் தான் அரசின் கருணைப் பார்வை கிடைக்கின்றது. அவர்கள் தான் அரசுப் பணியாற்ற முடியும் என்ற நிலைதான் உள்ளது.


இந்த வரிசையில் இந்தியா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இன்று வரை முஹம்மது காஸிம் சாக்ளா, ஹிதாயத்துல்லா, ஜாஃபர் ஷரீஃப், ஆரிப் முஹம்மது கான், சிக்கந்தர் பகத், ஃபாத்திமா பீவி, அபுல் கலாம் போன்றவர்கள் தங்களைத் தேசிய முஸ்லிம்களாகக் காட்டிக் கொண்டதன் விளைவு தான், அவர்கள் இவ்வளவு பெரிய பொறுப்புக்களை பெற்றுக் கொள்ள முடிந்தது.


அரசின் பாரபட்சம் அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 29 சிறுபான்மையினர் (முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், முதலானோர்) உரிமைகள், நல்வாழ்வு இவற்றிற்குப் பாதுகாப்பு வழங்குவதைப் பற்றிப் பேசுகின்றது. இந்தப் பிரிவு கலாச்சாரம், கல்வி உரிமை எனத் தொடங்கியது. அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 30 சிறுபான்மையினர் தங்களுக்கென கல்வி நிறுவனங்களை நிறுவி அவற்றை நிர்வகிக்கும் உரிமைகளைப் பற்றிப் பேசுகின்றது. இந்த உரிமையைப் பறிக்கும் வழக்குகள், முறையீடுகள், தலையீடுகள் ஆகியவை 1969 ஆண்டு முதலே ஆரம்பமாகி விட்டன.


இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த இந்தியாவில் முஸ்லிம்கள் பூரண இடஒதுக்கீட்டை அனுபவித்து வந்தார்கள். ஆனால் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்தார். அப்பொழுது சில வாக்குறுதிகளையும் அளித்தார்கள். சிறுபான்மை மக்கள் தாங்கள் நசுக்கப்படுகின்றோம் என்ற அஞ்ச வேண்டாம் என்றார்கள். எதைக் குறித்து முஸ்லிம்கள் அன்றைக்கு அச்சம் தெரிவித்தார்களோ, அந்த அச்சம் இன்று வரை தொடர்கின்றது. ஒதுக்கீட்டைக் கைவைத்தன் காரணமாக, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்கள் இன்று வரை பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.


கடந்த 2002 மே மாதம் 01 ந் தேதியன்று நடந்த வழக்கில் சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் நிறுவி நடத்துவதற்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கிய உரிமை 29(1) ஐக் கை வைக்கும் அரசின் அற்ப குணம் வெளிப்பட்டது. இதில் அரசு தரப்பில் வாதிடிய சாலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வே, கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிப்பதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை முழுமையானதும் அல்ல, இறுதியானதும் கிடையாது, இது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று வாதிட்டார்.


இதன் மூலம், சிறுபான்மைக் கல்வி நிலையங்கள் சுதந்திரமாக இயங்க இயலாமல் போனது. காரணம், இனி சிறுபான்மையினரின் கல்வி நிலையங்களில் தங்களது மத, இன, மொழி அடையாளங்களைப் பாதுகாக்கும் பாடத்திட்டங்களை தங்கள் இஷ்டம் போல் தங்களது இனத்துக்கோ, மொழியினருக்கோ போதிக்க முடியாது. அதே போல் தாங்கள் விரும்பிய அளவு தங்களது இனத்தவர்களை மாணவர்களாகவோ அல்லது போதிக்கும் ஆசிரியர்களாகவோ அல்லது அலுவலர்களாகவோ சேர்க்க இயலாது.


இந்த அடிப்படையில் இப்பொழுது, சிறுபான்மைக் கல்வி நிலையங்களில் 50 சதவீதம் மற்ற வகுப்பினரான பெரும்பான்மை மக்களையும் இணைத்தே கல்வி நிலையங்களை நடத்த வேண்டும் என்ற நிலை உள்ளது. இதன் மூலம் அரசின் ஒதுக்கல் போக்கு காரணமாக, தங்களது பணத்தைச் செலவழித்து தங்களது குழந்தைகளின் வருங்காலத்தை முன்னேற்ற முயன்ற சிறுபான்மையினர்கள், இப்பொழுது தங்களது செலவில் அடுத்த மக்களுக்கும் தாங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பங்கீடு கொடுக்க வேண்டியுள்ளது. இது தான் வாங்கிய நிலத்தில் அடுத்த வீட்டுக் காரனுக்கும் பங்குண்டு என்பது போல இருக்கின்றது. மேலும், பாடத்திட்டங்களும் அரசின் பாடத்திட்டமே இதில் அமுல் படுத்தப்படுவதாலும், இதன் மூலம் இன்னும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் தங்களது மதக்கல்வியை இங்கு போதிப்பது சாத்தியமற்றதாகவும் ஆக்கப்படுகின்றது. நமது சொந்த செலவிலேயே இறைமறுப்புக் கல்வியைப் பயிற்றுவிக்க வேண்டிய அவலம்.



இன்னும் முஸ்லிம் கல்வி நிறுவனங்களிலேயே பெரும்பான்மையான ஏழை முஸ்லிம்கள் கற்க முடியா அவலம் இன்றைக்கு நாடு முழுவதும் எதிரொலிக்கின்றது. இன்னும் கல்வி நிலையங்களில் அரசின் தலையீட்டின் மூலம், உ.பி. போன்ற மாநிலங்களில் காலை இறைவணக்கத்தில் சரஸ்வதி வந்தனம் பாட வேண்டும் என்ற எழுதாத சட்டம் பின்பற்றப்படுகின்றது. அதனைப் பின்பற்றாத கல்வி நிலையங்கள் அரசின் கொடூரப் பார்வைக்கு இலக்காகின்றன.



அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) போன்ற மார்க்க அறிஞர்கள், இவ்வாறு சரஸ்வதி வந்தனம் பாடப்படும் கல்வி நிலையங்களில் இருந்து தங்களது பிள்ளைகளை வெளியேற்றி விடுமாறு முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமாக உள்ளது. கல்வியில் பின்தங்கியிருப்பதும், அதன் விளைவுகளும் இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்தில் இறைவனின் கருணையால் ஏகப்பட்ட முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் மிகப் பழமை வாய்ந்த கல்வி நிறுவனங்கள் பல உள்ளன. சென்னை நியூகாலேஜ், மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரி, திருச்சி ஜமால் முஹம்மது, உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கவூதிய்யா கல்லூரி, திருநெல்வேலி, அதிராம பட்டிணம், வேலூர், வாணியம்பாடி, கீழக்கரை சதக் கல்வி நிறுவனங்கள், வண்டலூர் கிரசெண்ட் (இங்கு ஐஏஎஸ் சிறப்புப் பயிற்சி கூட உண்டு) என்று மிகப் பெரும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இருந்தும் இவை தங்களுக்குள் ஒரு கூட்டமைப்புடன் செயல்பட்டது கிடையாது.


இன்றைக்கு அரசின் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக விழித்தெழுந்துள்ள முஸ்லிம் சிறுபான்மை கல்வி நிலையங்கள், ஓமியாட் (ழுஆஐநுயுவு) என்ற பெயரில் ஒரு அமைப்பைத் துவங்கி, அதன் மூலம் தங்களது உரிமைகளைப் பாதுகாக்க முனைந்துள்ளது வரவேற்கத்தக்கது.


இந்த அமைப்பு சென்னை வண்டலூர் கிரசெண்ட் பள்ளியினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றது. இன்றைக்கு இந்துத்துவாக்கள் தேசம் முழுவதும் 6000 க்கும் அதிகமான பள்ளிகளை நடத்தி வருகின்றார்கள். இவற்றில் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை உருவாக்கி வருகின்றார்கள். இதில் அவர்களது நோக்கம் தெரிகின்றது. ஆனால் நமது கல்லூரிகளில், பள்ளிகளில், ஆரம்பப் பாடசாலைகளில் எந்தளவு நமது கல்விக்கு முக்கியத்தும் அளிக்கின்றோம் என்பதை பட்டியலிட்டால் கண்ணீர் தான் மிஞ்சும்.


ஆனால் ஆர்எஸ்எஸ் ஏபிவிபி (அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்) என்ற மாணவர் பிரிவை தேசம் முழுவதும் நடத்தி அதன் மூலம் தனது கொள்கையுடன், பொதுக் கல்வியில் ஊக்கமும் அளித்து வருகின்றது. ஆனால் நம்முடைய இயக்கங்கள் முழுமையான மார்க்க கல்விக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிப்பவையாக உள்ளன. இந்தக் குறைபாடு களையப்பட்டு, மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியையும், அதனுடன் பொதுக்கல்வியில் ஆர்வத்தையும் ஊட்ட வேண்டும். இன்னும் சில அமைப்புகள் முஸ்லிம்களிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், அதன் தாக்கம் பரந்த அளவில் முஸ்லிம்களிடம் ஏற்படவில்லை என்பது வருத்தத்தக்கது.


தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத், இந்திய ஜமாதே இஸ்லாமி, தமுமுக மற்றும் மனித நீதிப் பாசறை போன்ற அமைப்புகள் முஸ்லிம்களிடையே கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினாலும், குறைந்த அளவில் தான் அது முஸ்லிம்களைச் சென்றடைகின்றது.


இன்னும் இன்றைய காலப் பொழுது, மாணவர்கள் தேர்வு எழுதி விட்டு இனி எந்த கோர்ஸ் எடுத்துப் படிப்பது என்று திணறி நிற்கின்ற காலம். அவர்களுக்கு வழிகாட்டும் விதத்தில், சமுதாய கல்வியாளர்களை ஒன்று திரட்டி, அவர்களுக்கு வழிகாட்டும் முகாம்களை ஏற்படுத்தி அவர்களுக்கு உதவுவதன் மூலம், நமது சமுதாயத்தில் சிறந்த கல்வியாளர்களை உருவாக்க இயலும். தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் இத்தகைய செயல்பாட்டை பாராட்டாமல் இருக்க முடியாது.


ஆர்.எஸ்.எஸ். 1925 ஆம் துவங்கப்பட்ட நாளிலிருந்து கிட்டத்தட்ட 78 ஆண்டுகள் இந்திய வரலாற்றை தங்களுக்கு சாதகமாகத் திருத்துவதில் தனது கடுமையான உழைப்பைக் காட்டியுள்ளது. ஆனால் அவர்கள் செய்த அந்தத் தவறை, இன்றைக்குத் தான் இந்த முஸ்லிம் சமுதாயம் அடையாளம் கண்டு, திகைத்துப் போய் செய்வதறியாது நிற்கின்றது.


காரணம், இந்திய முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியிருந்ததே காரணமாகும். தங்களுக்கு மத்தியில் அன்றாடம் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்ற அறிவற்ற நிலையில் தான் கடந்த கால மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இஸ்லாத்தின் உன்னதமான கல்வியாகிய இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வியல் நெறிகள் இருக்க, நமது பாடப்புத்தகங்களில் உமறுப் புலவரின் சீறாப் புராண பொய் புரட்டுகளைத் தான் நாம் இஸ்லாம் என இதுவரை படித்து வந்து கொண்டிருக்கின்றோம்.


அதனை மாற்றுவதற்கு இத்தனை காலமும் வாளாதிருந்து விட்டு இப்பொழுது தான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இதுவும் நமது கல்வியில் பின்னடைவைக் காட்டுகின்றது. இன்னும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு மறைக்கப்பட்டது, திப்புசுல்தான் வரலாறு, பகதூர் ஷா வரலாறு, அலி சகோதரர்கள் வரலாறு, கான் சாஹிப் வரலாறு, ஒளரங்கசீப் வரலாறு என இந்திய முஸ்லிம்களின் வரலாறு சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டு வந்த கடந்த 78 ஆண்டுகளில், இப்பொழுது தான் அந்த வரலாற்றைத் திருத்துவதற்கு நாம் முயற்சிகள் எடுத்து வருகின்றோம்.


இந்திய முஸ்லிம்களின் தியாக வரலாறுகளைத் தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளோம். இதனை வெளியில் சொல்வதற்கு நமக்கென பொதுஜன நாளிதல்களோ, ஊடகங்களோ இல்லாததால், நமது இந்த முயற்சிகள் பொதுமக்களைச் சென்றடையாமல், நமது சமூகத்திற்குள் மட்டும் தான் அந்தச் செய்திகள் சுற்றிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. நமது வரலாற்று நூல்களில்.., ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததை ஆரியர்கள் வருகை என்றும், முகலாயர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததை முகலாயர்கள் படையெடுப்பு என்றும் தானே நாம் படித்து வந்திருக்கின்றோம்.


ஆனால், கடந்த 78 ஆண்டுகளாக இந்த திருத்தப்பட்ட பொய்யான வரலாறுகளைப் படித்த மக்களுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, அவர்கள் நம் மீது எவ்வாறு நல்லெண்ணத்துடன் வாழ்வார்கள் என்பதைச் சிந்தித்தால், நமது கல்வியறிவின்மை காரணமாக நாமே நமது தலையில் மண்ணைப் போட்டுக் கொண்ட வரலாறு தெரிகிறதல்லவா? இதன் எதிரொலி எவ்வாறு உள்ளதெனில், கல்லூரி வரலாற்று மாணவர்களிடையே எடுக்கப்பட்ட ஆய்வில், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை தவறு என்று எங்களால் சொல்ல இயலவில்லை என்று கூறியுள்ளார்கள்.


அசத்தியத்தை வாழ வைப்பதற்கு அசத்தியம் அசாத்தியமான முறையில் முனைப்புடன் இருக்கும் பொழுது, சத்தியத்தை கையில் வைத்துக் கொண்டு நாம் ஏன் செத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை சமுதாயம் சிந்திக்க வேண்டும். நுழைவுத் தேர்வுகள் மூலமும் நம்முடைய சமுதாயம் ஓரங்கட்டப்படுகின்றது.


கடந்த 2003 102 தேர்வில் 1150 க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற ஒரு முஸ்லிம் மாணவி, மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் அதிகபட்ச மதிப்பெண் பெற இயலாமல், மருத்துவக் கல்வி பயிலும் அவளது கனவு கலைந்து போன சோகம் கூட நம் சமூகத்தில் நிகழ்ந்துள்ளது. காரணம்.., சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமையினால், நம் சமூகத்தில் ஒரு மருத்துவரை நாம் இழந்துள்ளோம். இது வேதனைமிக்கது.


இன்றைக்கு விதைத்தால் தானே நாளைக்கு மரமாக வளரும். எந்த முயற்சியும் இன்றி எவ்வாறு அறுவடை செய்ய இயலும். பெண்கல்வி
பெண்கள் கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டாமையும் நமது சமூகம் கல்வியில் பின்தள்ளப்பட்டிருக்கின்றது. இஸ்லாம் பெண்களுக்கு பூரண கல்வி கற்கும் உரிமை வழங்கி இருக்கின்றது.


இன்றைக்கு பெண்களுக்கு கல்வியை அளிப்பதில் கம்ப்யூட்டர்கள் அதிக சேவை புரிந்து வருகின்றன. அவை பொதுக் கல்வியையும், மார்க்கக் கல்வியையும் கற்றுத் தரும் அமைப்பாக மாறி வருகின்றன.


வீட்டில் இருந்து கொண்டே இரண்டு கல்வியையும் கற்றுக் கொள்ள முடியும். 21 ம் நூற்றாண்டில் இஸ்லாம் எதிர்கொள்ளும் சவால்களில் பெண்கல்வியும், தகவல் தொழில் நுட்பப் புரட்சியும் ஒன்று என்பதை யாரும் மறுக்க இயலாது. இன்றைக்கு பெண்களுக்கு மார்க்கக் கல்வியை அளிப்பதில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இணைய தளங்கள் முஸ்லிம் பெண்களுக்காக செயல்பட்டு வருகின்றன.


இன்றைக்கு முஸ்லிம் பெண்கள் விமானிகளாகப் பயிற்சி பெற்று விமானிகளாகவும் பவனி வந்து கொண்டிருக்கின்றார்கள். இஸ்லாம் பெண்களுக்கு பர்தாவை அணிவித்து அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது என்ற புரட்டுவாதத்தை பொய்யாக்கி உள்ளார் சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஹனாதி ஹிந்தி என்பவர்.


இவர் சவூதி அரேபியாவின் முதல் முஸ்லிம் பெண் விமான ஓட்டியாகப் பயிற்சி பெற்று, இப்பொழுது அமெரிக்கன் பைப்பர் ஆர்கர் 2000 என்ற விமானத்தை ஓட்டி வருகின்றார்.



எனவே, என்னருமைச் சமுதாயமே! கல்வியின் அவசியமும், அதில் நாம் எந்தளவு ஆர்வத்துடன் இருந்து வருகின்றோம் என்பதையும் நோக்கும் பொழுது, இரத்தக் கண்ணீர் தான் மிஞ்சுகின்றது. எனவே, போர்க்கால நடவடிக்கை போல, நம் சமூகத்தைப் பீடித்திருக்கும் இந்த நோயைக் களைய அனைத்து முஸ்லிம்களும் செயல்படத் துவங்க வேண்டும். இந்தப் பணி எந்த அமைப்புக்கும் உரித்தான பணி கிடையாது. நம் அனைவரின் மீதும் உள்ள அடிப்படைக் கடமை என்பதை உணர்ந்து, நமது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவைச் சரி செய்வதற்கு நாம் அனைவரும் முயற்சிப்போமாக!

நமது சமுதாயத்திற்கு இப்பொழு தான் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது ! நமது சமுதாயத்தை சேர்ந்த மாணவி மாவட்ட அளவில் முதலிடம் !

மாவட்ட அளவில் முஸ்லிம் மாணவ ப்ளஸ் டு தேர்வில் முதல் இடம் பிடித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமம் பகுதியை சேர்ந்த மஸ்தான் என்பவரின் மகள் கே.எம் ஆஸிகா என்ற மாணவி திருவள்ளூர் மாவட்டத்தில் ப்ளஸ்டு தேர்வில் 1178 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.

பாடம் வாரியாக மதிப்பெண்கள்: தமிழ்: 188 ஆங்கிலம்: 193 இயற்பியில்: 199 வேதியல்: 199 உயிரியல்: 199 கணிதம்: 200 நமது ஒவ்வொறு பெற்றோர்களும் தமது குழந்தைகளை இது போன்று கல்விவியில் சிறக்க வைத்தால் நாளைய நமது சமுதாயம் இன்ஷா அல்லாஹ் மிக சிறப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

No comments: